போபால், ஜூலை 1- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை தனியாக என்ன செய்ய முடியும்? என்று மாநில காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினப் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. காவல்துறை பெயரளவிற்கு சிலரைக் கைது செய்தாலும், அவர்கள் உடனடியாக பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், மாநிலத்தில் பெண்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, மாநில காவல்துறை இயக்குநர் கைலாஷ் மக்வானா கூறியதாவது:
“பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை தனியாக என்ன செய்ய முடியும்? பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இணையதளம், கைபேசி போன்ற வற்றில் பாலியல் தொடர்பான காணொலிகள் அதிகம் பரவி வருகின்றன. மதுப்பழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஆகவேதான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன,” என்று பதிலளித்தார்.
கடந்த மாதம் போபாலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில், டில்லி-மும்பை நெடுஞ்சாலையில், பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் மனோகர் தகாத் என்பவர் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த நிகழ்வை சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் படம் பிடித்தனர்.
மேலும், கண்காணிப்பு கேமராவிலும் பதிவானது. மனோகர் தகாடை கைது செய்த மாநில காவல்துறை, உடனடியாக அவரைப் பிணையில் விடுத்தது.
இந்த நிலையில், மனோகர் தகாத் பெண்ணைப் பாலியல் வன் கொடுமை செய்யும் காணொலியை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 2024 ஆம் ஆண்டில் 73 காவல்நிலைய பாலியல் வன்கொடுமைகள் பதிவாகி உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.