சென்னை, ஜூன்19– அமலாக்கத்துறை அப்பட் டமாக அரசியல் செய்கிறது என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், மேனாள் அமைச்சருமான கக்கனின் 116ஆவது பிறந்த நாள் நேற்று (18.6.2023) கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, சென்னை சத்திய மூர்த்தி பவனில் உள்ள கக்கன் உருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து காங்கிரசு கட்சியின் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் நலிந்த காங் கிரஸ் கட்சியி னர் 5 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித் தொகையை கே.எஸ்.அழகிரி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற காங்கிரஸ் கட்சி தலை வர் செல்வப் பெருந்தகை, காங்கிரசு மேலிட பொறுப்பாளர் சிறீவல்லபிரசாத், துணைத் தலைவர் ஆ.கோபண்ணா, பொதுச்செயலாளர் பி.வி. தமிழ்செல்வன், தளபதி பாஸ்கர், விஜய் வசந்த் எம்.பி., இலக்கிய அணி தலைவர் பி.எஸ். புத்தன் உள்பட மாநில- மாவட்ட நிர்வாகிகள் பங்கேற் றனர்.
அதனைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பரப்புரைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வரு கிறது. தேசத்துரோகி போல, ஒரு அமைச்சரை நள்ளிரவில் அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங் கட்டும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 18 மணி நேர விசாரணை எதற்காக?. டில்லியில் பா.ஜ.க. எம்.பி. மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றம் கூறியிருக்கின்றனர். அது மட்டுமன்றி 33 ஒன்றிய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப் படவே இல்லை.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை அரசியல் செய்வது அப்பட்டமாக தெரிகிறது. சித்ரவதை செய்வது தவறு. செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் பிரச் சினை இருந்திருக்கிறது.
மக்கள் பணி காரணமாக அதைப்பற்றி அவர் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் அவரை அமலாக்கத்துறை சித்ரவதை செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் 2024ஆம் ஆண்டில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.