சூத்திரர்கள் – எதிர்ப்புரட்சி (4)
“விராத்தியரைத் தூய்மைப்படுத்த வேண்டி நிகழ்த்தப்பட்டதும், பஞ்சவிம்ச பிராமணத்தில் கூறப்பட்டிருப்பதும் ஆன இச்சடங்கு, வேதகாலத்து மற்ற பெரும் சடங்குகளிலிருந்து குறைந்தது ஒரு கூறிலாவது மாறுபட்டிருந்தது. அதாவது, மற்ற சடங்குகளுக்கு வேள்விக்கூடத்தில் ஒரு பலிகொடுப்பவரும் அவரது மனைவியுமே இருக்க, இந்தச் சடங்கிற்கு ஆயிரக்கணக்கில் பலிகொடுப்பவர்கள் இருந்தனர். அவர்களுள் பேரறிவும், பெருஞ்செல்வமும், பெருந்திறனும் கொண்ட ஒருவன் குலபதியாக இருக்க, மற்றவர் அவனை வெறுமனே தொடர்ந்து சென்றனர். இக்குலபதி மற்றவரைவிட அதிகமாக காணிக்கை செலுத்த வேண்டும்.”
“இது ஒரு சடங்கின் மூலம் விராத்தியரை ஆயிரக்கணக்கில் முனிவர் சமூகத்தில் சேர்த்துக்கொள்வதற்கான வழியென்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற சடங்குகள் அடிக்கடி நிகழ்ந்தன. இவ்வாறு கூட்டங் கூட்டமாக நாடோடி ஆரியர்கள், நிலைத்து ஓரிடத்தில் வாழும் நிலைமைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவ்வாழ்க்கை முறைமைக்கு வரும் தூய்மைப்படுத்தப்பட்ட அவர்கள் தங்களுடைய விராத்திய வாழ்க்கையில் வைத்திருந்த உடைமைகளை உடன் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை. அவற்றை இன்னும் விராத்தியராகவே வாழ்பவருக்கு அல்லது மகத தேச பார்ப்பனர் என்றழைக்கப்படுபவருக்கு விட்டுவிட்டு வரவேண்டும். வேறொரு இடத்தில் நான் கூறியிருக்கிறபடி, மகத தேச பார்ப்பனர் என்போர் முனிவர்களால் தாழ்நிலையினராக எண்ணப்பட்டவர்கள்.”
“ஆனால் விராத்தியர்கள் நிலைத்த வாழ்க்கைக்கு அனுமதிக்கப்பட்டவுடன் அவர்கள் முழுமையான சமத்துவம் பெற்றனர். முனிவர்கள் சமைத்த உணவையும், முனிவர்களுக்காகச் சமைத்த உணவையும் அவர்கள் உண்ணுவர். அவர்களுக்கு மூன்று வித்தைகளும், சாம, ரிக், யஜூர் வேதங்களும் கற்பிக்கப்பட்டன. அவர்கள் இந்நூல்களைக் கற்பிக்கவும், அவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் வேள்வி செய்யவும், அனுமதிக்கப்பட்டனர். அதாவது, அவர்கள் முழுவதுமாக சமமாகக் கருதப்பட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் ஒரு முனிவரின் மிக உயரிய திறனையும் எய்தினர். சாம வேதமும் ரிக் வேதமும் கூட அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. கவுசிதாகி என்ற புனிதமடைந்த ஒரு விராத்தியர் ரிக் வேத பிராமணங்களைத் தொகுக்க அனுமதிக்கப்பட்டார். அத்தொகுதி இன்னும் அவர் பெயரிலேயே வழங்குகிறது.”
