காரைக்குடியில் நடைபெற்ற “பெரியார் எனும் பெரும் நெருப்பு” கழக பரப்புரைக் கூட்டம்

viduthalai
3 Min Read

காரைக்குடி, ஜூன் 27–- சுயமரியாதைச் சுடரொளி காரைக்குடி ச.அரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும்  திராவிடர் கழகக் கொள்கை விளக்கப் பரப்புரைக் கூட்டம்

24.06.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு காரைக்குடி ராஜீவ் காந்தி சிலை அருகில், மாவட்டத் தலைவர் வைகறை தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் சி.செல்வ மணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் இ.ப. பழனி வேல், மாநகரத் தலைவர் ந.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக இளம் பேச்சாளர்கள் நா.நவீன், முகமது ஃகைப் ஆகியோர் பெரியார் குறித்து சிற்றுரையாற்றினர்.

மாவட்டத் தலைவர் வைகறை தனது உரையில், நம் நினைவில் வாழும் சுயமரியாதைச் சுடரொளி காரைக்குடி மாவட்ட மேனாள் தலைவர் ச.அரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவேந்தலை யொட்டி வேருக்கு விழுதுகளின் கொள்கை விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர் கழகத் தலைவர் ஆசிரியர் மீது அளப்பரிய அன்பு கொண்டவர். அவர் தன் வாழ்வில் பெரும் பகுதியை கழகத்திற்காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டினார்!

“பெரியார் எனும் பெரும் நெருப்பு” என்ற தலைப்பில் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரை யாற்றினார்.

அவரது உரையில், திராவிட நாகரிகத்தின் உச்சமான கீழடி அகழாய் வைத் திசை திருப்பவே மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

கீழடியில் கிடைக்கப்பெற்ற 5,820 பொருட்களில் கடவுள், மதம் தொடர்பான பொருட்கள் ஏதும் இல்லை, அப்படி இருந்திருந்தால் வேதகால நாகரிகம் என்று ஆரியர்கள் கொண்டாடி இருப்பார்கள்.

நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள வைப்பதும், ஆதாரங்களை மறுப்பதும் அவர்களுக்கு கைவந்த கலை. தென் மாவட்டங்களின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு துணையான சேதுக்கால்வாய் திட்டத்தை, ராமன் பாலம் என்கிற கற்பனையால், நம்பிக்கையால் தடுத்து விட்டார்கள். இன்றைக்கு வடக்கே சரஸ்வதி நதி என்ற நம்பிக்கையை நிலை நிறுத்த, வேதகால நாகரிகத்தை நம்ப வைக்க தடையாக இருக்கிறது கீழடி அகழாய்வு அறிக்கை அதனால் தான் ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட மறுக்கிறது.

உலகத் தரமான ஆய்வுகளை, ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளாமல் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டுதான் ஆரியம் நம் மீது பண்பாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதி தான்  முருக பக்தர்கள் மாநாடு எனும் ஆரிய அரசியல் மாநாடு. அந்த மாநாட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஆகிய நம் தலைவர்களை இழிவுபடுத்தி காணொலி வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பக்தியை விட, பெரியார் எனும் பெரு நெருப்பு தான் அவர்களைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு எத்தகைய மடை மாற்றத்தையும், திசை திருப்பலையும் தூள் தூளாக்கும் என்று உரையாற்றினார்.

 திண்டுக்கல் ஈட்டி கணேசன்

“மந்திரமா? தந்திரமா?” என்ற அறிவியல் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடத்தினார்.

நிகழ்வில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் செல்வம் முடியரசன், ப.க. ஆலோசகர் சு.முழுமதி, கல்லல் ஒன்றிய கழக தலைவர் பலவான்குடி சுப்பையா, கல்லல் ஒன்றிய கழக செயலாளர் கொரட்டி வீ.பாலு, மாவட்ட ப.க துணைத் தலைவர்கள் முனைவர் செ. கோபால்சாமி, கவிக்கோ அரவரசன், காரைக்குடி மாநகர துணைத் தலைவர் பழனிவேல் ராசன், கைவல்யம், காரைக்குடி மாநகர அமைப்பாளர் பால்கி, தேவகோட்டை ஒன்றியச் செயலாளர் ஜோசப், காளையார் கோயில் ஒன்றியத் தலைவர் அழகர்சாமி, காளையார்கோயில் ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார், தி. தொ. க செயலாளர் சேகர், தேவகோட்டை நகரத் தலைவர் வீ. முருகப்பன், தேவகோட்டை நகரச் செயலாளர், திருவாடானை ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன்  பாரதிதாசன்,  ப. க கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநகரச் செயலாளர் அ.பிரவீன் முத்துவேல் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *