முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
திருப்பத்தூர், ஜூன் 27 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.6.2025) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றுகையில், “தமிழ்நாடு தந்தை பெரியார் அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட மண். பிஜேபியின் போலி பக்தி நாடகத்தை மக்கள் நிராகரிப்பார்கள்” என்று உறுதிபடக் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஆற்றிய உரை வருமாறு:–
தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலமாக வருவாயும் ஈட்டி வேலைவாய்ப்பும் அளிக்கும் இந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் மாபெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நேற்று (25.6.2025) காட்பாடி இரயிலில் இறங்கி வந்ததிலிருந்து மக்களுடைய அதாவது உங்களுடைய வரவேற்பில் மனம் நிறைந்திருக்கிறேன்.
நாட்டின் வளர்ச்சியில் நூற்றில்
பத்து விழுக்காட்டில் நாம் இருக்கிறோம்!
இன்று நாம் பெருமையோடும், மகிழ்ச்சி யோடும் இந்த விழாவில் பங்கேற்று இருக்கி றோம் என்று சொன்னால், தமிழ்நாட்டின் நலன் மேல் அக்கறை இல்லாத கடந்தகால ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை நம்முடைய திராவிட மாடல் அரசு, இந்த நான்காண்டுகளில் மீட்டெடுத்து, வரலாறு காணாத வளர்ச்சிக்கு நாம் கொண்டு சென்றிருக்கிறோம்!
இதை நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகச் சொல்கிறேன் என்று நீங்கள் கருதவேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசால் கூட, நம்முடைய வளர்ச்சியை மறைக்க முடியவில்லை! அதனால்தான், ஒன்றிய அரசே, தமிழ்நாடு 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட, பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது! இந்தியாவின் G.D.P–யில் நம்முடைய பங்கு எவ்வளவு தெரியுமா? 9.21 விழுக்காடு! அதா வது, நாட்டின் வளர்ச்சியில் நூற்றில் பத்து விழுக்காட்டில் நாம் இருக்கிறோம்!
நாட்டிலேயே அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு!
அதுமட்டுமல்ல, சமூக முன்னேற்றக் குறியீடு களிலும், நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம்! உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில், முதலிடம் தமிழ்நாடு! வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் இரண்டாவது இடம் நாம் இருக்கிறோம்! நீடித்த வளர்ச்சிக் குறியீட்டிலும் – மருத்துவக் குறியீட்டிலும் மூன்றாவது இடம்! பணவீக்கம் குறைந்த மாநிலம்! நாட்டி லேயே அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட – நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து வருகிறது!
எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம்!
வேளாண்துறை மூலமாக பாசனப் பரப்பும், வேளாண் உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது! தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்! தேசிய சராசரியைவிட, தமிழ்நாட்டில், தனிநபர் வருமான வளர்ச்சி பல ஆண்டுகளாக அதிகமாக இருக்கிறது! இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தலைநகரான சென்னையைச் சுற்றி மட்டும் வளர்ச்சி என்று செயல்படாமல், தமிழ்நாட்டின் அத்தனைப் பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்று செயல்படுவதுதான் காரணம்! ‘எல்லா ருக்கும் எல்லாம்’ என்பது போல் – ‘எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம்’ என்கிற வகை யில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். இத னால்தான், நகரப் பகுதிகளைப் போலவே கிராமப் பகுதிகளும் வளருகிறது!
நான் கோட்டையிலிருந்து மட்டும் பணி களைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்க ளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தது ஒரு மாதத்திற்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டம் – தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன்!
“குடிசையில்லா தமிழ்நாடு!”
நாம் அறிவிப்புகள் மட்டும் செய்வதில்லை; அவற்றை விரைந்து செயல்படுத்தி, அதையும் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டு இருக்கி றோம்! நேற்று, நான் திருப்பத்தூர் வரும் வழியில், பூதூர் ஊராட்சியில் இருக்கும் ‘கலைஞர் கனவு இல்லத்திற்கு’ச் சென்று பார்வையிட்டேன். அங்கு குடியிருந்த ஒரு தாயை – அவருடைய வீட்டிற்குச் சென்று நான் சந்தித்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் மகிழ்ச்சிதான் என்னு டைய மகிழ்ச்சியும்!
முத்தமிழறிஞர் கலைஞரின் முக்கியமான கனவுகளில் ஒன்று, “குடிசையில்லா தமிழ்நாடு!” அந்தக் கனவை நனவாக்கும் வகையில், கலைஞரின் பெயரிலான கனவு இல்லம் திட்டத்தில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதி களில் 6 ஆண்டுகளில், எட்டு இலட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தரப் போகிறோம். ஒரு வீட்டுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் தருகிறோம். கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சம் வீடுகள் கட்டு வதற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தோம். அதில், 90 ஆயிரம் வீடுகள் கட்டி முடித்துவிட்டோம். மீதமுள்ள வீடுகள் பணியும் விரைந்து நடைபெற்றுகொண்டு வருகிறது! இதை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன் – கேட்டுக் கொண்டே இருப்பேன்.
இதேபோல், ஒன்றிய அரசு வீடு கட்டும் திட்டமும் இருக்கிறது! அது ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். யாருடைய பெயரில்? பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் என்று அதற்குப் பெயர்!
ஒரு வீடு கட்டுவதற்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதில், 60 விழுக்காடு நிதியை ஒன்றிய அரசும், 40 விழுக்காடு நிதியை மாநில அரசும் தர வேண்டும். ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்தில் வீடுகட்ட முடியுமா? அதிலும் 60 சதவீதம் அதா வது, 72 ஆயிரம் ரூபாய் தான் ஒன்றிய அரசு தருகிறது. மீதி கூடுதலாக, நம்முடைய மாநில அரசு, ஒரு இலட்சத்து 62 ஆயிரம் ரூபாயை வழங்கி வீடு கட்டித் தருகிறோம்.
திட்டத்தின் பெயர்தான் அவர்களுடையது!
நிதி நம்முடையது!
பெயர்தான் அவர்களுடையது! நிதி நம்முடையது! அதனால்தான், நான் ஏற்கெனவே ஒரு டயலாக்கை நினைவு படுத்தினேன்… “மாப்பிள்ளை அவர்தான்; ஆனால், அவர் அணிந்து கொண்டிருக்கக்கூடிய சட்டை என்னுடையது!” இப்படிதான், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை ஒழுங்காகத் தருவது இல்லை! தந்தாலும் அரைகுறைதான்!
இந்த நிலையில் ஒன்றியத்தில் இருக்கின்ற வர்களின் எண்ணம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களை மதத்தால் – ஜாதியால் – பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களால் முடியாதபோது, இங்கு இருக்கக்கூடிய அ.தி.மு.க. கட்சியையும் சேர்த்துக்கொள்கிறார்கள். நாம் கேட்பது, நாட்டில் வளர்ச்சி சரிகிறது… மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது… வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால், பி.ஜே.பியும், அ.தி.மு.க.வும் மக்களைப்பற்றி கவலைப்படாமல், மதத்திற்காகக் கவலைப்படுகிறார்கள்! இதுதான் அவர்களுடைய அரசியல்.
தந்தை பெரியார் உருவாக்கிய மண் – அண்ணா வளர்த்த மண் – கலைஞர் அவர்கள் மீட்ட மண்
தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என்று அ.தி.மு.க.வை வைத்துக்கொண்டு, பா.ஜ.க. பேசுகிறார்கள்! உண்மையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணிக்கு தான் ஆபத்து! மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் இலாபத்திற்கு கடவுள் பெயரை ‘மிஸ்–யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள். இது தமிழ்நாடு, தந்தை பெரியார் உருவாக்கிய மண் – அண்ணா வளர்த்த மண் – கலைஞர் அவர்கள் மீட்ட மண் – தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்கள் உரிமையோடும் – பிற மதத்தினரோடு நல்லிணக்கத்தோடும் வாழுகின்ற மண் இது.
கடந்த 4 ஆண்டு காலத்தில், தமிழ்நாடு வரலாறு காணாத அளவிற்கு 3 ஆயிரம் கோயில்க ளுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்! அதேபோல், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவாலயங்களையும் – மசூதிகளையும் புனரமைக்க நிதி ஒதுக்கியிருக்கிறோம். இது தான் நம்முடைய திராவிட மாடல். இதை எல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்கின்றவர்களுக்கு பற்றிக் கொண்டு எரிகிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்குச் செய்த வளர்ச்சியைப்பற்றிப் பேச முடியவில்லை – ஓட்டு கேட்க முடியவில்லை – முடியாது. செய்திருந்தால்தான், சொல்ல முடியும்! அதனால் தான், இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கும் தி.மு.க. ஸ்கோர் செய்துவிட்டார்களே என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது., மீண்டும் சொல்கிறேன் – இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண்! பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண்! தலைவர் கலைஞர் அவர்களால், வளர்க்கப்பட்ட மண்! இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள்! அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்! அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள்… நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது! தமிழ்நாடும், தன்மான முள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தைப் புரிந்து, தமிழினத்திற்கு எதிரானவர்களுக்கும் – எதிரிகளுக்குத் துணை போகும் துரோகிகளுக்கும் – ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்!
நீங்கள் என்றைக்கும் எங்களுக்குத்
துணையாக இருக்க வேண்டும்!
உங்களுக்கு அரணாக என்றைக்கும் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எப்பொழுதும் இருப்போம்! இருப்போம்! அதேபோல, நீங்கள் என்றைக்கும் எங்களுக்குத்துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.