அரங்கு நிறைந்த மாணவர்கள் மத்தியில்
“தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” மக்கள் பதிப்பு
(தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பு அறிமுக விழா
தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
“தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” மக்கள் பதிப்பு
(தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பு அறிமுக விழா
தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
சென்னை, ஜூலை 1 “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய புத்தகத்தின் மக்கள் பதிப்பு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பு அறிமுக விழா 29.6.2025 அன்று மாலை, சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
மாலை 6 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் இரா.ராஜீவ் காந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தி.மு.க.வின் அய்ம்பெரும் முழக்கங்களைச் சொல்ல, திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியினர் அதனைத் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
மாணவர் கூட்டமைப்பின் பணிகள்
அடுத்து நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மக்கள் பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தோரைத் திராவிடர் மாணவர் கழக மாநிலச் செயலாளர் பொறியாளர் இரா.செந்தூர்பாண்டியன் வரவேற்று உரையாற்றினார். தேசியக் கல்விக் கொள்கை 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் தொடங்கி, திராவிட கழகம் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஆற்றிவரும் பணிகளையும், தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொண்ட தொடர் பிரச்சாரப் பயணங்களையும், போராட்டங்களையும், மாணவர் கூட்டமைப்பின் பணிகளையும் எடுத்துக்காட்டினார்.
“தேசியக் கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” புத்தகத்தின் மக்கள் பதிப்பை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, சென்னை கல்லூரி மாணவர்கள் சார்பாக ஈஸ்வரமூர்த்தி, ரோஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோர் அமைச்சரிடம் இருந்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் வரிசையில் நின்று புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
தயாராக இருக்கிறோம்
பின்னர் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்புரை ஆற்றினார். இந்தப் புத்தகத்தை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டதும், உடனடியாகத் தான் படித்துவிட்டதாக தெரிவித்த ஆசிரியர் அவர்கள் அதில் திருத்தங்களை முன்மொழிந்தார்கள் இப்போது அந்த திருத்தங்களைச் செய்து ஆசிரியரிடம் கொண்டு வந்து காட்டுவதற்காக நான் வந்திருக்கிறேன். நான் எழுதிய புத்தகத்தை அறிமுகப்படுத்திட எங்கள் தலைமையகத்திற்கு எங்கள் ஆசிரியர் அய்யாவின் உரை கேட்பதற்கு வந்திருப்பது என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறு என்று மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கேற்ற மொழியில் தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகள் விளக்கப்பட வேண்டும் என்றும், யார் இது குறித்துக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக் கூடிய அளவுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மனு தர்மத்தை விதைக்கும்
அதனைத் தொடர்ந்து பாராட்டுரையையும், தலைமையுரையையும் ஆற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர், தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால் மனுதர்மத்தை விதைக்கும் ஒன்றிய அரசைச் சாடினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துவிட்டு மனுதர்மத்தை அரியணையில் ஏற்ற பாஜக அரசு முயல்வதை எடுத்துக் காட்டினார். (உரை தனியே)
மாணவர்கள் மத்தியில் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. அரங்கு நிறைந்திருந்த அவையிலும், அரங்கத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த எல்.ஈ.டி. திரையிலும் மாணவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் இரா.ராஜீவ்காந்தி நன்றியுரையாற்றினார். இந்த வாய்ப்பை வழங்கி, நிகழ்ச்சியில் சிறப்பாக உரையாற்றிய தமிழர் தலைவருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் ராஜா தமிழ்மாறன் இணைப்புரை ஆற்றினார். தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர்கள் தமிழ் கா.அமுதரசன், வி.ஜே.ஜே.இராமகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வானவில் விஜய், திராவிடமாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர்கள் மு.இளமாறன், செ.பெ.தொண்டறம், மாணவர் கழக விளையாட்டு அணி அமைப்பாளார் ம.பூவரசன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
சான்றோர் பெருமக்கள்
நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்கள் இளைஞ்செழியன், தேவராஜ் பாண்டியன், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குரைஞர் பரந்தாமன், சங்கர், மாவட்டச் செயலாளர் சிற்றரசு, மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உ.பலராமன், வழக்குரைஞர் ரவிச்சந்திரன், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி துணைச்ச் செயலாளர் சேகர், எழுத்தாளர் முத்துவாவாசி, புலவர் பா.வீரமணி உள்ளிட்ட ஏராளமான சான்றோர் பெருமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.