அருண் அசோகன்
நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அமைப்பில் மக்கள்தான் சர்வ வல்லமை படைத்தவர்கள். இந்த அடிப்படையில், மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மூலமாகத் தங்களின் அதிகாரத்தைச் செயல்படுத்து கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கூடும் அத்தகைய மன்றம்தான் நாடாளுமன்றம், அரசின் முதன்மை அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இத்தகைய நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள் அங்கீகரிக்கப் படுமா என்னும் கேள்வி நீண்ட காலமாக ஒலிக்கிறது.
ஜனநாயகம், பிரதிநிதித்துவ அமைப்புகளின் (Representative Institutions) சாராம்சத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் தொன்மையான நிர்வாக அமைப்புகளின் வேர்களிலும் நம்மால் காண முடிகிறது. எனினும், 1950 ஜனவரி 26இல்தான், முதல் முறையாக, நவீனக் கட்டமைப்புகளைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக நாடாக இந்தியத் துணைக் கண்டம் பிரகடனப் படுத்தப்பட்டது. இந்திய அரசமைப்பின்படி, ‘ஒன்றியச் சட்டமன்றம்’ (Union Legislature) தான் நாடாளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது. நாடாளுமன்றம் என்னும் புள்ளியை மய்யமாகக் கொண்டே இந்திய அரசியல் இயங்குகிறது.
இந்திய அரசமைப்பில் நாடாளுமன்றம்
மிக விரிவான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய அரசமைப்பில், நாடாளுமன்றத்தின் அமைப்பு, அதிகாரம், இயங்குமுறை, சிறப்புநிலை ஆகியவை குறித்து மிக விரிவான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. சட்டக் கூறுகள் 79 முதல் 122 வரையில் நாடாளுமன்றம் தொடர்பான அனைத்து முக்கிய அம்சங்களும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. குடியரசுத் தலைவரும் இந்திய நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம் என்று சட்டக் கூறு 79 கூறுவதிலிருந்தே நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
கால மாற்றம், சமூகச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்படும் புதிய தேவைகளை, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்; அல்லது நடை முறையில் உள்ள பழைய சட்டங்களைத் திருத்த வேண்டும். சட்டங்களை இயற்றும் (அல்லது) திருத்தும் அவசியமான பணியை நாடாளுமன்றத்திடமும், மாநிலச் சட்டமன்றங்களிடமும் இந்திய அரசமைப்பு அளித்துள்ளது. நாடாளுமன்றமும் மாநிலச் சட்ட மன்றங்களும் எந்தெந்தத் துறைகள் தொடர்பாகச் சட்டங்களை இயற்றலாம், அவற்றின் வரம்புகள் குறித்து இந்திய அரசமைப்பின் அட்டவணை 7 மிக நேர்த்தியான மூன்று (மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல்) பட்டியல்களையும் வழங்குகிறது.
சட்டங்களை இயற்றும் மன்றமாக மட்டுமே நாடாளுமன்றம் இருந்துவிடாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கொள்கை முடிவுகள், திட்டங்கள், வரவு -செலவு உள்ளிட்ட அறிக்கைகள், மக்கள் நலன் – தேச நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையான, நியாயமான, ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொள்ளும் மன்றமாக நாடாளு மன்றம் செயல்படுவதற்கான வழிவகைகளை இந்திய அரசமைப்பு உருவாக்கி அளித்திருக்கிறது.
மொழி ஒரு தடையாகலாமா?
