நாகையில் பொதுக்கூட்டம்
தலைவரவர்களே! சகோதரர்களே!! சகோதரிகளே!!! தலைவர் அவர்கள் சும்மா இருந்த உங்களை தூண்டிவிட்டு கேள்விகள் கேட்கும்படி செய்துவிட்டார். நான் வம்பு சண்டைக்கு வரவில்லை. வலியவந்தால் நான் எப்படி ஓட முடியும்? உங்கள் சந்தேகத்தையெல்லாம் தீர்க்கக்கூடிய தீரனல்ல நான். எனக்குத் தோன்றியதை, நான் சரியென்று கருதியதைச் சொல்லுகின்றேன். உங்களுக்கு சரி என்று பட்டதை ஒப்புக்கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளி விடுங்கள். அவ்வளவு தான் சொல்ல முடியும். என்னை ஒரு மகாத்மா என்றோ, மனிதத் தன்மைக்கு மீறிய சக்தி உடையவனென்றோ கருதி ஒன்றையும் கேட்டு விடாதீர்கள். சாதாரணமான மனிதன் என்று கருதி நான் சொன்னவற்றில் உங்களுக்கு விளங்காதது ஏதாவது இருந்தால் கேளுங்கள். எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன். சரி தப்பு என்று கூட என்னிடம் சொல்லாதீர்கள். உங்களுக்குத் தோன்றியபடி நினைத்துக் கொள்ளுங்கள். திருந்துங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை. நான் பேசுபவற்றில் தப்பிதங்கள் இருக்கலாம் என்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், நான் சரி என்று நினைத்ததைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு என்பதில் நான் சந்தேகப்படவில்லை.
என்னைப் பற்றி
நண்பர்களே! முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகின்றேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்கு போகும் வழியில் என்னைப் பற்றியும் என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதி இருந்தது. மற்றும் சிலரைப் பற்றியும் எழுதி இருந்தது. பதிலுக்குப் பதில் எழுதும் முறையிலோ என்னமோ மற்றும் சிலரைப் பற்றியும் எழுதி இருக்கக் கண்டேன் தவிர, தலைவர் திரு.குப்புசாமி அவர்களிடம் யாரோ ஒருவர் “நாங்கள் ஜாதியைக் கெடுக்கின்றோம்” என்றும் “சுயமரியாதைக்காரர்கள் தங்கள் பெண்களைப் பறையருக்குக் கொடுப்பார்களா?” என்றும் கேட்டார்களாம். அதற்கும் ‘பதில் சொல்லுங்கள்’ என்றார்.
நண்பர்களே! என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ, தெய்வத் தன்மை பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதை விட, கருதுவதை விட என்னை அயோக்கியன் என்றும், திருடன் என்றும், முட்டாள் என்றும், சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகின்றேன்.
ஏனெனில் எனது வேலையானது இராமசாமி என்று ஒருமகாத்மாவோ, மற்றும் தெய்வத்தன்மை பொருந்திய ஓர் ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்து பூஜிக் கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் என்பேரில் விக்கிரகம் செய்து பூஜை உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப்பட்டவன். ஆகவே, என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே, எனது நண்பர்கள் ஆவார்கள்; எனது கொள்கைகளுக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.
ஏனெனில் வண்ணான், நாவிதன், பறையன், பள்ளன், செட்டி, நாயக்கன், நாடார் என்று சொல்லப்பட்ட “இழிகுல” மக்கள் என்பவர்கள் எல்லாம், இன்று ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியும், பூஜித்தும் உற்சவம் செய்யப்பட்டும், நாட்டுக்கோ, அச்சமுகங்களுக்கோ ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கின்றேன். அதன் பேரால் அவர்கள் கதைகளைச் சொல்லிசிலர் வயிறு வளர்க்கின்றார்கள். சிலர் சோம்பேறிகளாய் வாழ்கின்றார்கள் என்பதைத் தவிரவேறு ஒன்றும் இல்லை. அதுபோலவே இராமகிருஷ்ண ‘பரமஹம்சர்’, விவேகானந்த ‘சுவாமிகள்’, லோகமான்யதிலக ‘மகரிஷி’, இராமலிங்க ‘வள்ளலார்’ என்கின்ற சமீபகால மக்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன? இவர்கள் படம் பூஜிக்கப்படுவது எனக்குத் தெரியும். இவர்களை 100க்கு 75 மக்களுக்கும் தெரியும். ஆனால், 100ல் ஒருவருக்கு நடந்த நன்மை என்ன? அது போலவே இன்று பிரத்தியட்சத்தில் இருக்கும் காந்தி மகாத்மாகவும் திருப்பாலக்குடி, மஸ்தானும் வணங்கப்படுவதும், அவதாரமாகவும், நபியாகவும் கருதப்படுவதும், அதோடு மாத்திரமல்லாமல் அவர்களது மலம் முதல் சுவாசக்காற்று வரை மதிக்கப்படுவது எனக்குத் தெரியும்.
“மகாத்மா”
திரு. காந்தியைவிட ‘மஸ்தான்’ சாயபுக்கு உண்மையிலேயே மதிப்பு அதிகம் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அனேகர் திரு. காந்தியை மனிதராகவே கருத வேண்டுமென்றே தங்கள் சுயநலத்திற்கும், ஆதிக்கத்திற்கும், வயிற்றுவளர்ப்புக்கும், திரு. காந்தியை ஏமாற்றுவதற்கும் அவரை மகாத்மா என்று சொல்லுகிறவர்கள், திருப்பாலக்குடிசாயபை உண்மையிலேயே தெய்வத்தன்மை பொருந்தியவராக மதித்து, பூஜித்து வருகிறார்கள். எங்கள் ஊரில் இருந்து அனேக பி.ஏ.பி.எல்., எம்.ஏ., முதலியவர்களும், உயர்ந்த ஜாதியார் பிராமணர் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுபவர்களுமே போய் அவரது எச்சிலை சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். எச்சில் கலந்த தண்ணீரை பழனி பஞ்சாமிர்தம் போல் டின்னில் அடைத்துக் கொண்டு வந்து இருக்கின்றார்கள். ஆனால், இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கின்றேன்.
திருப்பாலக்குடி சாயபை ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணாத காரணத்தால், அவரது எச்சில் கலந்த தண்ணீரை குடித்து லாபம் பெறலாமென்று கருதி, மக்கள் மூடர்களாக வேண்டியதாயிற்று. அதுபோலவே திரு. காந்தியை மகாத்மா என்று கருதியதால், அவரது காரியத்தால் ஏற்படும் தீமைகளும், நஷ்டங்களும், இழிவுகளும் எல்லாம் அதற்குமாறாக கருதப்பட வேண்டியதாயிற்று, ஆனால் என்னுடைய காரியங்களுக்கு அப்படிப்பட்ட விபரீதப்பலன் ஏற்படவேண்டாம் என்றே கருதுகிறேன். எனக்காக எந்த மனிதனும் எவ்வித நஷ்டமும் அடைய வேண்டாம் எதையும் நம்பவேண்டாம். நான் கூறுபவை களை வெகு ஜாக்கிரதை யாய் அலசிப் பார்க்கவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். ஆகையால் நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்துபார்க்க மாட்டார்கள். ‘நான் அயோக்கியன்’ என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும். உதாரணமாக இன்றைய கீதை என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் அக்கிரமம், தந்திரம், முன்னுக்குப் பின் முரண், மக்களை மக்கள் இழிவுபடுத்துவது என்பவைகள் யாருடைய புத்திக்காவது விளங்குகின்றதா? ஏன் விளங்கவில்லை? அதைச் சொன்ன மனிதனை இன்னான் என்றே எதற்காகச் சொன்னான் என்றே உணர முடியாமல் ‘பகவான் சொன்னார்’ என்று சொல்லப்பட்டதால் இன்றைய உலக மக்கள் எல்லோருக்குமே அது பொருந்துவதாகும் என்று சொல்லக் கூடிய அளவுக்குப் புகழப்படுகின்றது. அதுபோலவேதான் புராணங்கள், சாஸ்திரங்கள், வேதங்கள் என்கின்ற ஆபாசக் களஞ்சியங்கள் எல்லாம் மதிக்கப்படுகின்றன.
ஆகவே, அந்தப்படி மதிக்கப்படாமல் எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப்பெறவேண்டுமானால், நான் அயோக்கிய னாகவும், பணம் சம்பாதிப்பவனாகவும் திருடனாகவும், கருதும்படியாக பிரச்சாரம் செய்பவர்கள் உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்தக் காரணத்தைக்கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள்.
தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் “இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி” என்று எழுதியிருந்தது. ஆனால், இதுவரை அடி விழவில்லை. இங்கும் “இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது” என்றும் “இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி” என்றும் எழுதி இருந்தது.
“இராமசாமி பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும்” என்று எழுதியிருந் ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்குநான் வருத்தப்படவேண்டும். அதுபோலவே, “இராமசாமி மனைவி கற்புக்கரசி” என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரிமழை வரச் செய்து பயன் பெற்று இருந்தால் “இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி” என்பதற்கு நான் விசனப்படவேண்டும். ஆகவே, அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், இவைகளிலிருந்து ஒரு அளவுக்கு நான் ‘வெற்றி பெற்று விட்டேன்’ என்பதை மாத்திரம் உணருகிறேன். என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்புப் பெறவேண்டுமென்று கருதி இருந்தாலும், நானே எனக்குத் தீங்கு தேடிக்கொண்டவனேயாவேன், அது எப்படியோ போகட்டும்.
பறையனுக்குப் பெண் கொடுப்பாயா?
ஜாதியை நாங்கள் ஒன்றாக்குகின்றோமாம். ஆம். ஆக்கமுயற்சிக்கின்றோம். அதில் சந்தேகமில்லை. ஆனால், சீக்கிரத்தில் முடியுமா என்பது சந்தேகம். மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும். அதற்குத் தடை செய்கின்றவர்கள் அயோக்கியர்கள், மடையர்கள் என்று தைரியமாய்ச் சொல்லுகின்றோம். எங்கள் பெண்களைப் பறையனுக்குக் கொடுப்போமா? என்று கேட்கப்படுகின்றது.
இது ஒரு அறிவீனமான கேள்வி, அல்லது அயோக்கியத்தனமான கேள்வி என்றே சொல்லுவேன். ஏனெனில், எங்கள் பெண்களை நாங்கள் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர் களுடன் கூடி வாழச் செய்யப்போகின்றோமே யொழிய, எங்களுக்கு இஷ்டமானவர் களுக்குக் கொடுக்கும் உரிமையைக் கொண்டாடுகின்றவர்கள் அல்ல, பெண்களை ஒரு சாமானாகக் கருதி, ஒருவருக்குக்கொடுப்பது என்கின்ற முறையை ஒழிக்க முயற்சிக்கின்றோம். நண்பர்களே! நாங்கள் ஆதிதிராவிடர்களைப் பற்றி பேசும் போது பார்ப்பனர்கள் மனவருத்த மடைவதில் அர்த்தம் உண்டு. ஆனால், பார்ப்பனரல்லாதார் மனவருத்தமடைவதில் சிறிதும் அர்த்தமில்லை. அது வெறும் முட்டாள் தனமும், மானமற்றதன்மையுமேயாகும். ஏனெனில், நமது சமுகத்தில் பார்ப்பனர் என்கின்ற கூட்டத்தாராகிய 100க்கு 3 வீதமுள்ள ஜனத்தொகை நீங்கி, மற்ற ஜனங்களுக்கு இந்த நாட்டில் சூத்திரன் (அடிமை), ஆதிதிராவிடன் (பறையன்) என்கின்ற பட்டமில்லாமல் வேறு எந்தப் பட்டத்தோடாவது யாராவது இருக்க முடியுமா? இருக்கின்றார்களா? என்று கருதியும், அனுபவத்தையும் கொண்டு பாருங்கள். சூத்திரன் என்கின்ற கலத்தில் நீங்கள் பதியப்பட்டிருப்பதல் உங்களுக்குச் சிறிதாவது மானம் இருந்தால் பறையன் என்கின்ற பட்டம் போகவேண்டுமென்பதில் கடுகளவாவது வருத்தமிருக்குமா? என்று கேட்கின்றேன். பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப்பட்டம் போய்விடும் என்று கருதினீர்களேயானால் நீங்கள் வடிகட்டினமுட்டாள்களேயாவீர்கள். மற்றும், பேசப் போனால் பறையன் சக்கிலி என்பதற்கு இன்னார் தான் உரிமை யென்றும், அது கீழ் ஜாதியென்பதற்கு இன்னது ஆதாரமென்றும் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. கை பலமேயொழிய, தந்திரமேயொழிய வேறில்லை. ஆதலால், அதாவது சீக்கிரத்தில் மறைந்து விடக்கூடும், உங்கள் சூத்திரப்பட்டத்திற்குக் கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், கோவில் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையையும் நாசமாக்கி, அடியோடு ஒழித்தாலல்லாமல் உங்கள் தலையில் இருக்கும் சூத்திரப்பட்டம் கீழே இறங்காது. ஆகவே. யாருக்காவது மான உணர்ச்சி இருந்திருந்தால் “நீங்கள் ஜாதி ஒன்றாக்குகின்றீர்களே” என்று நம்மைக் கேட்டிருக்க மாட்டார்கள். ஆகவே, ஆதி திராவிடர் நன்மையைக்கோரி பேசப்படும் பேச்சுகளும், செய்யப்படும் முயற்சிகளும், ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லாருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.
நான் மாறுவது – நான் அடிக்கடி கொள்கைகளில் மாற்றமடைவதாக சொல்லப் படுகின்றது. வாஸ்தவமாக இருக்கலாம். நீங்கள் ஏன் அதை கவனிக்கின்றீர்கள்? ஒரு மனிதன் அவன் பிறந்தது முதல் இன்றுவரை திருடிக்கொண்டே இருக்கின்ற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால் அவன்மகா யோக்கியனா? என்று கேட்கின்றேன்: எந்த மனிதனும் ஒரே நிலைமையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப் படுகின்றீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன லாபம்? மாறுதல் முற்போக்குள்ளதா? பிற்போக்குள்ளதா? அதனால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்பன போன்றவைகளை கவனிக்கவேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
மற்றும், பொது நன்மையை உத்தேசித்து கஷ்டப்படுகின்ற மக்கள் நன்மையை உத்தேசித்து மாறினானா? அல்லது சுயநலத்திற்கு அக்கிரமமான லாபமடைவதற்கு மாறினானா? என்று பார்க்கவேண்டும். யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்பாளி, கவலையாளி ஆகியவர்கள் மாற வேண்டியது அவசியமாகலாம். அதைப்பற்றிய கவலை ஏன்? யார் எப்படி மாறினாலும் பார்க்கின்றவர்களுக்குப் புத்தியும் கண்ணும் சரியாய் இருந்தால் மாற்றத்தைப் பற்றி ஒன்றும் ஆபத்து வந்துவிடாது. நான் பல தடவை மாறி இருக்கலாம். பல குட்டிக்கரணங்கள் போட்டிருக்கலாம். சுயநலத்திற்காகவும் குட்டிக்கரணம் போட்டிருக்கலாம். பச்சோந்தியாய் இருக்கலாம், அதனால் உங்களுக்கென்ன கெடுதி? நாடகக் கொட்டகையில் நாடகம் பார்க்கின்ற போது ஒரு மனிதன் எத்தனை வேஷம் மாறி மாறிப் போட்டு நடிப்பதை நீங்கள் காசு கொடுத்துப்பார்த்து விட்டு நடித்தவனையும் புகழ்ந்துகொண்டு போகின்றீர்களா? அல்லது இல்லையா? என்பதை நினைத்துப் பாருங்கள், அதனால் நீங்கள் ஏமாந்தா போய்விடுகின்றீர்கள்? அதுபோல் எங்களை நினைத்துக்கொண்டு வந்து நாங்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு போங்கள். பிறகு, உங்கள் புத்திக்குப் பட்டதை ஒப்புக்கொள்ளுங்கள், மற்றதைத்தள்ளிவிடுங்கள். இன்றையதினம் நான் சொல்லுபவைகள் கூட எனக்கு முடிந்த முடிவா என்பது சந்தேகம்தான். அன்றியும் உங்களுக்கு இன்றைய நிலைமையில் கால வர்த்தமானத்தைப் பொறுத்தவரையில் இவ்வளவுதான் சொல்லலாம் என்று கருதிக்கொண்டு சில விஷயங்களில் அளவாகவே பேசுகின்றேன் என்றும் சொல்லலாம்.
