குரூப்–4 பணிக்கான தேர்வு 13.89 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை.4- தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளை நடத்துகிறது. அதாவது, குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பிரிவுகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் குரூப்-4 பணிகளுக்கான காலி இடங்களுக்கு தான் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு 7,500-க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு சுமார் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் போட்டியிட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2024) 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் போட்டிப்போட்டனர். இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் (2025) கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட குரூப்-4 பணிகளுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு காலி இடங்கள் அறிவிக்கப்படாதது தேர்வர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் 3,935 காலி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்தது. விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேற்று முன்தினம் நுழைவுச் சீட்டும்  வெளியானது. மொத்தம் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் வருகிற 12-ஆம் தேதி  நடக்கும் குரூப்-4 பணிக்கான தேர்வை எழுத இருக்கிறார்கள். அதாவது, ஒரு இடத்துக்கு 353 பேர் போட்டியிடுகிறார்கள்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *