பிற இதழிலிருந்து… ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மொழிக் கொள்கையை ‘இந்து’ ஏடும் எதிர்க்கிறது

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 2– நாடு முழுவதும் உள்ள மக்கள் விருப்பங்களின் அடிப்படையில், ஒன்றிய பாஜக அரசு மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அத்துடன் ஒற்றுமையின் மொழியையும் அது கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் “தி இந்து” தலையங்கம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து “தி இந்து” ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும்எனதேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதையும், கொள்கை அளவில், தென்னிந்தியா மட்டுமின்றி, பல்வேறுமாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதையும் சுட்டிக்காட்டி யுள்ளது.

இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ஒன்றுதான் ஹிந்தி என்று “தி இந்து” ஆங்கில நாளேடு குறிப் பிட்டுள்ளது.

இரண்டு இந்திய மொழிகளையும் ஒரு வெளிநாட்டு மொழியையும் மாநிலங்கள் தேர்வு செய்யலாம் என தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

தாய்மொழியைத் தவிர இரண்டாவது இந்திய மொழியாக ஹிந்தி திணிக்கப்படும் என்ற அச்சம், மகாராட்டிரா அரசின் நடவடிக்கையால் அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விவகாரம் ஒரு அரசியல் புயலை கிளப்பியதாலும், ஆளும் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவாலும், 5ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்ற முடிவை மகாராட்டிர அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் இணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள இத்தலையங்கம், இதன் காரணமாகவே மும்மொழிக் கொள்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில முதலமைச்சர் ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளதை “தி இந்து” ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது.அரசியல்அதிகாரத்தைக் கொண்டு,மொழிகளை திணிக்கும் முயற்சிகள் மக்களை பிளவுபடுத்தும் செயல் என விமர்சித்துள்ள அந்த நாளேடு, பா.ஜ.க., மும்மொழிக் கொள்கையை தேசிய ஒற்றுமைக்கான பிரச்சினையாகப் பார்க்கும் நிலையில், ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலம் கற்க விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை 3ஆவது மொழியாக தேர்வு செய்யலாம் என ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழையோ, மலையாளத்தையோ கற்பிக்க வாய்ப்பில்லை என்பதையும் இத்தலையங்கம் தெளிவுபடுத்தி உள்ளது.

மும்மொழிக் கொள்கையால், பெரும்பான்மையான மாணவர்கள் மீது ஹிந்தி திணிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்றும், அனைத்து இந்திய மொழிகளையும் கற்பிக்கும் வாய்ப்பை எந்த மாநிலமும் வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ள “தி இந்து” தலையங்கம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் விருப்பங்களின் அடிப்படையில், பா.ஜ.க. தனது மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அது ஒற்றுமையின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *