தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களை நெறிமுறைகளுக்கு மாறாக அராஜக முறையில் கைது செய்த- ஜனநாயக விரோத பழி வாங்கும் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து கோவையில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மட்டுமல்ல, அரசமைப்புச் சட்ட நெறிமுறை நாகரிகத்தை விரும்புகிற ஒவ்வொருவரின் உணர்வினை வெளிப்படுத்தும் ஜனநாயகக் கோட்பாட்டின் வெளிப்பாடாகும்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு, ஏதோ தி.மு.க. ஆட்சியில் அமலாக்கத் துறையால் தொடரப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குவது அரசியல் நோக்கம் கொண்டதாகும்.
பத்து ஆண்டுகளுக்குமுன் தொடரப்பட்ட வழக்கு, இப்பொழுது இறக்கை கட்டிப் பறந்து பழி வாங்கும் முறையில் கொத்துவது ஏன்? அதுவும் நள்ளிரவில் நடத்தப்பட்ட கோரமான – மூர்க்கத்தனமான செயல் இது என்று பொது நிலையில் உள்ளவர்கள் கூடக் கருதும் நிலையை ஒன்றிய அரசின் ஏவல்படையான அமலாக்கத்துறை ஏற்படுத்தி விட்டது.
இதில் அ.இ.அ.தி.மு.க. நடந்துகொள்ளும் விதம் கேலிக்குரியது – மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பும் இழி தன்மையைச் சார்ந்தது.
செந்தில்பாலாஜி ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருப்பது ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தானே! அதைக்கூட சற்றும் சிந்திக்காமல் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க. நடந்து கொள்ளலாமா?
தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்தார் என்ற வழக்கின் அடிப்படையிலா கைது செய்யப்பட்டுள்ளார்?
சென்னைத் தலைமை செயலகத்திற்குள் புகுந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் அறையில் சோதனை செய்வது என்பது – முதல் அமைச்சர் கூறியுள்ளது போன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை என்பதல்லாமல் வேறு என்னவாம்!
கோவை பொதுக் கூட்டத்தில் பேசிய மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எந்தக் கருத்தை முன் வைத்தனர்?
அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் செய்திருந்தால் சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுப்பதைத் தவறு என்று சொல்லவில்லையே!
10 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் குற்றத்தின்மீது, எந்தவித தார்மீக நெறிமுறைகளையும் பின்பற்றாமல் அமலாக்கத்துறை நடந்து கொண்ட முறையைத்தான் அழுத்தமாகக் கண்டித்துள்ளனர்.
2016 டிசம்பரில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ் அறையில், தலைமைச் செயலகத்தில் திடீர் என்று புகுந்து சோதனை செய்ததை அ.இ.அ.தி.மு.க. ஏற்றுக் கொண்டதா? அப்பொழுதுகூட அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அமலாக்கத்துறையின் அத்துமீறிய, மாநில உரிமையைக் காலில் போட்டு மிதித்த அந்த அடாவடித்தனத்தை கண்டிக்கத்தானே செய்தார்; அ.தி.மு.க. ஆட்சியில் தானே நடந்தது என்று அரசியல் ஆதாயக் கண்ணோட்டமின்றி நடந்துகொண்ட கண்ணியத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளை இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு பயன்படுத்தும் விதம் உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்து விட்டதே!
குஜராத் கலவரம் நடந்த கால கட்டத்தில் (அப்பொழுது முதல் அமைச்சர் நரேந்திர மோடியே) அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி என்ன சொன்னார்?
“எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன்?” என்று புலம்பினாரே, அந்த நிலைதானே இப்பொழுது நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பிஜேபி அரசிலும் நடந்திருக்கிறது.
கோவைப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டிய ஒரு தகவல் – மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களுக்கு மட்டுமல்ல – நாட்டு மக்களுக்கே அனேகமாக புதிய வெகு சமீபத்தில் வெளிவந்த ஒன்றாகும்.
பிஜேபி ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு அச்சுறுத்துவதற்கு, சி.பி.அய். வருமான வரித்துறை அமலாக்கத் துறைகளைப் பயன்படுத்தி வழக்குத் தொடுத்து சிறையில் தள்ளும் – இது ஒன்றிய பிஜேபி ஆட்சியின் அராஜக அணுகுமுறை என்பது குறித்து அண்மையில் வெளிவந்த “The Crooked Timber of New India” என்ற நூலில் இருந்து ஆதாரத்தை எடுத்துக்காட்டினார் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
இந்த நூலை எழுதியவர் யார் தெரியுமா? ஒன்றிய பிஜேபி அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் என்பவர்தான் என்று சொன்னபோது அதிர்ச்சி ஒரு பக்கம், ஆரவாரம் மற்றொரு பக்கம் என்று மக்கள் கடல் ஆர்த்து எழுந்தது.
எதையும் ஆதாரத்துடன் மேடையில் பேசும் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த வகையில் மேலும் ஒரு அசாதாரண அருமையான முத்திரையைப் பொறித்து ஒன்றிய பாசிச பிஜேபி அரசின் முகத்திரையைக் கிழித்தெறிந்தார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுதான் இன்றைய ஒன்றிய பிஜேபி ஆட்சியின் நிலை!