சென்னை, ஜூன் 27 பிரின்ஸ் சிறீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த ‘பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை மற்றும் மரபுகளின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்’ குறித்த 2 நாள் பன்னாட்டு மாநாடு பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற் றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். பிரின்ஸ் கல்விக் குழும துணைத் தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேசன், கல்லூரி முதல்வர் பி. கல்பனா, துணை முதல்வர் ஜே.ஜானகி, தமிழ்த்துறை இணைப் பேரா சிரியர் வி.சிறீலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் க.சு.கந்தசாமி பழங்குடியின மக்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, கலை, மரபு குறித்து பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் வழங்கிய கட்டுரைகள் மற்றும் ஆய்வறிக்கை அடங்கிய ‘மண்ணின் மறு உலகம்’ எனும் மாநாட்டு மலரை வெளியிட்டார்.
அவர் உரையாற்றும்போது, “நாகரிக சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவரும் ஒரு காலத்தில் பழங்குடி இனத்தில் இருந்துதான் வந்திருக்கின்றோம். பழங்குடியின வாழ்க்கை முறையில் இருந்துதான் மனித வாழ்க்கை முறை தொடங்கியது.கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள்தான் நமக்கு அடையாளம். அந்த புரிதல் நமக்கு வேண்டும். இல்லையென்றால் நம்மை நாமே இழந்துவிடுவோம்.
பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் என்று பல விஷயங்களை பெற்றோர் நமக்கு தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றனர். இதை நாமும் உணர்ந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். வரலாறு தெரியவில்லை என்றால் அடுத்த தலைமுறையினர் நமது அடையாளத்தை இழந்துவிடுவர்” என்று கூறினார்.