திருவண்ணாமலை, ஜூன் 26- போளூரை அடுத்த படவேடு சிறீரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் மேனாள் ராணுவ வீரா் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
உண்டியல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில் அமைந்துள்ளது சிறீரேணுகாம்பாள் கோயில். இந்தக் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் சிலம்பரசன் மற்றும் அலுவலா்கள் முன்னிலையில் 24.6.2025 அன்று காலை உண்டியல்கள் திறக்கப்பட்டு பணத்தை எண்ணும் பணி தொடங்கியது.
அப்போது, படவேடு கிராமத்தைச் சோ்ந்த மேனாள் ராணுவ வீரரான விஜயன் (60) என்ற பக்தா் தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தி, சொத்தை கோயில் பெயருக்கு எழுதித் தருவதாக குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது.
இதையறிந்த விஜயனின் மனைவியான அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை கஸ்தூரி (54) மற்றும் திருமணமான இரு மகள்கள் சுப்புலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோா் கோயிலுக்கு வந்து விஜயனிடம் சொத்தை தங்களது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டனா்.
ஆனால், விஜயன் இதற்கு மறுப்பு தெரிவித்து, கோயிலுக்குத்தான் சொத்தை எழுதிவைப்பேன் எனக் கூறிவிட்டார்.
இரு வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி எனக் கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக விஜயனும், கஸ்தூரியும் தனித்தனியாக வசித்து வருவதாகவும், விஜயன் கடந்த மாதம் 8ஆம் தேதி கோயிலுக்கு வந்து, சொத்து பத்திரங்களை உண்டியலில் செலுத்தியதும் தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் செயல் “அலுவலா் சிலம்பரசன் கூறியபோது, பத்திரம் உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவா்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.