சென்னை, ஜூன் 30- மீனவர் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக் கிறார்.
நெருக்கடி நிலை காலத்தில், ஒன்றிய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு குறித்து இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தினால் தான் மீனவர்களின் உரிமைகள் பறிக்கப் பட்டு, கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
ஏற்றுக்கொள்ளத் கூடியதல்ல
1974ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தின் போது, நெருக்கடி நிலை அமலில் இல்லை. இந்த ஒப்பந்தம் குறித்து 1974ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன்சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றியிருக்கிறார்.
இந்த விவாதத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்று கருத்துகளை கூறியிருக்கிறார்கள். நாடாளு மன்றத்திற்கு தெரியாமல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக பொறுப்புள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
வாஜ்பாய் ஆட்சியிலும்…
காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, பிரதமர் வாஜ்பாய் 6 ஆண்டுகால ஆட்சியிலும், பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியிலும் கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமர்களோடு எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா? உண்மையிலேயே மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவு காரணமாக இருந்தால் அதுகுறித்து இலங்கை அரசிடம் பேசியிருக்கலாம்.
மாறாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளேடுகளுக்கு அளித்த பேட்டியில், கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே தமிழ் நாட்டின் கோரிக்கையாக இருக்கிறதே என்ற கேள்விக்கு, பதிலளிக்கும் போது, ‘பன்னாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் என்னென்ன செய்ய முடியும் என்பதை செய்வது தான் எங்களது நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.
இறையாண்மைக்கு உட்பட்ட…
கச்சத்தீவை மீட்க வேண்டு மென்று சொன்னால், இந்திய அரசு, இலங்கை அரசோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, பன்னாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் என்று கூறுவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.
இதன்மூலம் கச்சத்தீவை மீட்பதற்கு அக்கறையில்லை என்பதைத் தான் இது உறுதி படுத்துகிறது. ஆனால் கச்சத்தீவை வழங்கியது குறித்து, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிலில், இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட எந்த பகுதியும் வழங்கப்படவில்லை என்றும், எந்த பகுதியும் கையகப்படுத்தப் படவில்லை என்றும் பதில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பா.ஜ.க.வினர் மறுக்க முடியுமா?
அதேபோல, பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் அன்று தலைமை வழக்குரைஞராக இருந்த முகுல் ரொக்டகி தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு இந்திய அரசால் வழங்கப்பட்டது. அதை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கை அரசுடன் போரையா தொடுக்க முடியும்? என்று கூறியதை பா.ஜ.க.வினர் எவராவது மறுக்க முடியுமா? கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2024 டிசம்பர் வரை 10 ஆண்டுகளில் சுமார் 400 படகுகள் உட்பட 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
படகுகள் பறிமுதல் செய்யப் பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டு பிரதிநிதிகளை கொண்ட கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது.
பா.ஜ.க. அரசிற்கு அக்கறையில்லை
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய இக்குழு 2020ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறையும் கூடவே இல்லை.
மீனவர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு அக்கறையில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. தமிழ் நாட்டு மீனவர்கள் கச்சத் தீவுக்கு அருகில் கைது செய்யப் படுவதில்லை.
ஆனால், இரவு நேரங்களில் பன்னாட்டு எல்லையை அறியாமல் இலங்கை கடற் பகுதியில் செல்லும் போது கைது செய்யப்படுகிறார்கள். எனவே, இலங்கை அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில், இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தர இலங்கை அரசோடு பேச ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்ய வேண்டும்.
திசைதிருப்பக் கூடாது
இதைப்போன்ற ஒரு பேச்சு வார்த்தை டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியின் போது, 2013 இல் இலங்கை அரசோடு நடத்தப்பட்டதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். எனவே, 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி பிரச்சினையை திசைதிருப்பக் கூடாது.
இதன்மூலம் மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பா.ஜ.க.வுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.