சென்னை, ஜூலை 4- சைபர் குற்றப்பிரிவில் நிரந்தர வேலை வாய்ப்புகள் இருப்பதாக வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் இணையவழி குற்றப்பிரிவு, சமூக ஊடக தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான சைபர் நிபுணர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் தவறானவை. தமிழ்நாடு இணையவழி குற்றப் பிரிவு தற்போது சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் குற்றவியல் ஆய்வு, நெட்வொர்க் குற்றவியல் ஆய்வு, சைபர் சட்டம் போன்றவற்றில் சிறப்பு பெற்ற நிபுணர்களின் பட்டியலை உருவாக்கும் பணியில் உள்ளது. இந்த பட்டியல் மூலம் தேவையான போது, சைபர் குற்றவியல் விசாரணைகளுக்கு உதவ நிபுணர்களை அணுக முடியும்.
இது நிரந்தர வேலை வாய்ப்பு அல்ல. பொதுமக்கள் மற்றும் வேலை வாய்ப்பு தேடுபவர்கள் எந்தவொரு வேலைவாய்ப்பு தகவலையும் அதிகாரப்பூர்வ வழிகளில் சரிபார்க்கும் பொறுப்புடன் இருக்குமாறு இணையவழி குற்றப்பிரிவு கேட்டுக்கொள்கிறது. ஏனெனில் மோசடியான வேலை வாய்ப்பு விளம்பரங்களால் ஆபத்து கள் உள்ளன. சட்ட அமலாக்க நிறுவனங்களின் விளம்பரத்தை தவறாக பயன்படுத்தி வேலைவாய்ப்பு தேடுபவர்களை ஏமாற்றும் போலி விளம்பரங்கள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்