நமக்கு முழு அறிவையும் கொடுக்கக் கூடிய நூல் திருக்குறள் ஒன்றுதான்.
திருக்குறள் முழுவதும் படித்து விட்டால் அரசு வேலைக்கு பட்டப் படிப்புத் தேவையில்லை – தந்தை பெரியாரின் அறிவுரை.
முழு அறிவையும் கொடுக்கும் நூலாக தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட திருக்குறளை ஆசிரியர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உரையாற்றும்போதும் சரி – வாழ்வியல் சிந்தனைகள் எழுதும் போதும் சரி – அறிக்கைகள் எழுதும்போதும் சரி குறிப்பிடாமல் விட்டதில்லை.
திருக்குறளை ஆய்வு செய்யும் புலவர்கள் இலக்கண வரம்புக்குட்பட்ட பொருளுக்கு மேலே சிந்திக்க மாட்டார்கள். தந்தை பெரியார் சொல்வதைப் போல அறிவுக்கு எல்லைக் கோடு இடாமல் ஆசிரியர் சிந்திப்பதன் விளைவு சில நல்ல கருத்துகள் வெளிவருகின்றன.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்ற குறளில் உள்ள கசடு அற என்பதற்கு ஆசிரியர் கூறியுள்ள கருத்து சிறப்பானது. .. நீக்குங்கள் – தவறைத் தள்ளுங்கள் – சரியானவற்றை மட்டும் வடிகட்டி வாழக் கற்றுக் கொள்ளுங்கள் – என்று பொருள் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியான பொருளேயாகும்.
வள்ளுவர் குறள் என்பது – அவரே இன்னொரு குறளில் குறிப்பிட்டிருப்பது போல தொட்டனைத் தூறும் மணற்கேணி அல்லவா – அது மட்டுமா காமத்துப் பாலில்,
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
என்று கூறியிருப்பதைப் போல நாம் குறளைப் படிக்கும் தோறும் புதுப்புதுக் கருத்துக்கள் (காமத்துக்கு மட்டுமல்ல) குறளுக்கும் தோன்றும்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
என்ற குறளுக்கு பிறர்படும் துன்பத்தைக் கண்டு தன் துன்பம் போல் கருதி காப்பாற்ற வேண்டும் என்று பதில் கூறும்போது, சிம்பதி – எம்பதி என்று ஆங்கிலத்தில் இரு வார்த்தைகள் உண்டு. சிம்பதி பிறர் துன்பத்தைக் கண்டு பரிதாபப்படுவது – எம்பதி என்பது தனது துன்பமாகவே கருதி உதவி செய்வது என்றொரு விளக்கத்தினை தஞ்சை திருக்குறள் பேரவையில் உரையாற்றும் போது ஆசிரியர் விளக்கினார்.
எனவே, திருக்குறள் முழுமைக்கும் ஆசிரியர் உரை எழுத வேண்டும். தெய்வம் தொழார் என்பது போன்ற குறளுக்கு அக்கால உணர்வுகள்படி வள்ளுவர் கருத்தை கூறி விட்டு கீழே குறிப்பு என்பதில் ஆசிரியர் கருத்தைக் குறிப்பிடலாம்.
ஆசிரியரின் திருக்குறள் ஆய்வு தொடரட்டும் – தொடர்ந்து வெளி வரட்டும். முழுமையான குறள் உரையும் வெளி வரட்டும்.
வாழ்க வள்ளுவம்.
– திருக்குறள் ச. சோமசுந்தரம், தஞ்சாவூர்