சென்னை, ஜூலை 1- சென்னை நகா், புறநகா் பகுதி ரயில் நிலையங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவா்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 158 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 127 போ் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
புகார்கள்
கல்லூரி மாணவா்கள் கும்பலாக ரயிலில் வரும் போது சில நேரங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்கின்றனா். அவா்கள் மீது அவ்வப்போது ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். இதுபோல ஒழுங்கீனமாக நடந்துகொண்ட புகாா்களின்பேரில், 2023 முதல் நிகழாண்டு (2025) வரையில் 158 போ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. அவா்களில் 127 போ் கைது செய்யப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கண்காணிப்பு
மாணவா்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவங்களில் வழக்குப்பதியப்பட்டதால், தற்போது அது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், இருப்பினும், மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் மாணவா்கள் அதிகம் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருமண சர்ச்சை வழக்குகள்
உச்சநீதிமன்றம் விளக்கம்
புதுடில்லி, ஜூலை 1- ஒரு திருமண சர்ச்சை தொடர்பான வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், கோடீஸ்வரசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி விஸ்வநாதன் பரபரப்பு கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
திருமண சர்ச்சை வழக்குகளில், நாங்கள் சமரச பேச்சு வார்த்தைக்கு பரிந்துரைத்தால், அதுதொடர்பாக தவறான புரிதல் நிலவுகிறது. கணவன்-மனைவியை சேர்ந்து வாழுமாறு நாங்கள் சொல்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்களோ, பிரிந்து செல்கிறார்களோ அதுபற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. வழக்கில் ஒரு தீர்வு ஏற்படுவதை மட்டுமே விரும்புகிறோம். இருப்பினும், அவர்கள் சேர்ந்து வாழ்வதற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
15 வகை மருந்துகளுக்கு கருநாடகாவில் தடை
பெங்களுரு, ஜூலை 1- தரமற்றது மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் குணமுள்ள ‘பாராசிட்டமல்-650’ உள்பட 15 வகையான மருந்து, மாத்திரை கர்நாடக மாநில அரசு தடை செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், பொதுமக்கள் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டதுடன், தரமற்றதாக உள்ள மருந்து-மாத்திரைகளை மருத்துவமனைகள், கிடங்குகள், மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்றும் மாநில அரசின் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.