புதுடில்லியில் ஒரு குடும்பத்தில் 56 ஆண்டு களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது, இது அந்தக் குடும்பத்தினரை பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை அவர்கள் பட்டாசு வெடித்தும், உற்சாகத்துடனும் கொண்டாடினர். குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரும் காட்சிகளைக் கொண்ட ஒரு காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
“56 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது,” என பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் காணொலி இணையவாசிகளின் மனதை நெகிழவைத்து, பலரும் தங்கள் மகிழ்ச்சியையும் கருத்துகளையும் பகிர்ந்தனர்.
“அனைத்து பெண் குழந்தைகளும் இது போன்ற அன்பான வரவேற்பைப் பெற வேண்டும். ஆனால், சிலருக்கு அது கிடைப்பதில்லை. இந்தக் குழந்தைக்கு, உண்மையிலேயே நல்ல வாய்ப்புதான்,” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
மற்றொரு பயனர், “ஆண் குழந்தைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகில், ஒரு பெண் குழந்தைக்கு இப்படியொரு அற்புதமான வரவேற்பு கிடைத்திருப்பது மனதை நெகிழவைக்கிறது,” என்று பகிர்ந்தார்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு, பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தையும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அன்பையும் மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.