பி.ஜே.பி.யில் குழப்பம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கட்சித் தலைவர்களை மாற்ற மேலிடம் முடிவு எம்.எல்.ஏ. பதவி விலகல்

Viduthalai

அய்தராபாத், ஜூலை 1– ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் பாஜக மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில தலைவராக புரந்தேஸ்வரியும், தெலங்கானா மாநில பாஜக தலைவராக ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டியும் பதவி வகித்து வந்தனர். இவர்களது பதவி காலம் முடிவடைந்ததால், இந்த இரு மாநிலத்திலும் கட்சியை மேலும் பலப்படுத்த புதிய தலைவர்களை பாஜக நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நேற்று ஆந்திரத்தின் புதிய பாஜக தலைவர் பதவிக்கு மேனாள் மேலவை உறுப்பினரான பி.வி.என்.மாதவ் விண்ணப்ப மனு தாக்கல் செய்தார். இவர் தற்போது ஆந்திர மாநில பாஜக பொது செயலாளராக உள்ளார். இவரது தந்தை மறைந்த சலபதி ராவ் 2 முறை மேலவை உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

தலைவர்களை மாற்ற முடிவு

இதேபோன்று தெலங்கானா மாநில புதிய பாஜக தலைவராக மேலவை உறுப்பினர் ராமசந்திர ராவை கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இவர் நேற்று (30.6.2025) மதியம் தலைவர் பதவிக்காக விண்ணப்ப மனுவை தாக்கல் செய்தார். இவர் விரைவில் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏ. பதவி விலகல்

இந்நிலையில், தெலங்கானா பாஜக எம்எல்ஏவான ராஜாசிங் பாஜகவிலிருந்து விலகினார். இது குறித்துராஜாசிங் கூறுகையில், ‘‘நான் பாஜகவின் எம்எல்ஏவாக இங்கு உள்ளேன். கட்சிக்காக பாடுபட்டு வருகிறேன்.

மாநில பாஜக தலைவராக பதவி வகிக்க எனக்கு முழு தகுதியும் உள்ளது. இதற்காக நான் விண்ணப்பிக்க விரும்பினேன். ஆனால் என்னை பாஜகவினர் தடுத்து விட்டனர். ஆதலால் நான் பாஜகவிலிருந்து விலகுவதாக மாநில கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளேன்’’ என கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *