தி.மு.க. கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு

Viduthalai
3 Min Read

சென்னை, ஜூலை 2- திமுக கூட்டணிக்கு வேறு கட்சிகளும் வர வாய்ப்புள்ளதாகவும் வந்தால் கலந்து பேசி முடிவு செய்வோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘ஓரணியில் தமிழ்நாடு’
எனும் இயக்கம்

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.7.2025) சென்னையில் தொடங்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. ஜூலை 3 முதல் (நாளை) தமிழ்நாடு முழுவதும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவதுதான் இதன் அடிப்படை நோக்கமாகும். தமிழ்நாட்டிற்க்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இது.

அனைத்திலும் வளர்ந்த தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் புறக்கணிக்கிறது. இதனை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் எதிர்க்க வேண்டும். அதற்காகத்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்கள் அனைவரையும் சந்திக்கப் போகிறோம்.

அப்போது, திமுகவில் இணைய விரும்புவோர் செயலி மற்றும் படிவம் மூலமும் தங்களை இணைத்துக் கொள்ளலாம். மேலோட்டமாக பார்த்தால், திமுக உறுப்பினர் சேர்க்கையாக தெரிந்தாலும், உண்மையான நோக்கம் கட்சி எல்லைகளைத் தாண்டி தமிழ்நாட்டின் நலனுக்கானது.

தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கும்போது, எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என காட்டியாக வேண்டும். பாஜகவின் அரசியல், பண்பாட்டு படையெடுப்பை, தமிழ்நாடு மீதான பொருளாதாரப் போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் உள்ள அரசியல் சக்தி தேவை. அதை உருவாக்கத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை இயக்கமாகத் தொடங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி: திருபுவனம் விஷயத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தால் பிரச்சினையில்லாமல் இருந்திருக்கும். அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை?

முதலமைச்சர் பதில்: தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுத்து விட்டோம். கைது செய்துவிட்டோம். இன்றைக்குக்கூட மேலதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

கேள்வி: உறுப்பினர் சேர்ப்பில் பழனிசாமி வீட்டுக்கும் சென்று வலியுறுத்துவீர்களா?

பதில்: நிச்சயமாக சென்று விருப்பம் உள்ளவர்களைச் சேர்க்கப் போகிறோம். கட்டாயப்படுத்திச் சேர்க்கப் போவதில்லை. ஒவ்வொருவரிடமும் பொறுப்பு ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் சூழ்நிலைக்கேற்றவாறு செல்வார்கள். நான் அந்தப் பகுதியில் இருந்தால் பழனிசாமி வீட்டுக்கு நிச்சயம் செல்வேன்.

கேள்வி: கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்கத் தொடங்கியுள்ளார்களே?

பதில்: தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்துவிடுவோம்.

கேள்வி: இந்தக் கூட்டணியில் இன்னும் கூடுதல் கட்சிகள் சேர வாய்ப்பிருக்கிறதா?

பதில்: வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதை எப்படி சேர்ப்போம் என்று கலந்துபேசி முடிவு செய்வோம். 200 தொகுதிகளில் வெல்வோம் என்று சொல்லியிருக்கிறோம். அதைத் தாண்டிதான் வரும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து வருவேன் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே?

பதில்: பிரதமரும், அமித்ஷாவும் அடிக்கடி வரவேண்டும். அவர்கள் பேசுவது பொய் என்று மக்களுக்குத் தெரிகிறது. அது எங்களது தேர்தல் நேரத்தில் லாபமாக அமையும். அதேபோன்று, ஆளுநரும் கெடுதல் செய்து கொண்டிருக்கிறார். அதனால் அவர்களெல்லாம் அடிக்கடி வர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *