தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிருப்தி அரசியல்வாதிகள் பிற கட்சிகளுக்கு மாறுவது தொடங்கியுள்ளது. திமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் முன்னிலையில் நெல்லை தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் துணைத் தலைவர் மகேஸ் வில்சன் திமுகவில் இணைந்தார். இதேபோல் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 50 பேர் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர்.
மராத்தி தெரியாதா? சரமாரி தாக்குதல்..
‘ஏன் நீ மராத்தியில் பேசவில்லை?’ என மும்பையில் உள்ள ஒரு சாலையோரக் கடை உரிமையாளரிடம் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் (MNS) சேர்ந்த 3 பேர் கேட்கின்றனர். அதற்கு அவர், இங்கு அனைத்து மொழிகளும் பேசப்படுவதாகக் கூறுகிறார். இதனால் அவர்கள், உரிமையாளரை சரமாரியாக அறைகின்றனர். சமீபத்தில், அம்மாநில தொடக்கப் பள்ளிகளில் 3-ஆவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற அரசாணை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது.
500% வரி.. டிரம்ப் முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வரவுள்ள புதிய மசோதா, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க வழிவகுக்கிறது. ரஷ்யாவிடமிருந்து 70% எண்ணெய் வாங்கும் இந்தியாவும், சீனாவும் இதன் இலக்கு. இந்தியா-ரஷ்யா வர்த்தகம் $68.7 பில்லியனாக உயர்ந்த நிலையில், இந்த நடவடிக்கை பொருளாதார உறவுகளைப் பாதித்து, உலகளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வீடுகளுக்கே ரேசன் திட்டம்.. சென்னையில் அமல்!
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, ரேஷன் பொருள்களை வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டம் சென்னையில் நேற்று (2.7.2025) சோதனை ரீதியாகத் துவங்கியது. வேளச்சேரி உள்ளிட்ட 6 பகுதிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட 910 பயனாளிகளுக்கு பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. இத்திட்டம் தொடர்பாக தலைமைச் செயலர் ஆய்வு நடத்துகிறார். அதன்பின், எந்த தேதியில் இருந்து திட்டத்தை துவக்குவது என முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தலாய் லாமாவை சீனா எதிர்ப்பதற்கு என்ன காரணம்?
1959-இல் சீன ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான திபெத்தியர்களுடன் அவர் நாடு கடத்தப்பட்டு இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். சீனா அவரை பிரிவினைவாதி, கிளர்ச்சியாளர் என முத்திரை குத்துகிறது. ஆனால் தலாய் லாமா வன்முறையற்ற தன்மை, கருணை மற்றும் திபெத்தியர்கள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறார்.