குடிபோதையும் குருக்கள்மாரும்!

viduthalai
4 Min Read

சிறீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அர்ச்சகப் பார்ப்பனர்கள் குடித்து விட்டுக் கும்மாளம் போட்ட அருவருப்பான காணொலிக் காட்சி நாட்டையே நாற வைத்து விட்டது.

எதற்கெடுத்தாலும் ஆகமம், புனிதம், சுத்தபத்தம் பேசும் பார்ப்பனர்கள் இப்பொழுது ‘‘உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்திபோல’’ அல்லாடுகின்றனர்.

அதையும் மீறி உண்மையை மாற்றி, தமிழ்நாடு அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற, தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத  அர்ச்சகர்கள்தான்  சிறீவில்லிபுத்தூரில் குடித்துக் கும்மாளம் போட்டவர்கள் என்று தங்கள் வசம் உள்ள ஊடகங்கள்மூலமும், காணொலி மூலமும் பரப்போ பரப்பு என்று பரப்புகின்றனர் என்றால் இதுதான் பார்ப்பனர்களுக்கே உரித்தான – தனித் தன்மையான அபாண்டமும், பழி தூற்றும் போக்கிரித்தனமும் ஆகும்.

கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் (30). கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள வினோத், கணேசன் ஆகியோர் கோமதி விநாயகம் குருக்கள் வீட்டில் மது அருந்திவிட்டு, ஆபாசமாக ஆடும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. கோயிலுக்கு வரும்   சில பெண்களிடம் திருநீறை மொத்தமாக அவர்களது முகத்தில்  வீசி அத்துமீறி நடந்து கொள்வது போன்ற காட்சிப் பதிவும் சமூக  வலைதளங்களில் வைரலாகி பக்தர்கள் மத்தியில்  மட்டுமல்ல, பொது மக்களும் முகம்  சுளிக்கும் வகையில் கேவலக்காட்சி அருவருப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர் குருக்கள் கோமதிநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிறீவில்லிபுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இப்பிரச்சினையை மடைமாற்றும் விதமாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘ஆர்கனைசர்’ பத்திரிகை மற்றும் இந்து முன்னணி, பாஜக, சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள் சமூக வலைதளங்களில், குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட அர்ச்சகர்கள், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் திட்டத்தில், சமூக நீதிப் பேசும் திமுக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற பொய்யை, பொய்யைத் தவிர வேறு ஏதுமில்லாத ஒன்றை திட்டமிட்டுப் பரப்பி   வருகின்றனர்.

உண்மையில், சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், ஆர்.எஸ்.எஸ். –
பா.ஜ.க. – இந்து முன்னணி வலியுறுத்தும், பாரம்பரிய வழக்கப்படி, தொழில் செய்யும் குருக்கள் சமூகத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களே! அவர்களது பெயர் கோமதிநாயகம், கணேசன் மற்றும் வினோத்.  ஆபாசமாக எல்லை மீறி குத்தாட்டம் போடும் மூன்று அர்ச்சகர்களும் தமிழ்நாடு அரசு நடத்தி வரும், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்தவர்களல்ல.

மூவரும் படித்தது, பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க அனுமதி உள்ள, தூத்துக்குடி சிறீஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலயத்தில்தான். இந்த வேத பாடசாலை நிறுவனர் ராஜீ பட்டர் என்பவர் ஆவார். பார்ப்பன வேத பாடசாலையின் தலைமை ஆசிரியர் செல்வம் பட்டர் என்ற கல்யாணசுந்தர  பட்டர். இந்த செல்வம் பட்டர் தூத்துக்குடி சிவன் கோயில் என்று அழைக்கப்படும் சிறீ பாகம்பரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர்  கோயில் தலைமை அர்ச்சகராக உள்ளார். இந்த செல்வம் பட்டர்  பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் நடத்தும் சிறீ கற்பக விநாயகர் வித்யாலயத்தில் படித்தவர்.

உண்மை இவ்வாறிருக்க, அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆகக் கூடாதெனப் பிரச்சாரம் செய்யும், பாஜக, ஆர் எஸ் எஸ். இந்து முன்னணியினர், தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள், ஆகமம், வேத மந்திரங்கள் கற்று, முறையாக தீட்சை பெற்றிருந்தாலும் அர்ச்சகராக ஆகக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் திட்டமிட்டு பொய் செய்தியை, வதந்தியை, தமிழ்நாடு அரசின் மீதும், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியின் மீதும் அவதூறுப் பரப்பி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மச்சேந்திர நாதன் கோயிலில் அர்ச்சகனாக இருந்த தேவநாதன் என்ற பார்ப்பான்; கோயில்களுக்குச் சாமி கும்பிட வரும் பெண்களை ஏமாற்றி, மயக்கி அந்தக் கோயில் கர்ப்பக் கிரகத்தையே பள்ளி அறையாக மாற்றிடவில்லையா?

இதே சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பத்ரிநாத் என்ற அர்ச்சகப் பார்ப்பான், தேவநாதன் செய்த அதே வேலையை கடவுள் சாட்சியோடு செய்யவில்லையா?

கோயில்களில் தேவதாசிகள் என்ற முறை எதைக் காட்டுகிறது? தந்தை பெரியாரின் பிரச்சாரத்தாலும் நீதிக்கட்சி ஆட்சியாலும், டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியின் முயற்சியாலும் அல்லவா அது சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது.

‘‘கோயில்கள் விபச்சார விடுதி’’ என்று ஆன்மிகவாதியான காந்தியாரே ஆசூயைப்பட்ட அளவுக்குத்தானே நிலைமை இருக்கிறது.

1960ஆம் ஆண்டு சர். சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களின் நிலவரங்களைக் கண்டறிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அவ்வாணை யம் 1962இல் அதற்கான அறிக்கையைத் தாக்கல் செய்தது.

சர். சி.பி. ராமசாமி அய்யர் நாத்திகவாதியல்ல – பச்சையான பார்ப்பனர் என்பது நாடறிந்த உண்மையே!

கோயில்கள் எவ்வளவுக் கேவலமாகப் பராமரிக்கப்படுகின்றன, அர்ச்சகர், அர்ச்சக குருக்களின் நடவடிக்கைகள் எவ்வளவுத் தரம் தாழ்ந்த நிலையில் உள்ளன என்பதை விலாவாரியாக ஆதாரங்களுடன் விளக்கியதே அந்த ஆணையம்.

அமைதியைப் பெறுவதற்கும், அல்லாடும் மனதை ஒரு முகப்படுத்துவதற்காகவும்தான் கோயிலுக்குச் செல்லுவதாக சாங்கோபாங்கமாக மெல்லியக் குரலில், பரவசமாகப் பாடுபவர் களையும், உபன்யாசம்  செய்பவர்களையும், வியாக்கியானம் செய்யும் வித்தகர்களையும் அறிவோம்.

ஆனால், கோயில்களுக்குள் வடிக்கப்பட்டுள்ள ஆபாச சிற்பங்களையும் கோபுரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளவற்றையும் பார்த்தால் கண்கள் கூசும் – அருவருப்பால் தலைகள் குனியும்.

உண்மைகள் இவ்வாறு இருக்க, கோயில்கள் ‘புனித’மானவை என்பதும், கோயில் கர்ப்பக கிரகத்தில் அர்ச்சனை செய்ய தகுதிக்குரியவர்கள்  பிறப்பால் பார்ப்பனர்களாக உள்ளவர்கள் – முறைப்படி ஆகம சமாச்சாரங்களைக் கரைத்துக் குடித்துப் ‘புனித’த்துடன் நடந்து கொள்பவர்கள்தான் என்பதெல்லாம் எத்தகைய பித்தலாட்டம்!

கோயில் சிலைகள் திருடு போவதற்கும், அர்ச்சகர்களுக்கும் தொடர்பு உண்டு. எத்தனை எத்தனை வழக்குகளில் சந்தி சிரித்தன!

இந்த நிலையில் பார்ப்பனரல்லாதார் இந்துவாக இருந்தாலும், முறைப்படி வேதாகமப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவராக இருந்தாலும் அவர்கள் அர்ச்சகராக முடியாது என்று கூறுவதும், உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடுவதும், நீதிபதிகளும் அதற்குத் தலையாட்டுவதும் – நாகரிக உலகில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்பத்தான் செய்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *