புதுடில்லி, ஜூலை 1- வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் முதல்கட்ட பணிகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்குவதாக மக்கள் தொகை பதிவாளர் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு எடுத்திருக்க வேண்டும். ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த கணக்கெடுப்பு வருகிற 2027ஆம் ஆண்டு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.
இது நாட்டின் 16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். அதேநேரம் நாடு விடுதலை அடைந்தபின் மேற்கொள்ளப்படும் 8ஆவது நடவடிக்கை இதுவாகும்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி முதலில் வீட்டுப்பட்டியல் தயாரிப்பும், அடுத்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஆகும்.
இதில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி குறித்த தகவல் சேகரிப்பு அடங்கிய முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்குவதாக இந்திய மக்கள் தொகை பதிவாளர் ஜெனரல் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்து உள்ளார்.
பணிப் பகிர்வு
இந்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மற்றும் மேற்பார்வை யாளர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கு பணிப்பகிர்வு ஆகியவை அளிக்கப்படும் என்றும் தனது கடித்தில் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல்கட்ட வீட்டுப்பட்டியல் தயாரிப்பு மற்றும் வீட்டுவசதி குறித்த கணக்கெடுப்பில் குடும்பத்தினரின் வீட்டின் நிலைமை, சொத்து மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.
அடுத்ததாக நடைபெறும் மக்கள் தொகை கணக் கெடுப்பில், குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கை, சமூக-பொருளாதார, கலாச்சார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.
36 கேள்விகள்
இந்த 2ஆம் கட்ட பணிகள் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரங்களும் சேகரிக்கப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், மேற் பார்வையாளர்களும் மற்றும் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்.
இந்த கணக்கெடுப்பு அலைபேசி செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்புக்காக சுமார் 36 கேள்விகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
வீடுகளைப் பற்றிய மொத்த தரவுகள்
குறிப்பாக அலைபேசி, இணையதளம், வாகனங்கள் (சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், ஜீப், வேன்) மற்றும் உபகரணங்களின் (ரேடியோ, டி.வி., டிரான்சிஸ்டர்) உள்ளிட்டவையின் உரிமை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.
மேலும் தானிய நுகர்வு, குடிநீர் மற்றும் விளக்கு ஆதாரம், கழிவறைவகை, கழிவுநீர் வெளி யேற்றம், குளியலறை, சமையலறை வசதிகள், அடுப்புக்கான எரிபொருள் மற்றும் கியாஸ் இணைப்பு போன்றவை குறித்தும் கேள்விகள் கேட்கப்படும்.
இவற்றை தவிர தரை, சுவர், கூரையின் வகை, அதன் நிலை, அங்கத்தினர் எண்ணிக்கை, அறை எண்ணிக்கை, திருமணமான இணையர்கள் இருப்பு, பெண் தலைமையிலான குடும்பமா? எஸ்.சி. அல்லது எஸ்.டி. குடும்பமா? என்பன போன்ற விவரங்களும் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.