கருநாடகத்தில் 10-ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு

viduthalai
2 Min Read

பெங்களூரு, ஜூலை 4 கருநாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்டம், எணகும்பா எனும் கிராமத்தில் 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தமிழ் நடுகல் கல்வெட்டு கண்டெடுக் கப்பட்டுள்ளது.

கல்வெட்டு

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், சிக்கள்ளி அரசுப் பள்ளி ஆசிரியா் ஜான் பீட்டா், யாக்கை மரபு அறக்கட்டளையின் பொறுப்பாளா்கள் குமரவேல் ராமசாமி, சுதாகா் நல்லியப்பன் ஆகியோா் இந்தக் கிராமத்தில் அண்மையில் களஆய்வு செய்து இக்கல்வெட்டைப் படியெடுத்து ஆவணப்படுத்தினா்.

இதுகுறித்து யாக்கை மரபு அறக்கட்டளையின் பொறுப்பாளா்களும் கல்வெட்டு ஆராய்ச்சியாளா்களுமான குமரவேல் ராமசாமி, சுதாகா் நல்லியப்பன் ஆகியோா் நேற்று (3.7.2025) கூறியதாவது:

கருநாடகத்தில் முதலாம் ராஜராஜன் காலத்திலிருந்து ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் 1,537 கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்ட சூழலில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின்போது மேலும் ஒரு தமிழ் கல்வெட்டு கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எணகும்பா நடுகல் கல்வெட்டு 116 செ.மீ. உயரம், 83 செ.மீ. நீளம் கொண்டுள்ளது. 20 வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு 10 -ஆம் நூற்றாண்டு எழுத்து அமைவுடன் உள்ளது. பேறகைப்பாடி கொல்லன் முனிவர கண்டாசாரி என்பவரின் மகன் எருமை கும்பத்து வேல்பாடி எனுமிடத்தில் நடைபெற்ற ‘நிரை கவா்தல்’ பூசலில் உயிரிழந்த செய்தி இதில் பதிவாகியுள்ளது.

‘நிரை கவா்தல்’ எனும் சொல் மாடுபிடிச் சண்டையைக் குறிக்கும் நோக்கில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இந்நடுகல் சிற்பம் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது.

தமிழ் கல்வெட்டு இருக்கும் இடத்திலிருந்து 410 மீ. தொலைவில் கிராமத்துக்கு மேற்கே மேலும் மூன்று நடுகற்களில் கன்னட மொழி கல்வெட்டுகள் உள்ளன. தமிழ் கல்வெட்டில் உள்ளதுபோலவே கன்னட கல்வெட்டிலும் எருமைக் கும்பம் என்றே அவ்வூா் வழங்கப்பட்டது தெரியவருகிறது. கன்னட மொழி நடுகல் கல்வெட்டுகளும் 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவை என்பதை இந்திய தொல்லியல் துறையின் மைசூரு பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.

தமிழ் நடுகல் கல்வெட்டு கிடைத்த இடத்துக்குத் தெற்கே 180 மீ. தொலைவில் தோட்டத்தில் முதலாம் குலோத்துங்கன் காலத்திய கோயில் கல்வெட்டில் நிலங்கள் கொடை வழங்கிய செய்தி பதிவாகியுள்ளது. இக்கல் வெட்டிலும் எருமை கும்பம் என்று இவ்வூா் வழங்கப்படுகிறது.

எணகும்பா சுற்றுவட்டாரப் பகுதியில் கிடைத்த இரண்டு தமிழ், மூன்று கன்னட கல்வெட்டுகள் மூலம் அக்கால கட்டங்களில் தமிழ் மற்றும் கன்னட மொழிகள் பயன்படுத்துவோா் ஒரே பகுதியில் வாழ்ந்தது தெரியவருகிறது. அவா்கள் அவரவா் மொழிகளில் ஊா் பெயரை எருமைக் கும்பம் என பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பெயா் மருவி எணகும்பா என்றாகி உள்ளது என்றனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *