வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது அமைச்சர் சிவசங்கர் உறுதி

Viduthalai

சென்னை, ஜூலை 1- வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை, அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கெனவே 20.05.2025 அன்று வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது மீண்டும் மின் கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது. தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தினால் வெளியிடப் படவில்லை.

எந்தவொரு மின் கட்டண உயர்வும் கிடையாது

முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *