மதுரை, ஜூன் 29- பயிற்சி பெண் மருத்துவர்களும் பிரசவ விடுமுறையை பெற தகுதியானவர்கள் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த கிருத்திகா, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை பொது அறுவை சிகிச்சை பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அப்போது என்னுடைய எம்.பி.பி.எஸ். கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட அசல்சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தேன். அதை பெற்றுக் கொண்ட நிர்வாகம், படிப்பு முடிந்த பின்பு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும். அதன்பின்புதான் அசல் சான்றிதழ்களை ஒப்படைப்போம் என்ற ஒப்பந்தத்துக்கு சம்மதித்தேன்.
அதன்படி முதுகலை பட்டப்படிப்பை முடித்தேன். பின்னர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் 5.9.2019 அன்று நியமிக்கப்பட்டேன். அந்த நேரத்தில் எனக்கு குழந்தையும் பிறந்தது. இதனால் பிரசவ கால விடுமுறையில் இருந்தேன் 26.11.2021 அன்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தேன். இதையடுத்து என் அசல் கல்விச் சான்றிதழ்களை திருப்பி கொடுக்கும்படி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் கேட்டேன். அவர்கள் நிராகரித்தனர். என் கல்விச்சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
பிரசவ விடுமுறை
அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படிப்பை முடித்த பின்பு திட்டக்குடி மருத்துவமனையில் 12 மாதங்கள் மட்டுமே பணியாற்றி உள்ளீர்கள். மேலும் 12 மாதம் பணியாற்றிவிட்டு அசல்கல்விச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இது ஏற்புடையதல்ல.எனக்கு கல்விச்சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள்
ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் முதுகலை பட்டப் படிப்பை முடித்த பின்பு, 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை மருத்துவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு 12 மாதம் பணியாற்றி இருக்கிறார்.பின்னர் பிரசவத்துக்காக விடுமுறையில் 12 மாதம் இருந்து உள்ளார்.
சான்றிதழ்களை வழங்க வேண்டும்
அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவகால விடுமுறையாக 12 மாதம் அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில் மனுதாரரும் அரசு ஊழியர்களை போல 12 மாத பிரசவ விடுமுறையை பெற தகுதியானவர் தான். அவரது பிரசவ விடுமுறை நாட்களை பணிக்காலமாக கருத வேண்டும். எனவே மனுதாரர் மேலும் 12 மாதம் பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரது அசல் கல்விச்சான்றிதழ்களை 4 வாரத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.