மகளிரும் – எதிர்ப்புரட்சியும்
மனு, சூத்திரர்களைவிட மகளிரிடம் அதிக அன்பு காட்டியவர் என்று சொல்லிட முடியாது. பெண்களைப் பற்றி மிக அருவருப்பான கருத்துடன் மனு தொடங்குகிறார். அவர் கூறுகிறார்:
2:213. “(இவ்வுலகில்) ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் (பழகும்போது) அறிவாளிகள் எப்போதும் விழிப்புடனிருக் கிறார்கள்.”
2:214. “இந்த (உலகில்) முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச்செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்கு வதில் வல்லவர்கள் பெண்கள்.”
2:215. “ஒருவரது தாய், மகள், சகோதரி -எப்பெண்ணு டனும் ஒருவர் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை அறிவாளியையும் வெற்றி கொள்ளும்.’
9:14. “பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவ தில்லை, வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால் போதும் அழகாக இருப்பினும், அருவருப்பாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்.”
9:15. “ஆடவருடன் உறவுகொள்ளத் துடிக்கும் ஆசையால், ஊசலாடும் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் (இவ்வுலகில்) எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்.”
9:16. “படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து (ஒவ்வொரு) மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவர வேண்டும்.”
9:17. “(படைப்பிலேயே) மனு பெண்களுக்கு ஒதுக்கியுள்ளவை, (தமது) படுக்கை மீது ஆசை, தமது இருக்கை மீது ஆசை, நகை மீது ஆசை, கேடான விழைவுகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீய நடத்தை ஆகியவை.”
மனு பெண்களுக்கு எதிராக வகுத்துள்ள சட்டங்கள் இக்கருத்துகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. எச்சூழ்நிலையிலும், பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்பது மனுவின் கருத்து.
9:2. “இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும். உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்.”
9:3. “குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருக்க வேண்டும். பெண் எப்போதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்.”
9:5. “எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீய குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும். பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் அவர்கள் துயரத்தை வருவிப்பார்கள்.”
9:6. “எல்லா ஜாதியினருக்கும் விதிக்கப்பட்டுள்ள உயர் கடமை கருதி, பலவீனமான கணவர்கள்கூட தம் மனைவியரைக் காக்க வேண்டும்.”
4:147. “சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் அவளை தம் சொந்த வீட்டில்கூட சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது.”
5:148. ‘குழந்தைப் பருவத்தில் தந்தையின் கட்டுப்பாட்டுக்குள்ளும், இளமையில் கணவனின் காவலிலும், கணவன் இறந்தபின் மகன்களின் காவலிலும் பெண்கள் இருக்க வேண்டும். ஒரு பெண் எப்போதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது.”
5:149. ‘தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிய முயலக்கூடாது. பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். பெண்களுக்கு மணவிலக்கு உரிமை கிடையாது.”
11:45. “கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படு வதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணவிலக்கு, பிரிவு என்பதே கிடையாது.”
பல இந்துக்கள் இத்துடன் நிறுத்தி மனநிறைவு கொள்கின்றனர். மனு திருமணத்தைப் புனிதமானதாகக் கருதியதால் மணவிலக்கை மறுத்தார் என்று மண விலக்கை மறுத்த மனுவின் விதியைப் போற்றிப் புகழ்ந்து தம் மனச்சாட்சியைத் தேற்றிக்கொள்கின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. மணவிலக்குக்கு எதிரான அவர் விதி வேறொரு உள்நோக்கம் கொண்டது. ஓர் ஆணைப் பெண்ணுடன் கட்டிப்போடுவது அவர்தம் நோக்கமன்று; பெண்ணை ஆணுடன் கட்டிப் போட்டுவிட்டு ஆணைச் சுதந்திரமாக உலவவிடுவதே அவரது நோக்கமாகும்.
கணவன் மனைவியைக் கைவிடுவதை மனு தடுக்கவில்லை. மனைவியைக் கைவிட்டு விடுவதை மட்டுமன்று, கணவன் மனைவியை விற்றுவிடுவதைக்கூட மனு அனுமதிக்கிறார். ஆனால் திருமண பந்தத்திலிருந்து மனைவி விடுபடுவதைத் தடுக்கிறார்.
9:46. “விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது.”
இதன் பொருள் யாதெனில், கணவன் மனைவியை விற்று விட்டபிறகு, அவளை வாங்கியவரோ அல்லது அவளை ஆதரிப்போரோ சட்டப்படி அவளுக்கு மறு கணவனாக முடியாது. இதைவிட அரக்கத்தனம் இருக்க முடியுமா? மனு தம் சட்டத்தின் நீதி அல்லது அநீதியைப் பற்றிக் கவலைப்படவில்லை. பவுத்த ஆட்சியில் மகளிர் பெற்ற சுதந்திரத்தை அவர் பறிக்க விரும்புகிறார். தன் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது சூத்திரனை மணக்க விரும்பும் பெண்ணால் வருண தருமத்தின் அடிப்படை தகர்ந்துவிடும் என்று கூறுகிறார். இத்தகைய சுதந்திரத்தால் ஆத்திரமடைந்த மனு அதைப் பறிக்க விரும்புகிறார்.
சொத்துரிமையைப் பொறுத்தவரையில் மனு ஒரு மனைவியை அடிமையாக மாற்றுகிறார்.
மனு பெண்களுக்கு எதிராக வகுத்துள்ள சட்டங்கள் இக்கருத்துக்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. எச்சூழ்நிலையிலும், பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்பது மனுவின் கருத்து.
9:416. “மனைவி, மகன், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர். அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்கள் யாருக்குச் சொந்தமோ அவருக்கே போய்ச் சேரும்.”
ஒரு பெண் கைம்பெண்ணானால் கணவன் கூட்டுக்குடும்பத்தவன் என்றால் பராமரிப்புக்கு உரியவள்; குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடும்பமாக வாழ்ந்து வந்தால், கணவன் சொத்தில் பராமரிப்பு உரிமை உண்டு. ஆனால் சொத்தை ஆளுகிற உரிமை அவளுக்கு என்றும் கிடையாது என்கிறார் மனு.
மனு நீதிச் சட்டங்களின்படி கணவன் அவளது உடலுக்கு ஊறு செய்யும் தண்டனை விதிக்கலாம், கணவனுக்கு மனைவியை அடிக்கும் உரிமையையும் மனு வழங்கியுள்ளார்.
8:299. “மனைவி, மகன், அடிமை, மாணவன், இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்.”
மற்ற செயல்களில் பெண்னைச் சூத்திரர் நிலைக்குத் தள்ளியுள்ளார் மனு.
2:66. “பெண்களுக்குக்கூட மத வழக்கங்கள் கட்டாயம். அவற்றை ஆற்ற வேண்டும். ஆனால் வேத மந்திரங்களை ஓதாமல், அவற்றை ஆற்றுதல் வேண்டும்.”
9:18. ”வேதங்களைப் பயிலும் உரிமை பெண்களுக்கு இல்லை. ஆகவேதான் அவர்களின் மத வழக்கங்கள் வேத மந்திரங்கள் ஓதாமல் ஆற்றப்படுகின்றன. வேதங்களைப் படிக்கும் உரிமை மறுக்கப்பட்டதால் பெண்களுக்கு மத அறிவு இல்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை ஓதுதல் முதன்மையானது. பெண்கள் வேத மந்திரங்களை ஓதுவது இயலாது. ஆதலின் பெண்கள் பொய்மையைப் போலவே தூய்மையற்றவர்கள்.”
வேள்விகளில் ஆகுதி வழங்கல் பார்ப்பனியத்தின்படி மதத்தின் ஆன்மாவாக உள்ளது. மனு அவ்வுரிமையை மகளிருக்கு மறுக்கிறார். மனு பின்வருமாறு விதிக்கிறார்.
9:36. வேதங்களில் சொல்லப்பட்ட அன்றாட வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது.
9:37. அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்.
அத்தகைய வேள்வி நியமங்களை ஆற்றிடப் பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியையும் சேவைகளை யும் பெறுவதற்கு அவளுக்கு மனு தடை விதிக்கிறார்.
4:205. ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில் தரப்படும் உணவை, பார்ப்பனர் உண்ணக் கூடாது.
4:206. பெண்கள் இயற்றும் வேள்விகள் புனிதமற்றவை, கடவுளுக்கு ஏற்பற்றவை. அவற்றை பார்ப்பனர்கள் தவிர்த்தல் வேண்டும்.”
அறிவார்ந்த பணியில் பெண்கள் ஈடுபடலாகாது. சுதந்திர சிந்தனையையும் தாமாக முடிவு எடுக்கும் உரிமையையும் பெண்களுக்கு மனு மறுக்கிறார். பவுத்தம் போன்ற பிற சமயப் பிரிவுகளிலும் பெண்கள் சேருதல் கூடாது. மரணம் வரை அவ்வாறு புற சமயத்தைத் தொடர்ந்து ஆதரித்துவந்தால், இறந்தவர்களுக்கு இறைக்கும் எள்ளும் தண்ணீரும் அவளுக்குக் கிடையாது.
இறுதியாகப் பெண்களுக்கு இருக்கவேண்டிய வாழ்க்கை குறிக்கோளைப் பற்றி குறிப்பிட வேண்டும். அதை மனுவின் மொழியிலேயே சொல்வது நல்லது.
5:151. “தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ அல்லது தந்தையின் இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ அக்கணவனுக்கு வாழ்நாள் இறுதி வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். கணவன் இறந்த பிறகும் அவன் நினைவை அவமதித்தலாகாது.”
5:154. “அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தி யிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல பண்புகள் இல்லாதவனாயினும் நம்பிக்கையுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபட வேண்டும்.”
5:155. “கணவன் இல்லாமல் வேள்வியோ, நோன்போ எதையும் பெண்கள் இயற்றுதல் கூடாது. கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் மேலுலகில் உயர் பதவி கிடைக்கும்.”
இதன் பிறகு மனு பெண்களுக்குப் பரிந்துரைக்கும் இலட்சியத்தின் எலும்பும் சதையுமாக அமையும் உரைகள் வருகின்றன.
5:153. “புனித மந்திர முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன்; பருவகாலத்திலும் பருவம் அல்லாதபோதும், இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும்கூட அவ்வண்ணமே.”
– தொடரும்
அண்ணல் அம்பேத்கர்
‘இந்து மதம்: வரலாறு – ஆய்வு’ நூலிலிருந்து