1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.
- கைவல்ய சாமியார்
தந்தை பெரியார் சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது அவருக்கு உற்ற தோழராக இருந்து பெரும் உதவி புரிந்தவர் கைவல்ய சாமியார். தமிழ் இலக்கிய புராண சாஸ்திரங்களில் ஆழ்ந்த புலமை கொண் டவர்.
‘குடிஅரசு’ ஏட்டில், இந்து மத புராணப் புரட்டுகளையும், விழாக்களையும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதி அவற்றின் பொய்களை அம்பலப்படுத்தினார்.
கைவல்யம் நூல்
ஜாதி ஒழிப்புக்காக போராடி, தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலராக விளங்கினார். பார்ப்பனக் கொள்கைகளை தர்க்க ரீதியாக எதிர்த்து பேசி வாதாடும் வல்லமை பெற்றவர்.
கைவல்யசாமி கேரளத்தில் கள்ளிக்கோட்டையில் 1877ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் பொன்னுசாமி. தந்தை, சகோதரர்கள் வேதங்களை கற்றவர்கள்.
பாலக்காட்டில் சின்ன வயதில் படித்தார். பிறகு தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். ஏழாம் வகுப்பு வரையே இவரது கல்வி நீடித்தது. பின்னர் மதங்களில் ஈடுபாடு ஏற்பட்டு கரூரில் மவுனசாமி மடத்தில் சேர்ந்து சமய இலக்கியங்களைக் கற்றார். மத நூல்கள் பலவற்றையும் படித்து வடநாட்டுக்கு சாமியாராக போய்விட்டு வந்தார்.
‘கைவல்யம்’ என்ற நூலைப்பற்றி மிக நுணுக்கமாகவும், நுட்பமாகவும் பேசியதால் அவரது பொன்னுசாமி என்ற பெயர் மறைந்து மக்கள் அவரை கைவல்யசாமியார் என்று அழைக்கத் தொடங்கினர். 1903ஆம் ஆண்டு ஈரோட்டில் தந்தை பெரியாரைச் சந்தித்தார். முதல் சந்திப்பே தர்க்கத்தில்தான் தொடங்கியது. ஆனாலும் இருவருக்கும் ஜாதி, மத சாஸ்திரங்களில் இருந்த கருத்து ஒற்றுமையால் நட்பு மலர்ந்தது.
இதுகுறித்து தந்தை பெரியார் கூறும்போது ‘‘கைவல்யத்துக்கும், எனக்கும் தொடக்கத்தில் தர்க்கம் தான் நடந்தது. பிறகுதான் ஒத்துக் கொள்ளும் இடங்கள் வந்தன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமண விருந்தில் பரபரப்பு
‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி’ என்ற சொலவடைக்கு உயிரோவியமாய் திகழ்ந்தவர் கைவல்யசாமி.
ஒரு முறை திருச்செங்கோடு அருகே உள்ள ஏனம்பள்ளி ஜமீன்தார் வீட்டுக்கல்யாணத்திற்கு தந்தை பெரியாருடன் கைவல்ய சாமியும் சென்று இருந்தார். அப்போது அங்கு நடந்ததை தந்தை பெரியார் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்.
‘‘ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்று இருக்கும்போது, சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது, அவன் நம்மிடம் இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்த பார்ப்பானைப் பார்த்து ‘‘என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய்’’ என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனனை ஓர் அறை செவுளில் அறைந்து ‘‘யாரடா சூத்திரன்?’’ என்று கேட்டார். அப்போது ஒரு சிறு கலகமாகிப் பிறகு, அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இன்னும் இதுமாதிரி சம்பவங்களில் நாங்கள் கலந்து இருந்ததுண்டு.
மற்றும், சாமியாரவர்கள் எப்போதும் தேர்த் திருவிழா, கோயில் செலவு, விக்கிரக பூஜை, சமுதாய வாழ்க்கையில் பல சடங்குகள் ஆகிய இவையே இந்த நாட்டுக்குப் பெரும் ஷயரோகம் போன்ற வியாதிகள் என்று சதா சொல்லி வருவார்.
பார்ப்பனியச் சடங்குகளின் புரட்டுகளைச் சிறிதும் தாட்சண்யமில்லாமல் எப்பேர்ப்பட்டவர்களுடனும் தர்க்கரீதியாய் எடுத்துச் சொல்லி கண்டித்து வருவார்.
இவ்வளவு செய்தும் இவருக்குப் பொது மக்களிடம் மதிப்பும், பக்தியும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அவர் தனக்கென்று இடுப்பு வேஷ்டியைத் தவிர, சாப்பாட்டைத் தவிர வேறு ஒரு சாதனத்தையும் விரும்பியதுமில்லை, வைத்துக் கொண்டிருந்ததுமில்லை. ஆதலால் அவரைப்பற்றி யாரும் ஒன்றும் சொல்ல முடியாமற் போயிற்று’’ என்கிறார்.
கைவல்யசாமி கட்டுரைகள்
கைவல்ய சாமியார் ‘குடிஅரசு’, ‘திராவிட நாடு’ போன்ற இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.
1926ஆம் ஆண்டு முதல் 1933ஆம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் கைவல்யசாமி ‘குடிஅரசி’ல் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்து இருக்கிறது. அதில் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 900க்கும் மேற்பட்ட பக்கங்களில் வந்து இருக்கிறது. கைவல்ய சாமியார்பற்றி பெரியார் எழுதி இருக்கிற ஒரு பக்கத்தை அந்தப் பக்கத்தில் முன்னுரையாக வெளியிட்டு உள்ளனர். அதில் அய்யா அவர்கள் சொல்கிறார்.
‘‘அவருடைய (கைவல்யசாமி) கட்டுரைகளுக்கு எல்லாம் நான் ஒரு முன்னுரை எழுத வேண்டும் என்றால் அவரைவிட நான் அறிவாளியாக இருக்க வேண்டும். ஆகையாலே நான் எழுதுவது பொருத்தமாக இருக்காது. அது மட்டுமல்லாமல் கைவல்ய சாமியாரை யாருக்குத் தான் தெரியாது. எல்லோருக்கும் தெரியும். ‘குடிஅரசு’ வாசகர்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.’’
செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்க மாநாடு நடந்தபோது, கைவல்யசாமியார் ‘குடிஅரசு’ ஏட்டில், ‘‘நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஒன்று சேர்ந்தால், ஒருமைப்பட்டுச் சிந்தையைச் செலுத்த முடிந்தால், ஒரே பாட்டைப் படித்தாரானால், ஒரே ஒரு கொள்கையை நினைக்க வல்லவர்களானால் எந்தக் காரியத்தையும் செய்து விடலாம்’’ என்று எழுதி மக்களுக்கு உணர்ச்சியூட்டி பல்லாயிரக்கணக்கான மக்களை செங்கல்பட்டுக்குப் பயணமாக வைத்தார்.
முதுமை காரணமாக கைவல்யசாமி கோபிச் செட்டிப்பாளையம் அருகில் உள்ள பங்களாபுதூரில் 1953ஆம் ஆண்டு காலமானார்.