கோவில் கட்டிய மக்கள் கோவிலை இடிக்க வேண்டியவர்கள் ஆகிவிடுவார்கள். அஹிம்சை பேசுபவர்கள். பலாத்காரத்தைப் பேசவேண்டியவர்களாகி விடுவார்கள். இராஜவிசுவாசிகள் இராஜதுரோகிகள் ஆகிவிடுவார்கள். திருடக்கூடாது என்பவர்கள் கொள்ளை அடிக்கச் சொல்லுவார்கள். இப்படியாக அபிப்பிராயங்கள் மாறிக் கொண்டு போகலாம். இவற்றையெல்லாம் அபிப்பிராயங்கள் மாறியதாலேயேகுற்றம் என்று சொல்லிவிட முடியாது. தங்களை நல்ல சூத்திரர்கள் என்று சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் கால்களைக்கழுவிய தண்ணீருக்குப் பவுன்கொடுத்து சாப் பிட்டவர்கள், இன்று “சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டடி” என்றும் “பார்ப்ப னர்கள் ஜாக்கிரதை” என்றும் ஏன் சொல்லுகின்றார்கள்? இந்த மாற்றத்தால் இப்படிச் சொன்னவர்கள் அயோக்கியர்களாகி விடமுடியுமா? தவிர (“சூத்திரன் பணம் வைத் திருந்தால் பிராமணர்கள் பலாத்காரத்தால் அதை பறித்துக் கொள்ளலாம்” என்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தது மாறி இப்பொழுது வெள்ளையர் தர்மத்தில் “தந்திரங்களினாலும் சூழ்ச்சிகளாலும் மாத்திரம் தான் பறித்துக் கொள்ளலாம்” என்கின்றதான மாறுதல் ஏற்பட்டுவிட்டது. நாளை ஒருசமயம் சமதர்ம காலத்தில் ‘பிராமணன் (சரீரத்தில் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால் மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம்’ என்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். இந்த மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும், பகுத்தறிவுக்கும், நாட்டின் முற்போக்குக்கும் ஏற்றாற்போல் நடந்து தான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படவில்லை. நாளை நான் எப்படி மாறப்போகின்றேன் என்பது எனக்கே தெரியாது. ஆதலால் நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.
தேசியத்திற்கு விரோதியாவது
மற்றும் நான் தேசியத்திற்கு விரோதியென்று சொல்லப்படுகின்றது. கடவுளுக்கும், மதத்திற்கும் விரோதியான ஒருவன் கேவலம் தேசியத்திற்கும் விரோதியாவது ஒரு அதிசயமல்ல. மற்றயாருடைய தேசியத்திற்கும் நான் விரோதியா? அல்லது இல்லையா? என்பது விவகாரத்திற்கிடமானதாயிருந்தாலும், உயர்திரு. காந்தியவர்களின் தேசியத்திற்கு நான் சரியான விரோதியேயாகும் அதிலும் பார்ப்பனிய தேசியத்திற்கு எவ்வளவு விரோதியோ அதை விட பலமடங்கு அதிகமான விரோதியேயாகும் கராச்சி நவ ஜவான் வீரர்கள் “காந்தி வீழ்க! காந்தீயம் வீழ்க!!” என்ற சொல்வதற்கு 2, 3 வருஷத்திற்கு முன் பிருந்தே நான் காந்தி தேசியத்திற்கு விரோதியாகி இருக்கின்றேன். காந்தீயம் ஒழிந்தாலொழிய இந்த நாட்டிற்கு விடுதலையோ, சமத்துவமோ, சுயமரியாதையோ இல்லை என்று கருதிக் கொண்டு இருக்கின்றவன். காந்தி தேசியமெல்லாம் வெள்ளைக்கார ஆட்சியைப் பிடுங்கி, பார்ப்பனனிடமும், பணக்காரனி டமும் கொடுத்து, வருணாசிரம ஆட்சி ஆக்கவேண்டும் என்கின்ற ஒரே கொள்கை கொண்டதுதான்.
உதாரணம் வேண்டுமானால், அவரது கதர் தத்துவத்தையும், கிராம முன்னேற்றத் தத்துவத்தையும் நன்றாய் கவனித்துப் பார்த்தால் அப்பொழுது அவைகள் வருணா சிரமத்தை ஆதரிப்பதே ஒழியவேறில்லை என்பதை விளக்கும். அன்றியும். திரு. காந்தியே “வருணாசிரமத்தை நிலைநிறுத்தவே சுயராஜ்யத்தை வேண்டுகிறேன்” என்பதுவாக பல தடவை சொல்லி இருக்கிறார்.
அவர் எண்ணமெல்லாம் “இந்தியாவைப் பழங்கால நிலைமைக்குக் கொண்டு போக வேண்டு” மென்பதேயாகும். இந்தக் கருத்தை உள்ளே வைத்துக் கொண்டு தான் அதற்கு இடையூறாயிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சி மீது மக்களுக்கு விரோதம் ஏற்படும்படி நடிக்கின்றார். ருஷிய ஆட்சியை விட, மற்றும் ஏதாவது ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சி மோசமானதாக இருக்கலாமே யொழிய இராமன், அரிச்சந்திரன், கிருஷ்ணன், மனு, சேரசோழ பாண்டியன் முதலியவர்களின் ஆட்சியைவிட 1000 பங்கு வெள்ளையாட்சி மேலான தென்றே சொல்லுவேன், உதாரணமாக திரு. இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் முந்தாநாள் பேசியதை கவனியுங்கள்.
“பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை, ஜாதிப்பிரிவு, மதத்துவேஷம் முதலியவை கள் தான் நமது தேசத்தின் பெரும் விரோதிகள். அன்னிய ஆட்சியை விட அவை கொடியன. இவை ஒழிந்தா லொழிய பூரண சுயேச்சை என்பது கிடையாது” என்று சாந்தி நிகேதனத்தில் இருந்து உலக மக்களுக்குச் சேதி அனுப்பியிருக்கின்றார். திருகாந்தி தேசியம் இந்தியாவின் மேற்படி விரோதிகளை ஒழிக்குமா? அல்லது அதைக் கொடுமையினதல்லாத அன்னிய ஆட்சியை ஒழித்து, அக்கொடுமைகளை நிலை நிறுத் துமா? யோசித்துப் பாருங்கள். தேசியம் என்று சொல்லிவிட்டதாலேயே பாம்புப்புற்றில் கையைவிட வேண்டுமா? நெருப்புக்கு முத்தம் கொடுக்க வேண்டுமா? என்று கேட்கின்றேன் சகோதரர்களே! நமது கொள்கை காந்தி தேசியமாகிய காங்கிரசுக்கு விரோதமானதேயாகும். வருணாசிரமத்திற்கும், முதலாளி தத்துவத்திற்கும் விரோதமானதேயாகும். மேலும், அவற்றிற்கு அனுகூலமாயிருக்கும் கடவுள், மதம் என்பன வாகியவற்றிற்கும் விரோதமேயாகும். இன்னும் எங்குபோய் நிற்கும் என்று என்னாலேயே சொல்ல முடியாது. ஆகவே நீங்கள் எதற்கும் உங்கள் பகுத்தறிவைத் தைரியமாய் உபயோகியுங்கள்.
குடிஅரசு – சொற்பொழிவு – 11.10.1931