உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், அவரது *சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடந்த பாராட்டு விழாவில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து பேசியிருப்பது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “இந்தியாவில் அரசியல் சாசனம் தான் உச்சகட்ட அதிகாரம் படைத்தது. நாடாளுமன்றத்திற்கு சட்டங்களை திருத்துவதற்கு வேண்டுமானால் அதிகாரம் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது. அரசு நிர்வாகம் (Executive), சட்டம் இயற்றும் அவைகள் (Parliament), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்குபவை. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் நீதித்துறையின் கடமை” என்று பேசியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த பேச்சு தமிழ்நாடு சட்ட மசோதாக்கள் குறித்த சர்ச்சையுடன் தொடர்புடையதாகவே கருதப்படுகிறது. தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் குறித்தும், வேந்தர் பொறுப்பிலுள்ள ஆளுநரை நீக்கிவிட்டு, முதலமைச்சரை நியமிப்பது குறித்தும் பிறப்பிக்கப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதால் உச்சநீதிமன்றம் தலையிட்டு மசோதாக்களின் மீது முடிவெடுப்பதற்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு கால நிர்ணயம் வகுத்து தீர்ப்பளித்தது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பு குறித்து விமர்சித்த குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், “நாட்டில் நாடாளுமன்றமே உச்சபட்ச அதிகாரம் படைத்தது. குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் அவகாசம் நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை” என்று தெரிவித்திருந்தார். நீதிமன்றங்களின் அதிகாரம் குறித்த அவரது விமர்சனத்திற்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாகவே தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பேச்சு அமைந்துள்ளது.
அவரது கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில்,1973-ஆம் ஆண்டு கேரள அரசுக்கு எதிராக கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கில், 13 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில், “அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடாது. அதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது” என்று பிறப்பித்த உத்தரவையும் தலைமை நீதிபதி சுட்டிக் காட்டி பேசியுள்ளார். தலைமை நீதிபதி கூறியிருப்பதைப் போல், அரசு நிர்வாகம், சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் அரசமைப்புச் சட்டத்திலிருந்தே தங்களுக்கான அதிகாரங்களைப் பெறுகின்றன. உச்ச அதிகாரம் படைத்த இந்த மூன்று அமைப்புகளும் தங்களுக்குள் யாருக்கு அதிக அதிகாரம் என்ற பலப்பரீட்சையில் ஈடுபடாமல், ஒரு அமைப்பு தவறு செய்யும்போது, அதற்கு இணையான அதிகாரம் படைத்த மற்றொரு அமைப்பு அதை தட்டிக் கேட்டு அதிகாரத்தை சமநிலைப்படுத்த வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம். அந்த நோக்கத்தை மூன்று துறைகளைச் சார்ந்தவர்களும் உணர்ந்து கொண்டு, எல்லை மீறாமல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல விசயங் களைச் செய்ய வேண்டும். உச்சபட்ச அதிகாரம் படைத்த இந்த அமைப்புகளிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பதும் அதுவே.
(நன்றி: ‘இந்து தமிழ் திசை’ 27.6.2025)