சிறுகனூரில் ”பெரியார் உலகம்” மூன்றில் ஒரு பாகம் பணிகள் முடிந்து விட்டன! சென்னையில் பெரியார் திடலை வாங்கிட நிதி தந்ததுபோல், சிறுகனூர் “பெரியார் உலகத்திற்கும் நிதி திரட்டத் தயாராவீர்!
இது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 30.05.2025 அன்று கழகத் தோழர்களுக்கு விடுதலையில் வெளியிட்ட அறிக்கையின் தலைப்பு. நன்றி மறவாத தமிழர்களிடம் அந்த அறிக்கை மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. கழகத் தலைவரின் அறிக்கையை கட்டளை போல எண்ணி திராவிடர் கழகத் தோழர்களும் நிதி திரட்டி தமிழர் தலைவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் எல்லாம், பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக எடைக்கு எடை நாணயங்கள் வழங்கியும், நிதியும் வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரியார் உலகத்திற்காக நன்கொடை அளித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட, பெங்களூருவில் வசிக்கும்; பெங்களூரு குடிநீர் வழங்கல் துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற 82 வயது தி.மு.க. தோழர் கமலக்கண்ணன் அவர்களும், ஆசிரியரின் அந்த அறிக்கையை படித்திருக்கிறார். படித்த உடனேயே தாமும் பெரியார் உலகத்திற்கு நிதி அளித்து, தம்மை வாழ்க்கையில் இந்த அளவுக்கு உயரத்தில் ஏற்றி வைத்த பெரியாருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து, உடனடியாக விடுதலையில் இருக்கும் தொடர்பு எண்ணுக்கு பேசி, விசயத்தை சொல்லியிருக்கிறார். ஆசிரியர் இருக்கும் நாளை கேட்டு குறித்துக் கொண்டு, 1.7.2025 அன்று சென்னை பெரியார் திடலுக்கு தனது நண்பர்கள் ஆனந்தராஜ், நாகராஜ், அருள்மணி மற்றும் ஓட்டுநர் அனுமந்தய்யா ஆகியோருடன் வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து உணர்ச்சி பெருக்குடன் ரூபாய்
2,00,000/- க்கான காசோலையை வழங்கினார். அத்துடன் ஒரு ஆண்டு விடுதலை சந்தா ரூபாய் 2,000/- வழங்கினார். கழகத் தலைவர் கமலக்கண்ணனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். கமலக்கண்ணன் சிறிது நேரம் கழகத் தலைவருடன் நன்றி உணர்ச்சி மேலோங்க உரையாடிவிட்டு, பெரியார் நினைவிடத்தை மிகுந்த ஆவலுடன் சுற்றிப் பார்த்தார். கமலக்கண்ணன் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியீடுகள் சிலவற்றை வாங்க குறித்து வைத்திருந்தார். அப்புத்தகங்களை நன்கொடையாக வழங்கும்படி கழகத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அவ்வண்ணமே வாங்கிக் கொண்டு, அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம், வள்ளுவர் கோட்டம் ஆகியவற்றை பார்த்துவிட்டு பெங்களூரு செல்ல வேண்டும் என்று சொல்லி அவசரமாக விடை பெற்றுச் சென்றனர்.
கழகத் தலைவர் ஆசிரியர் மேடைகளில், ’பெரியாரால் பயன்பெறாத தமிழர்கள் யாராவது உண்டா?’ என்று அடிக்கடி கேள்வி கேட்டு, “இல்லை” என்று அவரே பதில் சொல்வார். அதுதான் நினைவுக்கு வருகிறது. ஆசிரியரின் கூற்றை மெய்ப்பிப்பதுபோலவே, கமலக்கண்ணன் குரல் கம்ம, “நானொன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. பெரியார் இல்லையென்றால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா?” என்கிறார். பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கியது; அதுவும் தமிழர் தலைவரை நேரில் பார்த்தது ஆகியவை அவரை சொல்லொண்ணா மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆசிரியர் வெளிநாடு உள்பட, சுற்றுப்பயணம் செல்வதை விடுதலையில் படித்துவிட்டு, ஆசிரியருடன் தானும் சுற்றுப்பயணம் சென்று வந்தது போலவே எண்ணிக்கொண்டு, கழகத் தலைவர் ஆசிரியரின் கருத்துகளையும் பின்பற்றக் கூடிய குணமுள்ளவர் பெங்களூரு தோழர் கமலக்கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
– முல்லைகோ, பெங்களூரு