சமூகநீதி அமைப்புகள் இதற்காகக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்!

viduthalai
3 Min Read

உச்சநீதிமன்ற பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடுக்கு
வழி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் ஆணை வரவேற்கத்தக்கது!
உயர்நீதிமன்றங்களிலும் இம்முறை இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்!
எஸ்.சி., எஸ்.டி.,க்கு அளிக்கப்பட்டதைபோல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்
உச்ச, உயர்நீதிமன்றங்களிலும் அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு அவசியம் தேவை!
தமிழர் தலைவர் ஆசிரியரின் சமூகநீதிக்கான அறிக்கை

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது; இதில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வழி செய்யவேண்டும்; அதேபோல, உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும்; இதற்காக சமூகநீதி அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதி பாய வேண்டிய முக்கியமான தளங்களில் முதன்மையானது உச்சநீதிமன்றம்; அதற்கடுத்தவை உயர்நீதிமன்றங்கள்.

ஆசிரியர் அறிக்கை

நீதிமன்றங்களிலும்
இட ஒதுக்கீடு!

நாமும் (திராவிடர் கழகம், தி.மு.க. போன்ற திராவிட இயக்கம்), முற்போக்கு கட்சிகளும், அமைப்புகளும், ராகுல் காந்தியின் முக்கிய பொறுப்பில் இயங்கும் இன்றைய இந்திய தேசிய காங்கிரசும், இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் இயக்கங்களும் சமூகநீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது – சற்று காலந்தாழ்த்தியாவது – பலன் அளித்து வருகிறது!

மக்கள் பிரதிநிதிகள் இயற்றும் சட்டங்களைச்  ‘செல்லும் அல்லது செல்லாது’ என்று தீர்ப்ப ளிக்கும் மேல்நிலையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் உள்ளன!

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் முக்கியம்!

அங்கே பொறுப்பேற்கும் நீதிபதிகள் நிய மனங்களில் – ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற சமூகநீதி அடிப்படையிலும், பல நாள் பட்டினியால் வாடியவர்களான ‘பசியேப்பக்கா ரர்களுக்கு’ முன்னுரிமை, அஜீரணம் ஆகும்வரை ஏற்கெனவே விருந்தில் வயிறு முட்ட உண்டவர்களுக்கு அடுத்த வரிசை என்ற அடிப்படையிலும்தான் நியமனங்கள் அமையவேண்டும்.

தந்தை பெரியார், திராவிடர் இயக்கத்தின்  அடிநாதம் இதுவே ஆகும்!

இந்தத் தத்துவம் – டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அடிப்படை உரிமைகள் பகுதியில் ஒடுக்கப்பட்டோரை நியமனம் செய்யும்போது ‘Adequately’ என்ற சொல்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றவர்களோடு சமப்படுத்தும்வரை!

இலத்தீன் மூலச் சொல் Adequatus என்பதன் ஆங்கிலச் சொல்லான Adequate என்ற சொல்லின் பொருள் ‘Till it is equalized’ – ‘மற்றவர்களோடு சமப்படுத்தும் வகையில் அமையவேண்டும்’ என்பதுதான்.

நீதிபதிகள் நியமனங்களுக்குப் பரிந்து ரைக்கும் கொலிஜியத்தில் (Collegium) சமூகநீதி சில ஆண்டுகளுக்கு முன்தான் உச்சநீதிமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பிருந்துதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொள்கை அளவில் வெளிப்படையாகவே ஏற்கப்பட்டது. (எடுத்துக்காட்டு, ஜஸ்டிஸ் மகாதேவன் அவர்களது நியமனப் பரிந்துரை).

வரவேற்கத்தக்கது!

இப்போது தலைமை நீதிபதியாகியுள்ள ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்கள், உச்சநீதி மன்றப் பணி நியம னங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தி ருப்பதை நாட்டின் சமூகநீதிப் போராளிகளின் சார்பாக வரவேற்கிறோம்.

ஆனால், இதில், OBC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு உண்டு என்று விரிவுபடுத்தப்படுவதும் அவசியமாகும்.

மாண்பமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் இதனை உடனடியாகப் பரிசீலித்து ஆணை வழங்குவது அவசியமாகும்.

நீதிபதிகள் நியமனத்தில் இக்கொள்கையை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அது செயலுக்கும் வந்துவிட்ட பிறகு, உச்சநீதிமன்றப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோ ருக்கும் அதைத் தருவது நியாயம்தானே!

எனவே, மாண்பமை தலைமை நீதிபதி அவர்கள், பணி நியமனத் தொடர்ச்சியில் விட்டுப் போனதையும் இணைத்தால், சமூகநீதி அனைவருக்கும் கிடைத்த வரலாறு முழுமை அடையும்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு – பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தேவை!

மற்றொரு முக்கிய வேண்டுகோள் – உச்ச நீதிமன்றப் பணி நியமனங்களில் பின்பற்றப்படும் இதே நடைமுறை உயர்நீதிமன்றங்களிலும் பின்பற்றப்படல் வேண்டும்.

உயர்நீதிமன்றப் பணி நியமனங்களில் சமூகநீதி பின்பற்றப்படல் முக்கியமானதாகும். இதுவரை இருப்பதாகத் தெரியவில்லை.

சமூகநீதி அமைப்புகள், இயக்கங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து, ஓரணியில் நின்று இந்த உரிமைக்குக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்.

முதலில் ‘‘கணக்குத் திறந்தது’’போல  ஒரு புதிய அத்தியாயத்தினைத் தொடங்கிய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்களின் உத்தரவு சமூகநீதிக்கான அமைதிப் புரட்சியாகும்! அவருக்கு நமது வாழ்த்துகளும், நன்றியும்!

அனைவரும் ஒருமித்து குரல் தருவதும், அவசரம், அவசியமாகும்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
4.7.2025

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *