புத்தகங்கள் எழுதுவோரில் – இன்றைய கால கட்டத்தில் பல வகையினர் உருவாகி விட்டார்கள்!
மற்ற புத்தகங்களை அப்படியே காப்பியடித்து இங்கொன்றும், அங்கொன்றும் தேடி, மொத்தமாக ஒரு வாரத்தில் 5 புத்தகங்கள் தங்கள் பெயரில் வரும்படி பார்த்துக் கொள்ளுபவராக…. (கவனிக்க ‘வரும்படி’ என்பதை!)
சிறந்த ஆய்வு நூல்களைப்பற்றி எழுதும்போதும், அறிவார்ந்து, காலத்தாற் பேசப்பட்டு, காலத்தைத் தாண்டியும் நிற்க வேண்டிய பல அரிய நூல்களை எழுத எவ்வளவு காலத்தை, மூளை உழைப்பு, உடலுழைப் பினைத் தந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்றின் பேரறிஞர் பலரது காலத்தைப் பெற்ற அறிவு நூல்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் பல ஆண்டுகள் செலவிட்டு உழைத்து உருவாக்கப் பெற்ற பொருளாதார மேதை கார்ல்மார்க்சின் ‘தாஸ்கேப்பிட்டல்’ “Das capital” போன்ற நூல்கள்;
அதுபோலவே உலக அறிஞர் வரிசையில் முதன் வரிசையில் உள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்;
தந்தை பெரியார் தம் இராமாயண ஆராய்ச்சி மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நூல்களுக்கென மூல நூல்களை ஆழமாகப் படித்ததோடு, தனது ஒப்பற்ற சுய சிந்தனையில் அந்நூல்களை வார்த்தெடுத்தார். ‘அறிவின் எல்லையோ இது’ என்று வியக்கும் வண்ணம் அவரது ஆய்வும், தர்க்கவாதங்களும் என்றும் காலத்தை வென்ற கருத்துக் கருவூலங்கள்;
பல ஆண்டுகள் சிறைச் சாலையில் தமது தியாக வாழ்க்கை முத்திரை பதித்த, (பண்டித) ஜவகர்லால் அவர்களது புதுமையான பல நூல்கள் அவரது சிறை வாழ்வு தந்த சீர்மிகு இலக்கியங்கள்;
அண்ணல் காந்தியடிகளின் “My Experiments with Truth” என்ற தன் வரலாறு இலக்கியம்;
ஒப்பற்ற இளைஞர், புரட்சி நாயகன், மாவீரன் பகத்சிங் அவர்களின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூல் கட்டுப்பாட்டு அடக்குமுறையில் உதித்த உதயசூரியன் ஆகும்!
இப்படி‘சிறை இலக்கியங்கள்’ என்றே பலவற்றை எழுதலாம் – பக்கம் பக்கமாக!
தந்தை பெரியார் விழைவுக்கும், விருப்பத்திற்கும் செயல்வடிவம் தர வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘‘பகவத் கீதை’’ குறித்த ஆய்வை நான் மேற்கொண்டேன். வர்ணாசிரமத்தை வானளவில் நிறுத்த, மூலக் கதையான பாரதத்தில் இல்லாத இடைச்செருகலை பிரச்சாரப் பெரு விளம்பரம் வாயிலாகச் சேர்த்து விட்டனர். இன்று அதை முழுமையாகப் படிக்காமலேயே சில மேடைகளில் அதன் பெருமை என்று அதில் இல்லாத வரிகளை இருப்பதாக அள்ளி விடுவார்கள்!
நான், பகுத்தறிவு உச்சங்கள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், டாக்டர் நார்லா போன்றோருடைய ஆய்வுகளையும், மற்றவற்றையும் தெளிவாக முழுமையாகப் படித்து ஆய்வு நூல் எழுத விரும்பினேன். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உள்ள தரவுகள் உள்பட சேகரித்தேன். சில பழைய பதிப்புகளையெல்லாம் தேடித் தேடி சுமார் 100, 150 நூல்களுக்கு மேல் படித்தேன்.
அந்த 700 சுலோகங்களையும், தமிழில் சில நூல்களையும் படித்து, குறிப்பெடுத்து அதை ஓர் ஆய்வு நூலாக ஆக்கிட மற்றொரு ஆண்டாகி விட்டது!
ஆழமாக எழுத வேண்டிய நூலுக்கு அமைதியான சூழல் அவசியம். தொந்தரவின்றி எழுதிட நானும், எனது வாழ்விைணயரும், மகள் அருள்பாலு இல்லத்தில் (சிகாகோ) ஓரிரு மாதங்கள் தங்கினோம். இப்பணியைத் துவக்கி புத்தகமாக எழுத ஒரு பெரும் பெட்டியில் முக்கியமான ஆதார நூல்களை எடுத்துச் சென்று, அமெரிக்காவில் சில நூல்களையும் வாங்கி அங்குள்ள கீதை பற்றிய நூல்களையும் படித்துப் பயன்படுத்திக் கொண்டேன்.
காலைச் சிற்றுண்டி முடித்து என்னை ஒரு தனி அறையில் இருக்க வைப்பார்கள். வெள்ளைத் தாள் கட்டு, தண்ணீர்க் குவளை போன்றவற்றை வைத்து விடுவார்கள். இடையில் அசதி ஏற்படாமல் இருக்க குடிப்பதற்கு ஏதாவது தருவார்கள்.
மதிய உணவுக்கு அழைப்பு; மீண்டும் சிறிது இடைவெளி, மாறுதலுக்கு மாலை சிறிது நேரம் வெளியே என அட்டவணை போட்டுதான் பணியாற்றிட முடிந்தது.
இன்று அந்நூல் பல லட்சங்கள் பிரதிகள் மக்களைச் சென்றடைந்து 28ஆவது பதிப்பை எட்டிக் கொண்டது.
இது எனது பெருமையைச் சொல்ல அல்ல.
மாறாக ஆய்வு நூல்களை எழுதிட, பல தரவுகளுடன் – மறுக்க முடியாத ஆதாரங்களும் தேவை.
புதினம் போல் படிக்க முடியாத நூல்கள் பல உண்டு. அவற்றுக்குக் கடும் உழைப்பு தேவை. அதில்தான் நமக்கு உவகையும் பொங்கும்!
இதை எழுத இரண்டாண்டுகள் பல ஆதாரங்கள் திரட்டி விட்டேன். கொட்டிக் கிடந்த செங்கற்களை – கட்டி முடித்த கோபுரமாக்கிட (அது அறிஞர் அண்ணாவின் அழகுச் சொற்றொடர்) முயன்று, ‘‘முழுப் பிரவசம் வந்த பிறகு எடுத்து உச்சிமோந்து முத்தம் தந்து மகிழ்வது போன்ற’’ தங்களது எழுத்தால் அமைந்த புத்தகங்களை உலகின் பல மொழிகளில் வெளியிட முயற்சி செய்யலாம்.
ஓர் எளிய பள்ளி ஆசிரியரை, எளிய மக்களின் வாழ்க்கையைப் பாடமாக பல சிறப்புத் தகுதிகளோடு, கனடா போன்ற நாடுகளிலும் போற்றிட எழுத்தின் இமயம் ேதாழர் இமையத்தின் புதினங்கள், புதிய புரட்சிகர இலக்கிய பூபாளங்கள்!
புத்தகங்கள் பெருமை இப்படி பலப்பல! அவற்றைப் படிக்காத வறுமையைப்பற்றி என்ன சொல்ல!