சென்னை, ஜூலை 4- சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். மழைகாலத்தின் போது தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் தெருவில் 40 ஆண்டுகள் பழைமையான விநாயகர் கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்தக் கோவில், மாம்பலம் கால்வாயை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்ததை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், மழை காலங்களில் தண்ணீர் தடையின்றி செல்ல முடியாமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட விநாயகர் கோவில் பராமரிப்பாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தாக்கீது வழங்கினார்கள். இதையடுத்து 2.7.2025 அன்று பொக்லைன் எந்திரம் மூலம் விநாயகர் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள். மாம்பலம் கால்வாயை ஒட்டி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.