சென்னை, ஜூன் 28 அதிமுகவை விழுங்குவது என்ற பாஜகவின் திட்டத்தை அதிமுக வினர் எப்போது புரிந்து கொள் வார்கள்? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தொகுதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கை நிலைப்பாடுகளுக்கு முரணாக அமையாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தான் முடிவெடுப்போம்.
பா.ஜ.க.வின் குறிக்கோள்
கூட்டணியில் அதிமுக அமைதியாக இருக்கிறது. இதன்மூலம் பாஜகதான் அணியை வழிநடத்துகிறது என்ற பார்வை மேலோங்கி இருக்கிறது. இங்கே பாஜக நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும்? அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் குறிக்கோள். அதை அதிமுகவினர் எப்போது புரிந்து கொள்வார்கள். எங்களுக்கு தொகுதி குறைவது பிரச்சினையல்ல. ஏனென்றால் நாங்கள் ஆட்சி செய்த கட்சியல்ல. ஆனால் அதிமுக தற்போதும் 65 உறுப்பினர்களைக் கொண் டிருக்கிறது. அது தேய்மானம் அடைய அதிமுக உடன்படுகிறதா. அப்படியொரு செயல் திட்டத்தோடு பாஜக இயங்குகிறதா?
தற்கொலைக்குச் சமம்
முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களைக் கொச்சைப்படுத்தி காட்சிப் பதிவு ஒளிபரப்பி இருக்கின்றனர். இதில் உடன்பாடில்லை என்று மட்டும் அதிமுக சொல்வது சரியான கருத்தாகத் தெரியவில்லை. பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்தும் பாஜக, சங்பரிவார் அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது தற்கொலைக்குச் சமமானது. பாஜகவின் வலதுசாரி அரசியலை பேசுவோர் மீது ‘பி டீம்’ என்ற விமர்சனம் வருகிறது. திமுகவை எதிர்ப்பதால் மட்டுமே அவ்வாறு கூறப்படுவதில்லை. பெரியாரை அவமதித்த பிறகும் விஜய் அமைதி காக்கும் சூழலில், அவர் உண்மையிலேயே பெரியாரை ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.