சென்னையில் உள்ள பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களில் முக்கியமானவர் போற்றுதலுக்குரிய டாக்டர் கே.கே. இராமலிங்கம் அவர்கள். அவர் இன்னும் சில வாரங்களில்
90 வயதை எட்டவிருக்கிறார்.
கோவை (பழைய) மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் – கொம்பு பாளையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலையம்பாளையத்தில் பள்ளிக்கூடத்தில் படித்து கடும் உழைப்பாலும், நேர்மையான வாழ்வாலும் உயர்ந்தவர். அவர் எப்படி தனது 90 வயதினைக் கொண்டிருக்கிறார் என்று ‘பூங்காற்று’ என்ற ஒரு யூடியூப் அலைவரிசைக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் முக்கிய பகுதிகளை இங்கே தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
விடா முயற்சி, கடும் உழைப்பு, கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை முறையும், மனிதர்கள் முதுமை என்ற நிலையில் முதிர்ச்சியின் முத்திரையைப் பதித்து மகிழச் செய்யும் இந்த வயதிலும் – ‘‘உங்கள் இளமையின் ரகசியம் என்ன?’’ என்ற கேள்வி ஒரு தயார் நிலைக் கேள்வியே!
உழைப்பால் வாரா உறுதிகள் உண்டோ? இந்த வெற்றியும், மகிழ்ச்சியும் அவ்வாறே விளைந்தவை! அவரது கூற்று!!
‘‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’’ என்றார் புரட்சிக் கவிஞர். அதற்கு இவரது குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு.
எனது நினைவு : இவரது வாழ்விணையர் டாக்டர் திருமதி விமலா அவர்களுக்கும் – இவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன் சென்னை அண்ணாசாலையில் ‘ஆபட்ஸ்பரி’ மாளிகையில் திருமணம் நடந்தது. முன் இருந்த ‘ஆபட்ஸ்பரி’ மாளிகை இப்போது உருமாற்றம் பெற்றுள்ளது.
தந்தை பெரியார் அவர்கள் இவர்களது திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார். உடன் நானும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
டாக்டர் விமலா அவர்களது தாயார் திருமதி சவுந்திரா கைலாசம், தந்தையார் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டீஸ் திரு. கைலாசம் ஆவர்!
(அதை அடக்கத்தின் காரணமாக டாக்டர் கே.கே.ஆர். அவர்கள் இந்தப் பேட்டியில் கூறவில்லை என்று நினைக்கிறேன்)
தனது 90ஆம் ஆண்டிலும் தன் உழைப்பில் மகிழ்ச்சி கொள்ளும் அவருக்கு, அவரால் நல் வாழ்வு பெற்ற பல நோயாளிகள் சார்பிலும், தமிழ் கூறும் நல்லுலகம் சார்பிலும் நாம் நமது வாழ்த்து களைத் தெரிவிக்கிறோம்.
நூறாண்டைத் தாண்டி அவரும், அவரது வாழ்விணையரும் வாழ்ந்து, தங்களது அனுபவங்களையே வாழ்வியல் பாடங்களாக்கித் தருவதற்கு மக்கள் சார்பாக நன்றி கலந்த பாராட்டைத் தெரிவிக்கிறோம்.
இந்த பேட்டி ஒரு மனந்திறந்த வெளிப்படைத் தன்மை கொண்ட ஓர் அனுபவப் பாட வகுப்பும் – அந்தப் பாடத்தில் உள்ள பலவும் நமக்கு முதுமையிலும் இளமை மனப்பாங்குடன் வாழும் வெற்றியின் ரகசியம் பற்றியும் பலரும் கற்றுக் கொள்ளவே நம் ஊரில் உள்ள நம்மவர் ஒருவரையே முன் உதாரணத்திற்கு சுட்டிக் காட்டவே அதனை அப்படியே வெளியிடுகிறோம்.
இந்தக் குடும்பத்தில் ஜாதி, மதங்கள் மகிழ்ச்சிக்கு இடையூறாக இல்லை என்ற பாடத்தையும் மற்றவர் கற்க உதவும். இப்போது ஆணவக் கொலையில் ஈடுபடும் அறியாமைகளும் உணர்ந்து கொள்ள இவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் – படிப்போம், பாடம் கற்போமாக!
முதுமைக்கு எப்படி தயார் ஆனேன்?
‘பூங்காற்று’ யூடியூப் அலைவரிசைக்கு
காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்
டாக்டர் கே.கே.இராமலிங்கம் அவர்கள் அளித்த பேட்டி
டாக்டர் கே.கே.இராமலிங்கம் அவர்கள், ‘பூங்காற்று’ யூடியூப் அலைவரிசைக்கு அளித்த பேட்டி வருமாறு:
‘‘எனது பெயர் கே.கே.இராமலிங்கம். நான் பிறந்த ஆண்டு 1935 இல். இன்னும் ஒரு மாதத்தில் எனது 90 ஆவது வயதைக் கொண்டாடவிருக்கின்றேன்.
நான் பிறந்தது ஒரு விவசாயக் குடும்பத்தில், என்னுடைய அப்பா அய்ந்தாம் வகுப்பு வரையில் தான் படித்திருந்தார். என்னுடைய அம்மா படிக்க வில்லை. கடைசி காலம் வரையில், அவர்களுக்குக் கையெழுத்துக்கூடப் போடத் தெரியாது.
கொம்புப்பாளையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டரில் உள்ள மலையம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தேன். அங்கே 5 ஆம் வகுப்புவரையில்தான் படிக்க முடியும். அதற்குப் பிறகு 6 ஆம் வகுப்பு படிக்கவேண்டும் என்றால், 10 கிலோ மீட்டரில் உள்ள கொடுமுடிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும்.
என்னுடைய சகோதரர் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். என்னுடைய அப்பா, ‘‘ஒருவர் படித்தால் போதும்; ஒருவர் விவசாயத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.
ஆனால், என்னுடைய மாமா அவர்கள் என்னுடைய அப்பாவிடம், ‘‘ஒரு கண்ணில் வெண்ணையும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையுமா வைக்க முடியும்? என்னையும் படிக்க வைக்கவேண்டும்’’ என்று சொன்னார்.
ஓராண்டு கழித்து, கொடுமுடியில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்தேன். தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களில் ஓரளவுக்கு மதிப்பெண்களை நான் பெற்றிருந்ததால், அட்மிஷனில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை.
1953 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு வரையில் நான்தான் முதல் மதிப்பெண் பெற்றேன். எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்வாகிவிட்டேன் என்று தெரியும். சில நாள்கள் கழித்து, எனக்கு ஒரு கடிதம் வந்தது.
‘‘கோயம்புத்தூர் – நீலகிரி மாவட்டம் சார்பாக உங்களுக்குத் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்தப் பதக்கத்தை நான் நேரில் சென்றுகூட வாங்கவில்லை. ஆனால், அந்தப் பதக்கத்தை அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தனர்.
என்னுடைய சகோதரர் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் எனக்கு ஆலோசனை வழங்கினார், ‘‘நீ மருத்துவப் படிப்பு படி; அதுதான் உனக்கு நல்லது’’ என்று சொன்னார்.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்குச் சென்றேன். அங்கே அய்ரீஸ் ஃபாதர் இருந்தார். அவரிடம் என்னுடைய அப்ளிகேஷனைக் கொடுத்தேன். என்னுடைய மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு, ‘‘அட்மிட் ஃபர்ஸ்ட் குரூப்’’ என்று அந்த அப்ளிகேஷனில் எழுதினார்.
உடனே என்னுடைய சகோதரர், ‘‘ஃபாதர், இவனுக்கு டாக்டர் ஆகவேண்டும் என்றுதான் ஆசை. ஆகவே, இவனுக்கு செகண்ட் குருப் கொடுங்கள்’’ என்றார்.
‘‘ஏன்? ஏன்? முதல் குரூப் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று அய்ரீஸ் ஃபாதர் சொன்னார்.
‘‘இல்லை இல்லை, செகண்ட் குரூப்தான் வேண்டும்’’ என்று என்னுடைய சகோதரர் சொன்னவுடன், செகண்ட் குரூப்பில் சேர அனுமதி கொடுத்து விட்டார்.
நானும் செகண்ட் குரூப்பில் சேர்ந்தேன். என்னு டைய வகுப்பில், 6 பேர் சிறீலங்காவில் இருந்து வந்தவர்கள் அவர்கள். நன்றாகப் படிப்பார்கள்.
1953-1955 இல், திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில், என்னுடைய ரோல் நெம்பர், 2414.
எல்லா தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்றேன். ஒரு தேர்வு முடிந்து, விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்குச் செல்லும்போது, கல்லூரியில் உள்ள பாதர், ஒரு பெரிய லெட்ஜரைக் கொண்டு வந்து காண்பித்துவிட்டு, படிப்பார்.
எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண்தான். அப்போது எனக்கு கெமிஸ்ட்ரி டீச்சராக டாக்டர் சேஷா அய்யங்கார் என்பவர் இருந்தார். அவர் ஒரு தேர்வு வைத்தார். அந்தத் தேர்வு 50 மதிப்பெண்களுக்குரியது. நான் 49.5 மதிப்பெண் பெற்றேன்.
பிறகு இன்டர்மீடியட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு, பரிந்துரையைத் தேடினேன். ஆனால், உன்னுடைய மதிப்பெண்களுக்கு தானாகவே மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்துவிடும் என்று சொன்னார்கள். ஆகவே, பரிந்துரை எதுவும் தேவையில்லை என்று சொன்னார்கள்.
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான பட்டியலை வெளியிட்டார்கள். அப்போதெல் லாம் மாவட்டத்தில் எத்தனை பேர் தேர்வாகியிருக் கிறார்கள் என்ற பட்டியலை வெளியிடுவார்கள். அதன்படி, நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் என்னுடைய பெயர் முதலாவதாக இருந்தது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான அனுமதி எனக்குக் கிடைத்தது.
மருத்துவப் படிப்புதான் என்னுடைய இலக்கு. அது கிடைத்தவுடன், நான் மனத்திருப்தி அடைந்தேன். அதற்குப் பிறகு அதிக ஈடுபாட்டுடன் படிக்கவில்லை. ஆனாலும், எல்லா தேர்வுகளிலும் தேர்வானேன். 1955 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த நான், 1959 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். தேர்வில் தேர்வானேன்.
1968 ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. என்னுடைய துணைவியார் பெயர் டாக்டர் விமலா. அடுத்த ஆண்டு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ரவி என்று பெயர் வைத்தோம். அவரும் மருத்துவம் படித்தவர்.
நான்காண்டு கழித்து எனக்கு ஒரு மகள் பிறந்தாள். அவளுடைய பெயர் ஷோபா.
என்னுடைய மகன் ரவி, காதலித்து திருமணம் செய்துகொண்டார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் எம்.பி.ஏ., படித்தவர். அவர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்.
என்னுடைய மகள், வடுவாதுறையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவருடைய முதல் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.
என்னுடைய மகள் ஷோபாவுக்கு இரண்டு மகன்கள். என்னுடைய மகன் ரவிக்கு ஒரு மகன். ஆக மொத்தம் எனக்கு மூன்று பேரக் குழந்தைகள். ஷோபா, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
என்னுடைய துணைவியார் டாக்டர் விமலா, என்னுடைய பணிகளுக்கும் உதவியாக இருந்தார்.
1972 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டுவரை அரசு மருத்துவமனையில் பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பிறகும், பணியாற்றினேன்.
வருகின்ற ஜூலை 13 ஆம் தேதி எனக்கு 90 வயது- அதைக் கொண்டாடவிருக்கின்றேன். 80 ஆவது பிறந்த நாளை, என்னுடைய கிராமத்தில் கொண்டாடினேன். அந்த பிறந்த நாள் விழாவிற்கு அமைச்சர்கள் உள்பட 800 பேர் வந்திருந்தார்கள்.
90 வயதிலும் நான் இப்போதும் மருத்துவப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். மாலை 5 மணியிலிருந்து இரவு 7.30 மணிவரை.
நிறைய நோயாளிகள் என்னிடம், பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள்தான் ஒரு காதில் அறுவைச் சிகிச்சை செய்தீர்கள். இன்னொரு காதையும் நீங்கள்தான் அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்பார்கள்.
அவர்களிடம் நான், மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு, ‘‘இந்த வயதில் நான் அறுவைச் சிகிச்சை செய்வது நல்லது இல்லை. என்னுடைய மகன் செய்வார்’’ என்று சொல்வேன்.
நான், என்னுடைய உடலை நன்றாகக் கவனித்துக் கொள்வேன். முன்பெல்லாம் உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தமாட்டேன். ஆனால், இப்போது நீரிழிவு இருப்பதால், உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றேன். கார்போ ஹைட்ரேட்டைத் தவிர்த்துவிடுகிறேன். நாள்தோறும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். வீட்டிற்கு மேலேயே ஜிம் இருக்கின்றது.
கீரை, நட்ஸ், பாதாம், பிஸ்தா போன்றவற்றைச் சாப்பிடுவேன். அவகாடோவை நாள்தோறும் சாப்பிடுவேன். காலையில் ஒரு முட்டை; மாலையில் ஒரு முட்டை சாப்பிடுவேன்.
எனக்கு 90 வயது ஆனாலும்கூட, என்னைப் பார்க்கின்றவர்கள் உங்களுக்கு 55 அல்லது 60 வயது இருக்குமா? என்று கேட்பார்கள்.
அதோடு என்னுடைய பழைய பேஷண்ட் எல்லாம் என்னைப் பார்த்து, ‘‘நீங்கள் 90 வயதானா லும், நன்றாக இருக்கிறீர்கள்’’ என்று சொல்வார்கள்.
நான் மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உடல் அளவிலும் நன்றாக இருக்கிறேன்.
என்னுடைய மகனிடம் நான் ஆலோசித்தேன். ‘‘நம்முடைய கிளீனிக்கு வரும் நோயாளிகளிடம், அவர்கள் அதிக எடையோடு இருந்தால், அவர்க ளுடைய உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, ‘எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்று தெரியும் அல்லவா? உங்கள் வயதிற்கேற்ற, உயரத்திற்கேற்ற எடைக்கு மேல் இருந்தால், 5 சதவிகிதம் பீஸ் அதிகமாக்கலாமா’ என்று கேட்கலாமா?’’ என்று எனது மகனிடம் கேட்டுள்ளேன்.
உடல் எடையை எப்படிக் குறைப்பது? என்று நிறைய பேர் கேட்பார்கள். உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லை. தைராய்டு பிரச்சினை – என்னுடைய அப்பா – அம்மா குண்டாக இருந்தார்கள் என்று சொல்வார்கள்.
இதெல்லாம் தேவையில்லாத காரணங்கள்தான். உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்றால், அதற்குரிய முயற்சிகளைச் செய்யவேண்டும்.
இன்றைக்குக்கூட செய்தித்தாளைப் பார்த்தேன். நடிகர் அஜித், குறைந்த காலகட்டத்தில் எத்தனையோ கிலோ எடை குறைத்திருக்கின்றார் என்று.
அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம் இருக்கவேண்டும். தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
வெளிப்படையாக ஒன்றைச் சொல்கிறேன். முன்பெல்லாம் எப்போதாவது நான் குடிப்பேன். லண்டனில் பணியாற்றும்போது, ஒரு பெரிய பாட்டில் பீர் குடித்தேன். அதற்குப் பிறகு எப்போதாவது குடிப்பேன். மருத்துவப் படிப்பு படிக்கும்போது சிகரெட் பிடிப்பேன். அவற்றையெல்லாம் நிறுத்தி எட்டாண்டுகள் ஆகின்றன.
உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். நன்றாகத் தூங்குகிறேன்.’’
பலர் முதுமையை சுமக்கிறார்கள் இவர் போன்ற தனித்தகையானவர்களோ முதுமையை சுவைக்கிறார்கள்! – இல்லையா?