ஆர்.எஸ்.எஸ். கருத்துக்கு வைகோ கண்டனம்
சென்னை, ஜூன் 28 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட தன்
50-ஆம் ஆண்டை ஒட்டி நடை பெற்ற நிகழ்ச்சியில், “அவசர நிலையின் போது இந்திய அரசமைப்பின் முகவுரையில் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகிய 2 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இந்த 2 வார்த்தைகளும் முகவுரையில் இருக்க வேண்டுமா. அவை நீக்கப்பட வேண்டும்” என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறி இருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் அரசியல் சாசனத்தை மாற்றி எழுத வேண்டும் என்று நீண்ட காலமாகவே கூப்பாடு போட்டு வருகின்றன.
நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து இந்துராஷ்டிரம் அமைக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜக அரசு மூலம் மூர்க்கத்தனமாக இறங்கி உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவை அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசின் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன.
எனவே, இந்துத்துவ ஸநாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் உறுதி ஏற்க வேண்டும்’’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.