விருதுநகர், ஜூன் 29 சிறீவில்லி புத்தூர் கோயில் அர்ச்சகர்கள் குடித்து விட்டுக் கும்மாளம் போட்டதை திசை திருப்பும் போக்குக் கண்டனம் தெரிவித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற அரங்கநாதன் கண்டன அறிக்கை.
விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலின் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் (30), குட முழுக்கு பணிக்கு வந்துள்ள வினோத், கணேசன் ஆகியோர் அர்ச்சகர்களுடன் சேர்ந்து வீட்டில் ஆடும் ஆபாச காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.
காவல்துறையினர் விசாரணை
பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் அர்ச்சகர்கள் மது அருந்துவதாகவும், அர்ச்சகர் கோமதி விநாயகம் அவருடைய வீட்டில் மது அருந்தி ஆபாசமாக ஆட்டம் போட்டதாகவும், கோயிலுக்கு வரும் சில பெண்கள் முகத்தில் மொத்தமாக விபூதியை அள்ளிவீசி, அவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு மகிழ்வது எனப் பதிவுகள் அத்துமீறலில் ஈடுபடும் என காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி, கடும் கண்டனத்தை உள்ளாக்கியது. இதனையடுத்து பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சிறீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் இந்தப் பார்ப்பன அர்ச்ச்சகர்களைக் காப்பாற்றும் வகையிலும், அனைத்து ஜாதியினர் சட்டத்தின் அடிப்படையில் பயிற்சி பெற்று பணியமர்த்தப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சர்கள் மீது அவதூறு பரப்பும் வகையிலும், சமூக ஊடகங்கள் முதல்
ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘தி ஆர்கனைசர்’ இணையதளத்திலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அப்பட்டமான பொய்யைப் பரப்புவதா?
இது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வி.அரங்கநாதன், “மேற்கண்ட அர்ச்சகர்களின் செயல் கடும் கண்டனம் மற்றும் நடவடிக்கைக்குரியது. ஆனால், இப்பிரச்சினையை மடைமாற்றும் விதமாக, இந்து முன்னணி, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள் சமூக வலைதளங்களில், குற்றம் செய்த அர்ச்சகர்கள், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் திட்டத்தில், திமுக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற அப்பட்டமான பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.
உண்மையில், சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், ஆர்.எஸ்.எஸ் – பா ஜ க – இந்து முன்னணி வலியுறுத்தும், பாரம்பரிய வழக்கப்படி, நியமிக் கப்பட்ட பார்ப்பனர்கள். மூவரும், அரசு அர்ச்சகர் பள்ளியில் பிடிக்க வில்லை. பார்ப்பனர்கள் நடத்தும் அர்ச்சகர் பள்ளியில் படித்தவர்கள்.
உண்மை இவ்வாறிருக்க, அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆகக் கூடாதெனப் பிரச்சாரம் செய்யும், இந்து முன்னணியினர், பொய் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
கேள்வி எழுப்பினார்களா?
இந்து மதத்தைக் காக்க இப்போது பேசும், இந்து முன்னணி, காஞ்சி மட சங்கராச்சாரியார் மீது எழுத்தாளர் அனுராதா ரமணன் பாலியல் புகார் கொடுத்த போது, கொலை வழக்கில் சங்கராச் சாரியார் கைதானபோது எங்கே போனார்கள்? ஜக்கி வாசுதேவின் ஈஷா மய்யத்தை நட்சத்திர விடுதியாக மாற்றியது, காஞ்சிபுரத்தில் கருவறையில் தேவநாதன் செய்த பாலியல் லீலை, கோயில் உண்டியலில் திருடும் பார்ப்பன அர்ச்சர்கள், குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை, மர்ம மரணங்கள், ரகசிய தகன மேடைக்கு கேள்வி எழுப்பினார்களா? எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற திட்டத்தின் மீது திராவிட அரசின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
பொய் செய்திகளை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் இவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பார்ப்பன அர்ச்சகர்களின் அடாத செயலுக்கு, பார்ப்பன ரல்லாதார் மீது பொய்யாக இட்டுக்கட்டிப் பழி போடும் ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவாரின் சதிச் செயலை எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம் என்று சமூக நீதி உணர்வாளர்கள் கருத்துத் தெரித்துள்ளனர்.