பூரி ஜெகந்நாதர் தொடக்கத்தில் புத்தர் சிலையாக இருந்தது என்றார் விவேகானந்தர்
‘பூரி ஜெகந்நாதருக்கு மனைவி தேவை!’ என்று ஒரு முறை விளம்பரமாகவே கூட இருந்தது.
பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு அண்ணல் அம்பேத்கரும், வைசிராயராக இருந்த மவுண்ட்பேட்டனும் ஒரு முறை சென்றபோது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அண்ணல் அம்பேத்கர் தடுக்கப்பட்டார். ஆனால் கிறிஸ்தவரான மவுண்ட்பேட்டன் அனுமதிக்கப்பட்டார் என்பதெல்லாம் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
நாள்தோறும் டாக்டர் ஒருவர் பூரி ஜெகந்நாதர் உடலைப் பரிசோதனை செய்கிறார். படத்துடன் செய்தி வெளியாகியதுண்டு. இந்து மதக் கடவுள், கோயில்களின் சமாச்சாரங்களை நினைத்தால் குமட்டிக் கொண்டுதான் வரும்.
தன்னைத் தேடி வரும் பக்தர்களையே காப்பாற்ற முடியாதவர் சர்வ சக்தி கடவுளாம்!
ஜூன் 26ஆம் தேதி பூரி ரதயாத்திரை பாகண்டி ரஸ்ம் (சாமியை ஏமாற்றிக் கொண்டு ஓடும் ஒருவித சடங்கு) நிகழும் இடத்தில் முக்கிய பிரமுகர்களுக்காக பெரிய விசாலமான பாதையும், சாமானியர்களுக்காக மிகவும் நெரிசலான பாதையும் உருவாக்கி வைத்திருந்தனர்
பிரமுகர்கள் வருகை தாமதமானதால் பாகண்டி சடங்கு சரியான நேரத்தில் துவங்கவில்லை. இதனால் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வர, கூட்ட நெரிசல் அதிகமாகி 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 300 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறீகுந்திச்சா கோவில்(பலராமர் பெண்ணைக் காணவருதல்) நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வின் போது மீண்டும் கூட்டம் சிறீகுந்திச்சா கோவிலின் முன்பு உள்ள திருப்பத்தில் ஒன்று கூடியது. ஏற்ெகனவே எதிர்முனையில் உள்ள கூட்டம் நகராமல் இருக்கவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ப்ரவிதா தாஸ் (52), பிரேம் கந்தா (52), பசந்தி சாஹு (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் இன்றளவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மேலும் விவரம் எதுவுமே வெளிவரவில்லை. இந்த நிலையில் மீண்டும் திங்கட்கிழமை பக்தர்களின் நெரிசலில் மரணம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து எதிர்க்கட்சியினர் நெருக்கடி தொடரவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து ஒடிசா முதலமைச்சர் சரண் மாஞ்சி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பக்தர்கள் மத்தியில் மஹாபிரபுவையும், சாரதாபாலியையும் காண வேண்டி ஏற்பட்ட அதீத வெறியால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்துக்காக நானும், எனது அரசாங்கமும் ஜெகந்நாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் கூட்ட நெரிசல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தது, சுமார் 50 பேர் காயமடைந்தது மிகுந்த வேதனை தருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த யாத்திரையில் சுமார் 500 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியானது. மூவர் மரணம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. அங்கு துயரச் சம்பவம் தொடர்கிறது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம். இதை மன்னிக்கவே முடியாது.
இந்த சம்பவம் குறித்து மாநில அரசு முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதுபோன்ற விழாக்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் பெருங்கூட்டத்தை முறையான திட்டமிடல் உடன் கையாள வேண்டியது அவசியம்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த கும்பமேளாவின் போது ஜனவரி 30 ஆம் தேதி நடந்த மவுனி அமாவாசை நிகழ்வில் 38 பேர் மரணம் என்று சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் அறிவித்தார்.
ஆனால் பிபிசி கள ஆய்வு மேற்கொண்டு இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆய்வு நடந்துகொண்டு இருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டது. இதுவரை அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை.
அதே போல் பிப்ரவரி 15 ஆம் தேதி புதுடில்லி ரயில் நிலையத்தில் கும்பமேளா செல்ல இலவசமாக ரயில் செல்கிறது என்று வதந்தி பரப்பி பெரும் கூட்டத்தைக் கூட்டவே நடை மேடையில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் மரணமடைந்ததாக அரசு கூறியது.
ஆனால் ரயில் நிலைய கூலித் தொழிலாளர்கள் தனியார் யூ டுயூப் அலை வரிசைக்குப் பேட்டி அளித்த போது ‘‘பல உடல்கள் கொண்டு செல்லப்பட்டன; எண்ணிக்கை தெரியாமல் இருக்க நிகழ்விடம் மற்றும் மருத்துவமனையில் ஊடகத்தினருக்கு தடை விதித்துள்ளனர்’’ என்று கூறினர்.
கும்பமேளா விபத்து மற்றும் புது டில்லி ரயில் விபத்தில் மரணத்தை மறைத்த பாஜக அரசு 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் என்ற செய்தியை சர்வ சாதாரண செய்தியாக மாற்றிவிட்டது. இந்த நிலையில் மீண்டும் மீண்டும் இரண்டு நாள்களுக்கு இடையே பெரும் கூட்ட நெரிசல் காரணமாக பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தில் மரணம் ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல இங்கும் ஒடிசா மாநில அரசு மரணத்தை மூடிமறைத்துவிட்டது.
இதனால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும் கிடைக்காது, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையும் முறையாக கிடைக்காது.
கடந்த 11 ஆண்டுகளாக ஹிந்துக்களுக்காக ஆட்சியில் இருக் கிறோம் என்று கூறிக்கொண்டு இருந்த பாஜக அரசு தற்போது மரணமடைந்த ஹிந்துக்களின் உடலைக்கூட உறவுகளுக்கு காட்டாமலேயே எரியூட்டும் கொடுமை நிகழ்ந்து வருகிறது.
கடவுள் காப்பாற்றுவார் என்றும், கடவுள் மதத்தை மூலதனமாக வைத்தும் பிஜேபி அரசியல் நடத்துவது என்பது எல்லாம் எத்தகைய யோக்கிய மற்ற தன்மை!
மனிதன் என்பதற்கு அடையாளம் பகுத்தறிவே! அதைப் பயன்படுத்தாதவரை மரணங்களும், அரசியல் தில்லுமுல்லுகளும் நடந்து கொண்டுதான் இருக்கும்.