பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக்கிவிட்டோம் என்று மார்தட்டும் பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண்களை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்வது சாதாரண நிகழ்வாகி விட்டது.
மத்தியப் பிரதேசம் அலி ராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு சந்தையில் பழங்குடியினப் பெண் துப்பாக்கி முனையில் கடத்தப் பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் அலி ராஜ்பூர் மாவட்டம் மிகவும் பின் தங்கிய பழங் குடியின மக்கள் அதிகம் வாழும் மாநிலம் ஆகும்.
இங்கு சந்தை நடந்துகொண்டு இருக்கும் போது அனைவரது முன்னிலையிலும் துப்பாக்கி முனையில் பழங்குடியினப் பெண் ஒருவர் உயர்ஜாதியின ஆண்களால் பைக்கில் கடத்தப்பட்டுள்ளார். 25 ஆண்டுகளாக இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. இங்கு சட்டத்தின் ஆட்சி பொருட்டல்ல.
பழங்குடியின மக்களின் வாழ்வு பாதுகாப் பற்றதாகவே இருக்கிறது.
சம்பவம் ஜூன் 18 அன்று அலி ராஜ்பூரில் உள்ள போரி சந்தைப் பகுதியில் 17 வயது சிறுமி தனது அக்காவுடன் சந்தையில் பொருட்களை விற்பனைக்கு அடுக்கிக்கொண்டு இருந்தபோது நாட்டுத்துப்பாக்கியோடு திரைப்படங்களில் வருவதுபோல் மூன்று நபர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் தனது அக்காவுடன் சந்தையில் பொருளை விற்றுகொண்டு இருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் பலவந்தமாகத் தூக்கிச் சென்றனர்.
பலர் அதை வேடிக்கைப் பார்த்தனரே தவிர, ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை. மேலும், இதனைச் செய்தவர்கள் உயர்ஜாதி நபர்கள். ஆகையால் அவர்களை தடுத்து நிறுத்த யாருமே முன்வரவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில், மூன்று நபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தை வைத்திருப்பதும், பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது அக்காவையும் அச்சுறுத்துவதும் தெரிகிறது.
வாரத்திற்கு ஒருமுறை கூடும் சந்தையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு இருந்துள்ளனர்
ஆனால் இந்த நிகழ்வின் போது காவலர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை.
இந்த கொடூர நிகழ்வு தொடர்பாக அலி ராஜ்பூர் எஸ்.பி. ராஜேஷ் வியாஸ் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இஜேஷ் அம்லியார், சோட்டு அம்லியார், சதியா (எ) சந்தோஷ் ஆகிய மூவரையும் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைப் பிடிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் குறித்த தகவலுக்கு ரூ.5000 வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீது தொடர்ந்து இது போன்ற கொடுமைகள் நடப்பதாக கூறியுள்ளனர்
ஆளும் பாஜககட்சியில் பிரமுகர்கள் பலர் உயர் ஜாதியினர். ஆகவே, இந்த கொடூரமான நடவடிக்கைகளை காவல்துறையும் கண்டு கொள்வதில்லை.
ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூரிலும் இதே போன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். இந்த இரண்டு கடத்தல் சம்பவங்கள், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளன. இத்தகைய சம்பவங்கள் பகல் நேரத்தில் நடப்பதும், காணொலிகளில் பதிவாவதும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.