சென்னை, ஜூன் 26- விவசாயி களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, விவசாயிகளுக்கு மானிய விலையில் பம்பு செட் வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மின் மோட்டார்கள் குறைவான தண்ணீரை எடுப்பதால் பயிர்களுக்கு சரியான முறையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பழைய மின் மோட்டார்களால் மின் கட்டணமும் அதிகரிப்பதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.
இதனால் புதிய மின் மோட்டார் களை மாற்றுவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மானிய விலையில்
புதிய மின் மோட்டார்
தமிழ்நாட்டில் உள்ள பல விவசாயிகள் இன்னும் பழைய மின் மோட்டார்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஏற்படும் சிரமங்களை குறைக்க பம்பு செட்டுகளுக்கு புதிய மின் மோட்டார்கள் மானிய விலையில் வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் நேரம் மிச்சமாகி, மின்சாரக் கட்டணமும், அதன் தேவையும் குறையும் என்று கூறப்படுகிறது. புதிதாக கிணறுகளை தோண்டும் விவசாயிகளுக்கு புதிய மோட்டார் பம்பு செட் வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
அதிக மின் பயன்பாட்டை குறைப்பதும், குறைந்த செலவில் நீர்ப்பாசனத்தை அதிகப் படுத்துவதுமே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தின் மூலம் பழைய மின்மோட்டார்களை அகற்றி, புதிய மின் மோட்டார்களை மானிய விலையில் அமைத்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் பயன்பெற சிறு குறு விவசாயிகள் குறைந்தது அய்ந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது ரூபாய் 15,000 ரொக்கம் வழங்கப்படும். இந்த இரண்டில் எது குறைவானதோ அது விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும்.
ஆவணங்கள்
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் சிறு குறு விவசாயத்திற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், ஜாதி சான்றிதழ், சிட்டா, புதிய கிணற்றுக்கான அடிக்கல் மற்றும் புதிய மின்மோட்டார்க்கான விலை மதிப்பீட்டுத்தாள் (கொட்டேஷன்) போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். புதிய மின் மோட்டார்கள் தவிர சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப்புல் நறுக்கும் கருவிகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. இந்த ஆண்டில் 3000 சிறு குறு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் தீவன புல்லறுக்கும் கருவிகளை வழங்க முடிவு செய்துள்ளது.