ஆரியர்கள் தாங்களாகவே இணங்கி ஆரியரல்லாதவர்களைத் தங்களுடைய நெறிக்கு மாற்றியது மட்டுமல்ல; தங்களை, தங்களுடைய வேள்வி நெறிகளை, தங்களது நால்வருண கோட்பாட்டை, ஏன் ஆரியர்களிடமிருந்து அசுரர்கள் கவர்ந்து சென்றதாகப் புராண மரபு கூறும் அவர்களது வேதங்களைக்கூட எதிர்த்தவர்களாகிய அசுரர்களை, அவர்கள் விருப்பம் கொள்ளாத போதும் ஆரியர்கள் தங்கள் நெறிக்கு மாற்றமுயன்றனர். மகன் பிரகலாதன் ஆரிய பண்பாட்டுக்கு தன்னை மாற்றிக் கொள்ள விழைய, தந்தை இரண்யகசிபு எதிர்க்க, மகனைத் தந்தையிடமிருந்து காத்தல் வேண்டி விஷ்ணு இரண்யகசிபுவைக் கொன்றதாக வழங்கும் கதை ஆரியர்களின் மேற்கூறிய போக்கிற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும். ஆரியரல்லாதவர்கள் தன்னுரிமையும் குடியுரிமையும் பெற்றவராகினர் என்பதைக் காட்டும் எடுத்துக்காட்டுகள் இதோ. இவ்வாறிருக்க, சூத்திரர்பால் மட்டும் ஏன் ஓர் எதிரானப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது? முழு உரிமையும் தகுதியும் கொண்டிருந்த சூத்திரர்கள் ஏன் தன்னுரிமையும் குடியுரிமையும் நீக்கப்பட்டவராயினர்?
இப்புதிருக்கு நிஷாதர்கள் நடத்தப்பட்ட முறை ஓர் குறிப்பாக அமைகிறது. இதனை நாம் ஒதுக்கிவிடக்கூடாது. அய்ந்து தொல்லினங்கள் பற்றியக் குறிப்புகள், பண்டைய சமற்கிருத இலக்கியத்தில் நிறைந்து காணப்படுகின்றன. இவ்வினங்கள் பஞ்ச கிருஷ்த்யா, பஞ்ச கிஷ்த்யா, மானுஷ்யா, பஞ்ச சார்ஷனயா, பஞ்சஜனா, பஞ்ச ஜன்யா, அதாவது பஞ்ச புமா, பஞ்ச ஜதா எனும் பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றன. இச்சொற்கள் சுட்டும் பொருள் பற்றி கருத்து வேறுபாடு நிலவுகிறது. ரிக் வேத உரையாசிரியர் சயனாச்சாரியர் இச்சொற்கள் நான்கு வருணங்களையும், நிஷாதர்களையும் குறிப்பதாகக் கூறுகிறார். நிஷாதர்களைப் பற்றி விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
- மிருத்யூவின் (இறப்புக் கடவுள்) தலைமகள் சுனிதா அங்கனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள். அவளுடைய மகன் வீணா.
- அவனுக்குத் தாய்வழிப் பாட்டனாரின் கறை தொற்றிக்கொள்ள, கறை படிந்தவனாகப் பிறந்தான். அக்கறை அவனுக்கு இயற்கையானதாகவே அமைந்தது.
- மேன்மை சான்ற முனிவர்களால் மன்னனாக முடிசூட்டப் பட்டபோது அவன் பின்வருமாறு தன்னைப் பற்றிப் பறைசாற்றுவித்தான். “மனிதர்கள் வேள்விகள் இயற்றுவதோ அன்பளிப்புகள் வழங்குவதோ, படையல்கள் இடுவதோ கூடாது. என்னைத் தவிர வேள்விகட்குரியவர் யாருள்ளார்? யானே என்றும் கொடைகளின் அதிபதி.”
- பின்னர் அனைத்து முனிவர்களும் மன்னனை அணுகி, வணங்கி, வாழ்த்தி இணக்கத்துடன் மொழிந்தனர்:
- ‘ஓ மன்னனே யாம் இயம்புவதைக் கேட்பீராக’
- விண்ணுலக வேந்தனும் வேள்விகளின் தலைவனுமான ஹரியை நாங்கள் ஒரு நீண்ட வேள்வியில் (திர்க்கசத்ரா) வழிபடுவோம். அஃது உமது நாட்டுக்கும் உமக்கும், உமது குடிகளுக்கும் மிகப் பெரும் நன்மைகளைப் பயக்கும். திருவருள் நின்பால் நிலைக்கட்டும்; இச்சடங்கில் நீவிரும் பங்கேற்பீராக.
- விஷ்ணு, வேள்வியின் முதல்வனாகிய மால், இச்சடங்கு வாயிலாகச் செய்யப்படும் கழுவாய் பொருட்டு நீவிர் விரும்புவதெல்லாம் அளித்தருள்வார். வேள்வி முதல்வனாகிய ஹரி தனக்கு திருப்படையலுடன் சிறப்புச் செய்யும் நாட்டின் மன்னனுக்கு அவன் விரும்பும் அனைத்தும் அருளுவான்.
வீணாவின் பதிலுரையாவது: “எம்மைக்காட்டிலும் உயரியது எது? என்னைத் தவிர யார் பெருமைப்படுத்துதற்கு உரியார்? வேள்வியின் முதல்வனாக நீர் கருதும் ஹரி என்பார் யார்? அருளுதலும் சபித்தலும் புரிவோரான பிரம்ம ஜனார்தனன் ருத்ரன், இந்திரன், வாயு, யமன், ரவி (சூரியன்), அக்கினி, வருணன், தாத்ரி, பூஷன், நிலமகள், திங்கள் இவர்களும் மற்ற கடவுளர் அனைவரையும் மன்னன் தன்னகத்தே கொண்டுள்ளான். எவ்வாறெனின் கடவுளர் அனைவரின் சேர்க்கையே மன்னன், ஓ பார்ப்பனர்களே இதை உணர்ந்து என் ஆணையின்படி செயல் புரிவீராக! வேள்வி வளர்ப்பதோ, பரிசுகள் வழங்குவதோ, திருப்படையல் சாத்துவதோ செய்யாதொழிவீர்.”
- மன்னன் மேலும் கூறினான்: “என் கட்டளையை நீவிர் நிறைவேற்றுவது. பெண்டிருக்கு அவர்தம் கணவரைப் பணிதல் மிகப் பெரும் கடமையாவதைப் போன்றதாகும்” முனிவர்கள் மன்னனுக்கு மறுமொழி கூறுகையில் “பெருமைமிக்க வேந்தனே அனுமதி வழங்குங்கள். மதம் அழிந்துபோக வேண்டாம். இவ்வுலகனைத்துமே திருப்படையல்களின் ஒரு மாறுபட்ட வடிவமே” என்றுரைத்தனர்.
- மதம் அழிந்துபடும்போது இப்புவியும் அத்தோடு சேர்ந்தே அழிகிறது. வீணா பெரும் முனிவர்களால் இவ்வாறு இடித்துரைக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டும், அன்னாருக்கு அனுமதி வழங்கவில்லை. சீற்றமும் கடுஞ்சினமும் கொண்டு முனிவர்கள் அனைவரும் உரத்த குரலில் ஒருவருக்கொருவர் “இப்பாவியைக் கொல்லுவீர்” எனப் புகன்றனர்.
- “ஆதியும் அந்தமும் அற்ற இறைவனை, வேள்வியின் தலைவனாகிய திருமாலை இழிவுபடுத்திப் பழிகூறுவோனாகிய இவன் உலகைக் காக்க அருகதையற்றவன்.” இவ்வாறு கூறி, ஏற்கெனவே தெய்வப் பழியாலும் தனது மற்ற குற்றங்களாகும் பீடிக்கப்பட்டிருந்த அவனை, மறை நூல்களால் தீக்கை செய்யப்பட்ட தர்ப்பைப் புல் இதழ்களால் தாக்கியழித்தனர். பின்னர் சுற்றிலும் தூசிப்படலம் சூழ்வதைக் கண்ட அவர்கள், அங்கு குழுமியிருந்த மக்களை அதுபற்றி வினவினர்.
