வேலூர், ஜூன் 26- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி தாலுகா சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.
அந்த மனுவை, அங்கேயே மு.க.ஸ்டாலின் படித்து பார்த் தார். அப்போது அந்த மனுவில், தனக்கு 2 பெண் குழந்தைகள் இருந்து வரும் நிலையில் ஆதரவற்ற நிலையில் வறுமையில் இருப்பதாக அந்த பெண் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனது மாமனார் மாற்றுத்திறனாளி என்றும், கூலிவேலை செய்து அனைவரையும் காப்பாற்றி வருவதாகவும், தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்கவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
பொற்செல்வியின் ஏழ்மை நிலையை கருணையோடு பரிசீலித்த மு.க.ஸ்டாலின், அவரது மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ரூ.17 ஆயிரம் மாத ஊதியத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலராக நியமிக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, உடனடியாக பணி நியமன ஆணை தயாரிக்கப்பட்டு அந்த ஆணையை மு.க.ஸ்டாலின் பொற்செல்வியிடம் வழங்கினார்.
கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், அரசுப் பணிக்கான நியமன ஆணை கிடைத்ததால் பொற்செல்வி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்ட அவர், மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.