சென்னை, ஜூன் 28 மதுரை ஆதீனம் மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் மே 2-ஆம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது. இருவரது காரிலும் லேசான சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஆதீனம் தன்னை உளுந்தூர்பேட்டை பகுதியில் காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஆதீனத்தின் கார் டிரைவர் சென்றதால்தான் இந்த விபத்து நடைபெற்றதாக கூறி, சிசிடிவி பதிவுகளை வெளியிட்டனர். மேலும், மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
மதுரை ஆதீனம்மீது வழக்குப் பதிவு
இந்நிலையில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ராஜேந்திரன் கடந்த 24ஆம் தேதி சென்னை காவல் ஆணையருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், ‘மதுரை ஆதீனத்துக்கு நடந்த சாலை விபத்து தொடர்பாக, ஒரு மாநாட்டிலும், பல செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அவரை வாகன விபத்து மூலம் கொலை செய்ய சதி திட்டம் நடந்திருப்பதாகவும், கொலை செய்ய வந்தவர்கள் தொப்பியும், தாடியும் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டு, இரண்டு சமூகத்தினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில், சிறுபான்மையினர் குறித்து தவறான கருத்துகளை பரப்பிய மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் துறையினர், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மீது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒருவரைத் தூண்டிவிடுதல், வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.