சென்னை, ஜூன் 29- எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் பொதுக்குழுவை ஒட்டி ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை- பெரியார் திடலில் 28.6.2025 அன்று காலையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
“சமூகநீதியை சமத்துவ நீதியாக்கு வோம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்த ரங்கத்திற்கு ஊழியர் நலச் சங்கத்தின் தலைவர் ச.அய்யனார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நீ.கல்வி கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றிட தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சுந்தரேஷ் பேசிய பின்னர் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் அமைப்புச் செயலாளர் ராஜ்மோகன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ம.சிந்தனைச் செல்வன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கழகப் பொருளார் வீ.குமரேசன் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு 2027இல் முழுமையான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திடுவதற்கு அறிவிப்பு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கருத்தியலுடன் அதன் அரசியல் பிரிவாக செயல்பட்டுவரும் பா.ஜ.க. இதுநாள் வரை ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரான கருத்துகளையே பேசி வந்தது. பிரதமர் மோடி ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் ‘நகர்ப்புர நக்சல்கள்’ என விமர்சித்து வந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடு தழுவிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது சற்று எச்சரிக்கையுடன் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
எச்சரிக்கை தேவை
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஒரு வழியாக நடத்தி முடித்துவிடுவார்கள். ஜாதிவாரி விவரங்கள் மட்டுமே சமூகநீதிக்கான பாதையாக அமைந்துவிட்டது. இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகப் பேசிவரும் ஆர்.எஸ்.எஸ்., அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டு நடந்து வரும் பா.ஜ.க. ஒன்றிய அரசு ஜாதிவாரி விவரங்களை எப்படிக் கையாளப் போகிறது என்பதை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
மக்கள் போராட்டம்
கடந்த கால செயல்பாடுகள் அவர்களை நம்பும்படி இருக்கவில்லை என்பதே உண்மை நிலை. சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்த வகுப்புரிமை ஆணை செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு அளித்த வேளையில் தந்தை பெரியார் மாபெரும் மக்கள் போராட்டத்தை சென்னை மாகாணம் முழுவதும் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தார். அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த வேளையில், அதன் முதல் திருத்தத்தின் மூலம் புதிய பிரிவான 15(4)அய் கொண்டுவரக் காரணமாக அந்தப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாகாணத்தில் மட்டும் நிலவி வந்த வகுப்புரிமை ஆணையின் பயன்கள் நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களான இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் ஜாதியினர், பட்டியல் மலைவாழ் பழங்குடியினர் அனைவருக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் கிடைக்கின்ற வகையில் பிரிவு 15(4) அமைந்தது. அன்றைய சட்ட அமைச்சராக இருந்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அறிமுகப்படுத்திய, பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அடையாளமாக சமூகரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட (Socially and educationallly backward) நிலைமை அந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய பா.ஜ.க.வின் முன்னோடியான ஜனசங்கத்தின் தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி பொருளாதார அடிப்படையில் (economically) பிற்பட்ட நிலையிலும் உள்ளடக்க வேண்டும் என்று பேசினார். பொருளாதார அடிப்படை நிலையில்லாதது, அடிக்கடி மாறக் கூடியது என விளக்கம் கூறியதும், ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் அந்த பொருளாதார அடிப்படையைச் சேர்ப்பது குறித்து நாடாளுமன்ற அவையினரின் வாக்குக்கு விட்டனர். பொருளாதார அடிப்படை கூடாது என்று 241 வாக்குகளும், ஜனசங்கத்தினர் விரும்பிய பொருளாதார அடிப்படை வேண்டும் என்பதற்கு 7 வாக்குகளும் கிடைத்து பொருளாதார அடிப்படை நிராகரிக்கப்பட்டது. அன்று நிராகரிக்கப்பட்ட பொருளாதார அடிப்படையை கொண்டுவர இன்றைய பா.ஜ.க. அரசு நலிவடைந்த பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என அரசமைப்புச் சட்டத்தை திருத்தி நடைமுறைப்படுத்தி உள்ளது. சமூகநீதி கோட்பாட்டிற்கு இந்தத் திருத்தம் எதிரானது.
கூடுதலாக பெறுகின்ற வகையில்…
அப்படிப்பட்ட பா.ஜ.க. ஆட்சியா ளர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை சமூகநீதிக் கோட்பாட்டிற்கு எதிராகப் பயன்படுத்திட வாய்ப்பு உண்டு. ஒடுக்கப்பட்டோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்களிடம் இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்போதுள்ள இடஒதுக்கீடு அளவினை தக்க வைத்து, கூடுதலாகப் பெறுகின்ற வகையில் செயல்பட வேண்டும். பட்டியல் ஜாதி / பழங்குடி மரபினர் ஊழியர் நலச் சங்கங்கள், இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கங்கள் விழிப்புணர்வுடன் இருந்து சமூகநீதியை ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைக்கின்ற சமத்துவ நீதியாகப் பெற்றிடும் வகையில் செயல்பட வேண்டும். – இவ்வாறு கழகப் பொருளாளர் உரையாற்றினார்.
கருத்தரங்கில் எல்.அய்.சி. ஊழியர் நலச் சங்கப் பொறுப்பாளர்கள், க.கார்குழலி, ஜெ.எம்.எல்.ஆன்டனி, எல்.அய்.சி. பட்டியல் ஜாதி / பழங்குடி மரபின ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள் இரா.ஜானகிராமன், க.ஜனார்த்தனம், கொடுங்கையூர் கோ.சுந்தரமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்று உரையாற்றினர். நிறைவாக பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கப் பொதுச் செயலாளர் சகோ. க.மஞ்சு நன்றி உரையாற்றினார்.