அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிக அளவில் உறுப்பினராக்குவோம்

viduthalai
2 Min Read

கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

கோவை, ஜூன் 28-  கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மதிமுக மாவட்ட தலைமை அலுவலக முதல் தளத்தில் 22.6.2025 அன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் பி.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அக்ரி.நாகராசு வரவேற்புரை ஆற்றினார். அவர் களைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு ராஜசேகர், கழக பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, மாநகர செயலாளர் புலியகுளம் கா.வீரமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை சிறப்பாக எடுத்துரைத்தனர்.

கலந்துரையாடலில் நோக்க உரையாக பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும.வீரமணி தனக்கு ஒதுக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் (கோயமுத்தூர், நீலமலை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி) உள்ள பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கோவை மாநகரில் பகுத்தறிவாளர்கள் எவ்வாறு திறம்பட செயல்படுகிறது என்றும் அதனை அடுத்த கட்ட தளத்திற்கு கொண்டு செல்ல எவ்வாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் சிறப்பாக விளக்கி கூறினார்.

அதனைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் பேசும் பொழுது பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் அவர்கள் எப்போது – ஏன் தோற்றுவித்தார் என்றும், அதன் செயல்பாடுகள் எவ்வாறு சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றும் உலக அளவில் உள்ள பல்வேறு நாத்திக அமைப்புகளில் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கிய திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகம் தான் முதன்மை இடத்தில் திகழ்கின்றன என்று உலக நாடுகளில் உள்ள நாத்திக அமைப்புகள் பாராட்டியதை எடுத்துக் கூறினார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த அமைப்பில் நாம் பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் அதிக அளவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக்க வேண்டும் என்று சிறப்பானதொரு உரை ஆற்றினார். மேலும்

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாதாந்திர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து பல்வேறு தலைப்புகளில் பெரியாரின் கருத்துகளை கருத்தரங்க கூட்டமாக நடத்த ஏற்பாடு செய்து புதிய இளம் பேச்சாளர்களை தயார் செய்ய வேண்டும் என்றார். இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் எட்டிமடை நா.மருதமுத்து நன்றி உரை கூற சிறப்பாக முடிவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *