அனுமான் முதல் ஆடுவரை தடுப்பூசி போட்டதாக கொள்ளையோ, கொள்ளை!
புதுடில்லி, ஜூன் 19 தடுப்பூசி போட்டவர்களின் ஆதார் விவரங்களை தனிநபர்கள் சிலர் டிஜிட்டல் திருட்டில் ஈடுபட்டு வெளியிட்ட போது, அதில் அனுமான் படம் போட்ட ஆதார் அட்டைக்கு 6 டோஸ், ஆடு படம் போட்ட ஆதார் அட்டைக்கு 3 டோஸ், என கணக்கில் அடங்காத போலி ஆதார்அட்டைகளுக்குத் தடுப்பூசி போடப் பட்டதாக காட்டப்பட்ட விவரம் வெளியாகி உள்ளது
கோவின் என்ற தடுப்பூசி இணையதள தரவுகள் கசிந்ததை அடுத்து இதில் யார் யாருக்கெல்லாம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் அனுமானுக்கு 6 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ‘‘ஆடு முதல் ஆண்டவன்வரை” அனைவருக்கும் தடுப் பூசி போடப்பட்டதாக தரவுகளில் இது போன்ற தகிடுதத்தங்கள் செய்ததாலேயே நாட்டில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசி போடப் பட்டுள்ளதாக கணக்குக் காட்டப்பட்டு உள்ளது. தவிர, இந்த கணக்குகள் மூலம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டது அல்லது சுருட் டப்பட்டுள்ளது என்ற கேள்வி ‘பூதாகரமாக’ எழுந்துள்ளது.
மேனாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு பொதுவெளியில் வெளி யிடப்பட்டது குறித்து பலரும் அதிர்ச்சி தெரிவித் துள்ளனர்.
இந்நிலையில், கோவின் செயலியை உரு வாக்கியவர்கள் யார்? அதற்கான செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் இதுகுறித்த தகவல் ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கித் கவுரவ் என்ற சட்டக் கல்லூரி மாணவர் 2021 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் அளித்த மனுவுக்கு பதிலளித்துள்ள ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் “நீங்கள் கேட்டுள்ள தகவல் எதுவும் அமைச்சகத்திடம் இல்லை” என்று கூறியுள்ளது.
ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு அங்கித் கவுரவ் அனுப்பிய கேள்விக்குத்தான் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகிய இரண்டிலும் கோவின் செயலியை உருவாக்கியவர்கள் யார் என்ற விவரம் இல்லாத நிலையில், தற்போது தரவு கசிவு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.