மின் தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு

Viduthalai

இந்தூர், ஜூலை 3- நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மத்தியபிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் வழக்கு

இளநிலை மருத்துவ படிப்பு களுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நடந்தது. லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். அதன்தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன.

இதற்கிடையே, மத்தியப்பிரதேச மாநிலம்  இந்தூர், உஜ்ஜயின் உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தேர்வு மய்யங்களில் நீட் தேர்வு எழுதிய சில மாணவர்கள், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின்  இந்தூர் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

தேர்வின்போது, மோசமான வானிலை காரணமாக மின்தடை ஏற்பட்டதாகவும், அதனால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், எனவே, தங்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரி இருந்தனர்.

தேர்வு முகமை வாதம்

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பெரும்பாலான தேர்வு மய்யங்களில் மின்வினியோகத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக ஒரு கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுபோத் அபயசங்கர், கடந்த மாதம் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தவறு இல்லை

இந்நிலையில், இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தங்கள் மீது எந்த தவறும் இல்லாமலேயே மின்தடை காரணமாக, இந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தேர்வு மய்யங்களில் அந்த நிலை இல்லை. ஏன், அதே தேர்வு மய்யத்தில் கூட இயற்கை வெளிச்சம் படும் இடங்களில் அமர்ந்து இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை

அரசியல் சாசனத்தின் 14ஆவது பிரிவு, அனைத்து குடி மக்களுக்கும் சமத்துவத்தை யும், நீதியையும் உறுதி செய்கிறது.

ஆகவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கூடிய விரைவில் மறுதேர்வு நடத்தி, முடிவுகளை அறிவிக்க வேண்டும். மறுதேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களைத்தான் ‘ரேங்க்’ தயாரிக்க பரிசீலிக்க வேண்டும்.

சில மாணவர்கள், தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்ட ஜூன் 3ஆம் தேதிக்கு பிறகு மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் இந்த உத்தரவால் எந்த ஆதாயமும் பெற முடியாது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

இந்தூர், உஜ்ஜயின் ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மய்யங்களில் நீட் தேர்வு எழுதிய 75 மாணவர்கள், இந்த உத்தரவால் பலன் அடைவார்கள் என்று மனுதாரர்களின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *