உ.பி. பிஜேபி ஆட்சியில் ஆயிரக்கணக்கில் பள்ளிகள் மூடல்!

Viduthalai
3 Min Read

உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான அரசு, மாணவர் சேர்க்கை குறைந்துபோனதால் தேவையற்ற செலவினத்தை குறைக்க22,764 பள்ளிகளை தொடர்ச்சியாக மூடிவருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரப் பிரதேச அரசுப்பள்ளிகளை மூடி விட்டு மாணவர்களை தனியார்  பள்ளிகளில் இணைப்பதாக கூறியதற்கு  கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இது தேவையற்ற வதந்தி என்றும் சாமியார் அரசு மாநில சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்தது.

ஆனால் சில நாள்களுக்கு முன்பு வெளிவந்த செய்தியில் சிறுநகரம் மற்றும் கிராமங்களில் உள்ள பள்ளிகள் குறிப்பாக துவக்கப் பள்ளிகளை மூட சாமியார் அரசு முடிவு செய்துள்ளது

அரசால் மூடப்பட விருக்கும் பள்ளிகள் முழுமையாக தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட ஏழை மானவர்கள் படிக்கும் பள்ளிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு கல்விச்சலுகை என்ற பெயரில் ரூ.300 கொடுத்து,  அவர்களை அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று படியுங்கள் என்று அரசு கூறுகிறது

கல்வித் துறையில் தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த முடிவுகள்  பார்க்கப்படுகின்றன.

2024-2025 கல்வியாண்டில், உத்தரப் பிரதேசத்தில் மாணவர் சேர்க்கை 21.83 லட்சம் மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமான சரிவாகும்.

பள்ளிகள் மூடப்படுவதால், ஏற்ெகனவே கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

‘‘ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பள்ளி, என்ற பழைய கொள்கையை புறக்கணித்து, தற்போது சேர்க்கை இல்லாத பள்ளி தேவையில்லை” என்ற அணுகுமுறையை அரசு எடுத்துள்ளதாம்.

மேலும் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இதை அரசு மேற்கொண்டு வருகிறது

இருப்பினும், இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, இந்திய தேசிய மாணவர் சங்கம்  போன்ற அமைப்புகள், இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களை, குறிப்பாக பெண் குழந்தைகளை கல்வியிலிருந்து வெளியேற்றி விடும். பாதகத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

கடந்த ஆண்டு பல பள்ளிகளை மூடி அந்தப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் இணைத்தனர்.

உத்தரப் பிரதேசம் பரேலியில் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்தாத காரணத்தால் மாணவிகளை பள்ளிக்குள் விடாமல் வெயிலில் நிற்கவைத்தனர். இதில் இரண்டு மாணவிகள் மயங்கி விழுந்தனர். இது தொடர்பாக அரசு கூறியபோது பெற்றோர்கள் முதலில் கட்டணம் செலுத்தட்டும், அரசு ஆண்டுக்கு ஒருமுறைமொத்தமாக தனியார் பள்ளிகளில் கட்டணத்தைச் செலுத்தி விடும் என்று விளக்கம் கொடுத்தது.

அன்றாடம் கூலிவேலை பார்க்கும் குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் ஒரே தடவையில் எங்கிருந்து கட்டணம் செலுத்துவார்கள் என்ற கேள்வியை சட்டப்பேரவையில் அகிலேஷ்  எழுப்பி இருந்தார். இது தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான செயல் என்று கூறி போராட்டங்களில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் ஈடுபட்டுள்ளனர்.

ஹிந்துத்துவா என்றாலே வருணாசிரமக் கண்ணோட்டம் தானே. பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் ‘பிராமணன்’ – படிக்க அவனுக்கு மட்டுமேதான் உரிமை உண்டு. சூத்திரர்கள் படிக்கக் கூடாது; மீறிப் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்பதுதானே ஹிந்துத்துவாவின் மனுதர்மக் கோட்பாடு.

காலத்தின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் அவ்வாறு  இப்பொழுதுசெய்ய முடியாது என்ற நிலையில்,  ஹிந்துத்துவா கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட பிஜேபி ஆட்சி பல்வேறு குறுக்குவழி சதித் திட்டத்தின் அடிப்படையில் புதிய கல்வி என்றும்  அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கும் அரசு தேர்வு; விஸ்வ கர்மா திட்டத்தின் பெயரில் குலக்கல்வித் திட்டம் என்பன எல்லாம், வருணாசிரமத் தன்மையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்்வதே!

அதுவும் ஹிந்துத்துவாவின் சோதனைக் கூடமாக உள்ள உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் ஒரு மடத்தின் தலைவர் என்பதால் அரசு அலுவலகக் கட்டடங்களில் எல்லாம் காவி சாயம் பூசச் செய்தவர். அந்த வகையில்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புற மாணவர்களின் கல்வியில் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள். மக்கள் விழிக்கட்டும் – மனுவாத ஆட்சியை மண் மூடிப் போகச் செய்யட்டும்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *