முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களால் தமிழ்நாட்டில் 6 லட்சம் மகளிர் தொழில் முனைவர்களாக உள்ளனர்!

viduthalai
1 Min Read

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பாராட்டு!

சென்னை, ஜூன் 28 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மகளிர் முன்னேற்றத்திற்கு செயல் படுத்தியுள்ள திட்டங்கள் மூலம், 6 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் தொழில் முனைவேர்களாக வெற்றிநடை போடுவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து நேற்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளது.

பெண்களை தொழில் முனைவோர்களாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதயோகினி திட்டம் மூலம் புத்தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன் வழங்குவது மட்டுமின்றி, சவால்களை எதிர்கொள்ளுதல், திறனை மேம்படுத்துதல், தொழிற்சாலை செயல்பாடுகள் குறித்து பெண்களுக்குப் பயிற்சியளித்து, பொருட்களை வணிகப்படுத்துவது வரை, தமிழ்நாடு அரசு ஊக்கமளித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு உதவும் மகளிர் திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்காற்றுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையில் மட்டும் 6 லட்சத்து 23 ஆயிரம் பெண்கள் தொழில்முனைவோர்களாக உயர்ந்துள்ளனர். தென்னிந்தியாவிலேயே மகளிர் தொழில் முனைவோர் அதிமுள்ள மாநிலமும் தமிழ் நாடுதான்.

மாநிலத்தில் எம்.எஸ்.எம்.இ. துறையில் மகளிர் தொழில்முனைவோர் விகிதம் 23.5 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்திருப்பதாகவும், தேசிய அளவில் சிறுதொழில் துறையில் தமிழ்நாட்டு மகளிர் 10.22 சதவிகிதம் பங்களிப்பதாகவும் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களும், மகளிர் முன்னேற்றத்திற்கு அளிக்கும் உத்வேகமும்தான் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *