புத்தகங்கள் எழுதுவது என்பது அவ்வளவு எளிதான படைப்புப் பணி அல்ல.
சிந்தனை வளமும், செயலாக்க ஊக்கமும், திறன்மிக்க ஈடுபாடும், சிறப்பாக செய்திட வேண்டும் என்ற உறுதிப்பாடும் மிக மிகத் தேவைகளாகும்.
மும்பையில் உள்ள சிறந்த எழுத்தாளர், ஆற்றல் மிகு மொழி பெயர்ப்பாளர் – பண்பாளர் – நண்பர் திரு. PSV குமாரசாமி அவர்கள், பிரபல ஆங்கில எழுத்தாளர் ரயன் ஹாலிடே அவர்களது நூலை ‘சுய ஒழுங்கே தலை விதியைத் தீர்மானிக்கும்’ என்ற நீண்ட தலைப்பிட்டு, மொழி பெயர்த்துள்ள சுயக் கட்டுப்பாட்டின் அளப்பரிய சக்தி பற்றிய நூலைப் படித்தேன்.
சிறந்த வாழ்வியலுக்கான வழிகாட்டி நூல் அது!
தோழர் குமாரசாமியின் 100ஆவது மொழிபெயர்ப்பு நூல் படைப்புக்குத் தனி வாழ்த்துகள்! சாதனை சரித்திரமும்கூட!!
இதில் மிகவும் தனித்தன்மையும், சுவைமிக்கதுமாக நமக்கு அறிவூட்டும் பகுதி – மற்றவைகளைத் தாண்டி, நூலாசிரியர் ‘ரயன் ஹாலிடே’ அவர்களது ‘முடிவுரை’ என்ற இறுதிப்பகுதியில், புத்தகம் எழுதுவது, தயாரிப்பது எப்படிப்பட்ட அரும் பெரும் பணி – அதன் ஆயத்தங்கள், எவ்வளவு திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டியதும், கவனச் சிதறல் இல்லாது ஈடுபட்டு, எடுத்த பணியை இனிமை குன்றாவண்ணம் செய்து முடிப்பதும் என்பது குறித்துத் தன் அனுபவத்தை தந்திருப்பதுதான்!
ஓர் ஈர்ப்பு மிகுந்த ஒருபகுதி. இப்புத்தகம் அதன் ஆசிரியரின் தனித்துவம்!
‘இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கி இரண்டாண்டுகள் ஆன பிறகு என் எழுத்து திடீரென்று ஸ்தம்பித்து நின்று விட்டது’ என்ற வரிகளின் துவக்கமே ஒருபுதுமை புதின வரலாறு போல் அமைகிறது!
சற்று நீளமானது என்பதால் முக்கிய பகுதியை மட்டும் நமது வாசக நேயர்களுக்கு (பிழிவுபோல்) தருவதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் கொள்கிறோம்.
‘‘இந்தப் புத்தகத்தைப் பொறுத்த வரை, இதை நான் எழுதிக் கொண்டிருந்தபோது நான் என்னவாக ஆகியிருந்தேன் என்பது குறித்து எனக்குப் பெருமை உண்டு. ஏனெனில், இதற்காக – நான் என் குடும்ப நேரத்தை அதிகமாகத் திருடவில்லை.
புத்தகத்தைத் துவக்குவது எந்த அளவுக்குக் கடினமானதோ, அதை முடிப்பதும் அதே அளவு கடினமானதுதான். அக்கட்டத்தில் பரபரப்பு அதிகமாக இருக்கும். காலக்கெடு நெருங்கியிருக்கும். திடீரென்று புதிய பிரச்சினைகள் தலைதூக்கும். இது என்னுடைய மிகச் சிறந்த சமயமாக இருக்காது. இந்தப் புத்தகத்தின் கடைசிப் பக்கங்களை நான் வீட்டிலிருந்து எழுதிக் கொண்டிருந்தபோது, என் அய்ந்து வயதுக் குழந்தை தன் வீட்டுப்பாடத்தை நிறுத்திவிட்டு, என்னிடம், “அப்பா, உங்களுடைய புத்தகம் எழுதும் வேலையை நீங்கள் இழந்துவிட்டதற்காக நான் வருந்துகிறேன்,” என்று கூறியதைக் கேட்டு நான் வியப்படைந்தேன். இப்போது நான் அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்ததால், என்னை வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள் என்று என் குழந்தை நினைத்துக் கொண்டதுதான் அதற்குக் காரணம்.