17 மக்கள் உரைத்ததாவது, “அரசனற்ற இந்நாட்டில் பெரிதும் இன்னலுற்ற மக்கள் கள்வர்களாகி மற்றவர் செல்வத்தைப் பறிக்கத் தொடங்கியுள்ளனர்.
- இக்கள்வருடைய கட்டற்ற வெறித்தனம்கூடிய வேகத்தாலும் மற்றவர் பொருளை அவர்கள் கொள்ளையிடுதலாலும் விளைந்த தூசிப்படலமே இது.” இதைக் கேட்ட முனிவர்கள் ஒருவரையொருவர் கலந்து பேசி வாரிசற்ற அம்மன்னன் வழி ஒரு வாரிசு பெறவேண்டி அவனது தொடையை வலிந்து தேய்த்தனர். அப்போது அவனது தொடையிலிருந்து மிகமிகக் குட்டையான தட்டைமுகம் கொண்ட, தீய்ந்த மரக்கட்டை போன்ற ஒரு மனிதன் தோன்றினான்.
- கடும் துயரத்திலிருந்த அம்மனிதன் அவர்களிடம், “தான் செய்யவேண்டியது யாது” என வினவினான், அவர்கள் அவனிடம் “உட்கார்” (நிஷாதா) என்றனர். இவ்வாறாக அவன் ஒரு நிஷாதன் ஆனான்.
- அவன் வழி தோன்றியவர்களே கொடுஞ்செயல்களுக்குப் பெயர்போன, விந்திய மலைகளில் வாழும் நிஷாதர்கள்.
- இவ்வாறாக அவ்வரசனது பாவச் செயல் அவனிடமிருந்து நீங்கியது இவ்வாறாகவே வீணா அரசனது கொடுமையின் விளைவாக நிஷாதர்கள் தோன்றினர்;
இது நிஷாதர்களின் தோற்றம் பற்றிய தொன்மக் கதை. ஆயினும் இது வரலாற்று உண்மைகளை உள்ளடக்கியுள்ளது. இந்நிஷாதர்கள் விந்திய மலைக்காடுகளில் வாழ்ந்த பண்பாட்டு முதிர்ச்சி இல்லாத ஒரு கீழ்நிலை பழங்குடி மக்கள் என்பதும் இக்கதை வாயிலாகத் தெளிவாகிறது. அவர்கள் துடுக்குத்தனமான மக்கள் அதாவது ஆரியப் பண்பாட்டை எதிர்ப்பவர்கள் என்பதும் தெரிகிறது. அவர்கள் தங்களது தோற்றத்தை விளக்கவும் தங்களை ஆரிய சமூகத்தோடு பிணைத்துக்கொள்ளவும் வேண்டி ஒரு தொன்மத்தைத் தோற்றுவித்தனர், இவையனைத்தும் நிஷாதர்கள் ஆரியப் பண்பாட்டுடன் ஒன்ற இயலாவிடிலும் ஆரியச் சமூகத்தில் ஓரங்கமாக ஆகும் நோக்கத்துடனேயே செய்யப்பட்டவை. கீழ்நிலையினதான, நாகரிக முதிர்ச்சியற்ற ஆரியரல்லாத இவ்வினம் எத்தகையதொரு தகுதிக் குறைபாட்டாலும் முடக்கப்பட்ட நிலையில் இருக்கவில்லை.
நமது கேள்வி, ஆரிய இனத்தைச் சார்ந்த, பண்பட்ட சூத்திரர் ஏன் முடக்கிவைக்கப்பட்டனர் என்பதே.
– அண்ணல் அம்பேத்கர்
‘இந்து மதம்: வரலாறு – ஆய்வு’ நூலிலிருந்து