பன்மைத்துவத்தின் புகழ்மிக்க புகலிடமாக இந்தியத் துணைக்கண்டம் திகழ்கிறது. அதன் தாக்கம் இந்திய நாடாளுமன்றத்திலும் பிரதிபலிக்கிறது; பல்வேறு மொழி பேசும் மாநிலங்களில் இருந்தும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தற்போதுள்ள நிலவரப்படி, இந்திய அரசமைப்பின் 8ஆவது அட்டவணையில் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 38 மொழிகளை அட்டவணை 8இல் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, நாடாளுமன்ற அலுவல்கள் அனைத்தும் (கடிதப் போக்குவரத்து உள்பட) இன்றளவும் இந்தி அல்லது ஆங்கில மொழியின் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
நாடாளுமன்ற மக்களவை / மாநிலங்களவையில் இந்தி அல்லது ஆங்கிலம் மூலமாகத் தங்கள் கருத்துகளைத் திறம்பட முன்வைப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் உறுப்பினர்கள், அவைத் தலைவரின் அனுமதியைப் பெற்று, அவரவர் தாய்மொழியிலேயே பேசலாம் என்று இந்திய அரசமைப்பின் கூறு 120 கூறுகிறது. இந்தப் பிரிவின்படி, இந்திய நாடாளு மன்றத்தில் மொழிப் பன்மைத்துவம் முழு அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மக்களவை உறுப்பினர்களான கே.சுப்பராயன், தொல்.திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்ட ஆளுமைகள், விவாதங்களில் தொடர்ந்து தாய் மொழியாம் தமிழ் மொழியிலேயே பேசிப் பங்கேற்று வருகிறார்கள்; மக்கள் கோரிக்கைகளைத் தமிழ் மொழியிலேயே அழுத்தந்திருத்தமாக முன்வைத்து வாதிடுகிறார்கள். இதன் மூலம், இந்தியும் ஆங்கிலமும் அறிந்திராத -தமிழ் மட்டுமே அறிந்துள்ள பெரும் பகுதி மக்கள், தங்கள் தாய்மொழியிலேயே தங்கள் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் படுவதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
தற்போதுள்ள மொழிபெயர்ப்பு ஏற்பாட்டின் உதவியால், அரசாங்கத் தரப்பினர் இந்தி அல்லது ஆங்கிலத்தின் வழியாக மக்கள் பிரதிநிதிகளின் வாதங்களையும், கோரிக்கைகளையும் புரிந்துகொண்டு பதிலுரைக்க முடிகிறது. ஆனால், அரசாங்கத் தரப்பினர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் அளிக்கும் பதில்களை இந்தியும், ஆங்கிலமும் அறிந்திராத, பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட உறுப்பினர்கள் எவ்வாறு உடனடியாகப் புரிந்துகொண்டு விவாதத்தைத் தொடர முடியும்? எவ்வாறு மக்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்த முடியும்? மக்கள் பிரதிநிதிகள், தங்கள் கடமைகளை முழு அளவில் நிறைவேற்ற மொழி ஒரு தடையாக இருந்திடக் கூடாது.
தமிழ்நாடு வழிகாட்டுகிறது..
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் அவரவர் மொழியில் கோரிக்கைகளை முன்வைத்திட வழிவகை காண வேண்டும்; கேள்வி நேரம், விவாதங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுத் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ப இந்திய அரசமைப்பின் 8.ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நிகழ்நேர மொழிபெயர்ப்புக்கான (Real-time Bi-directional Interpretation) ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; அமைச்சகங்கள், அரசாங்கத் துறைகள் ஆகியவற்றுடனான கடிதப் போக்குவரத்து அனைத்திலும் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தும் மொழியிலேயே பதிலளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2021ஆம் ஆண்டு மக்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த மூத்த உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான கே.சுப்பராயன் பேசியுள்ளார்.
பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம், மக்களவை, மாநிலங்களவைச் செயலகம் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து கடிதங்கள் மூலமாகக் கோரிக்கை களை வலியுறுத்தி வருகிறார். இந்தக் கோரிக்கையின் ஜனநாயகத் தன்மையை மத்திய அரசாங்கம் உணர வேண்டும்; மேலும், காலம் தாழ்த்தாமல் மாநில மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டி, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பணிகளை, மொழி தொடர்பான எவ்விதச் சிரமங்களும் இன்றி, மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இது போன்ற சிக்கல் நிறைந்த பிரச்சினையைத் தமிழ்நாடு சட்டப்பேரவை 70 ஆண்டுகளுக்கு முன்பே எதிர்கொண்டு முன்னுதாரணம் படைத்து வழிகாட்டி இருக்கிறது. 1952இல் சென்னை மாகாணச் சட்டப் பேரவையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். அதனால், உறுப்பினர்களின் தாய்மொழி விவாதங்களை மொழிபெயர்ப்ப தற்கு உரிய பணியாளர்களை நியமிப்பதற்கு சென்னை மாகாண அரசு ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அந்தத் தீர்மானத்தின் மீது 1952 டிசம்பர் 4இல் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா பேசியபோது:
‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தாங்கள் எடுத்துக்கொண்ட பிரதிக்ஞைக்குக் குந்தகமில்லாமல் சட்டமன்றத்தில் பணியாற்றுவதற்காக சர்க்கார் பணம் செலவழித்தால் தவறு ஆகாது. இதை ஒரு செலவு என்று கருதக் கூடாது’ என்று குறிப்பிட்டிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி மிக -எளிதாக, நேர்த்தியாக மொழிபெயர்ப்புக்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்திட இயலும்.
அந்த வகையில் மாநில உரிமைகள் நிலை நிறுத்தப்படும் பட்சத்தில், இந்தியக் கூட்டாட்சி முறை (Federalism) மேலும் வலுப்பெறும் என்பதை மத்திய அரசாங்கம் உணர வேண்டும். ஏறத்தாழ 145 கோடி மக்கள்தொகை கொண்ட உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தில், மாநில மொழிகளுக்கான உரிய அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை, 3.7.2025