இதுவே சில காலத்திற்கு முன்பாக இருந்திருந்தால், இந்தப் புத்தகம் எழுதும் வேலையால் எனக்கு ஏற்பட்டிருந்த மன அழுத்தத்தால் நான் மிகவும் உடைந்து போயிருப்பேன். என் வேலை என் குடும்பத்திற்குள்ளும் நுழைவதற்கு நான் அனுமதித்திருப்பேன். நான் அமைதி இழந்திருப்பேன். அப்போது நான் இலட்சிய வெறியால் உந்தப்பட்டு, துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். வேலைக்குக் குறுக்கே எது வந்தாலும் அது எனக்கு ஆத்திரமூட்டியது. அதன் காரணமாக நான் அதிகமான விஷயங்களைச் சாதித்திருந்தேன் என்பது உண்மைதான் என்றாலும், அது என்னை மகிழ்ச்சியற்றவனாக ஆக்கியது.
அந்த மனநிலை இந்தப் புத்தகத்திற்கு எனக்கு உதவியிருக்காது. அதைவிட மேலாக, அப்படி நான் நடந்து கொண்டிருந்தால் அது என்னை ஒரு கபடதாரியாக ஆக்கியிருக்கும்.
சரி. இந்த இடத்தில் நான் நிறுத்திக் கொள்கிறேன். நான் இன்னும் களைப்பாகத்தான் இருக்கிறேன்.
நான் களைப்பாக இருந்தாலும் அருமையாக உணர்கிறேன்.
வாழ்க்கை வாழ்பவர்களுக்கானது. நாம் துள்ளியெ ழுந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
புத்தகம் எழுதுவது முயற்சியின்றி இயல்பாக வருமென்றால்? எல்லோருமே எழுதிக் கொண்டிருப்பர்.
அதை எழுதுவது கடினமாக இருப்பது நல்லதுதான். அது ஊக்கமிழக்கச் செய்கின்ற விதத்தில் இருப்பதும் நல்லதுதான். அது உங்களுடைய இதயத்தை நொறுக்குவதாகவும், உங்களுடைய பின்புறத்தை உதைப்பதாகவும், உங்களுடைய மண்டையைக் குழப்பு வதாகவும் இருப்பதும் நல்லதுதான். அதே நேரத்தில், அந்த வேலையை, சமநிலையுடனும், நிதானமாகவும், படிப்படியாகவும் நம்மால் மேற்கொள்ள முடியும்.
இதுதான் சுயஒழுங்கு உடையோரை சுய ஒழுங் கற்றவர்களிடமிருந்தும், பலமானவர்களைப் பலவீனமானவர்களிட மிருந்தும், தொழில் முறையாளர்களை ஒன்றைப் பொழுதுபோக்கிற்காகச் செய்பவர்களிடமிருந்தும் வேறுபடுத்துகிறது.’’
சுய அனுபவம் தான் எனக்கு இதில் உண்டு.
இதில் பெரிய குற்றவாளியாக எனது குருதிக் குடும் பத்தினர் – வாழ்விணையர் – பிள்ளைகள் – வீட்டுறவுகள் என்மீது பதிவு செய்யும் குற்றப் பத்திரிகையை நான் அறிந்த வரையினால் இந்த வரிகளை – ராயனின் வரிகளை – உண்மையின் வெளிச்சத்தை வெகுவாக சுவைத்தேன்!
இதை வழிமொழியும் வகையில் எனக்கே சில முக்கிய ஆய்வு நூலகள் எழுதியபோது எனது அனுபவங்களும் உண்டு.
அடுத்து பகிர்ந்து கொள்ளலாம்!
(நாளை முதல் விவரிக்கின்றேன்)