புவனேஸ்வர், ஜூன் 29- ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் திருவிழாவில் ஒரே சமயத்தில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில், சிக்கிய 600க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் களில் 9 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது. 5 பேர் பலி.
ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று முன்தினம் (27.6.2025) கோலாகமாக துவங்கியது. பூரி ஜெகன்நாதர் ரத உற்சவம், ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறும்.
பல்வேறு பூஜைகள் முடிந்ததும், காலை 8 மணிக்கு பஹந்தி ஊர்வலம் நடைபெற்றது.
ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் கோவிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள சிறீகுந்திச்சா கோவில் வரை இழுக்கப்படும். சில நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோவிலுக்கு இழுத்து வரப்படும்.
கூட்ட நெரிசல்
இந்த ரத யாத்திரையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே சமயத்தில் குவிந்தனர். இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, பாலகன்டி பகுதியில் தேர் சிக்கிக் கொண்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 70 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘625 பக்தர்கள் வாந்தி, மயக்கம் மற்றும் சிறு காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவித்தனர்.